எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 நவம்பர், 2009

மலர்கள்

இது ஒரு 1984 அக்டோபர் மாத
கல்லூரி டைரிக்குறிப்பு.....

இலைகளுக்கு இறைவன்
கொடுத்த குடைகள்...

பச்சை உடை அணிந்து
உடலை மறைத்து
செடி காட்டும் முகங்கள்...

நடக்கத்தெரியாத வெகுளி
மனிதர்கள் பிரசவித்த
சிரிப்புக் குழந்தைகள்...

காற்றுடன் சினேகம்
செய்து கொள்ளச்
செடிகள் பூத்த புன்முறுவல்கள்...

பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...

கரும்பச்சையில்
பூத்து நின்ற
ஜிகினா நட்சத்திரங்கள்...

சனி, 21 நவம்பர், 2009

பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்

நெஞ்சில் நிறைந்தவர்களும் நெஞ்சை எரிப்பவர்களும்

அன்பு சகோதரர் விஜய்யின்
(விஜய் கவிதைகள் )ஆணைக்கு
கட்டுப்பட்டு ......
(மிகத் தாமதமாக எழுதுவதற்கு
மன்னிக்கவும் விஜய்)

1. அரசியல்வாதிகள்

பிடித்தவர் :- இந்திரா காந்தி , ஜெயலலிதா
(மிசா. பொடா, தடா தாண்டியும் பிடிக்கிறது)
தன்னம்பிக்கையின் உருவங்கள் ...
என் இந்தியத் தாய்கள்.. அன்னை ..!அம்மா..!!!

பிடிக்காதவர் :- சுவாமி., தாக்கரேக்கள்..

2, நடிகர்கள்

பிடித்தவர் :- விக்ரம் , சூர்யா. மாதவன் ,
அர்விந்தசாமி., பசுபதி....

பிடிக்காதவர் :- யாரையும் புண்படுத்த
மனமில்லை

வெள்ளி, 20 நவம்பர், 2009

பரங்கிப்பூ

இரட்டைக் குவிக்கண்ணாடியும்
நடைப்பயிற்சி மின்சாதனமும்
இரத்த அழுத்தமும் இன்னா நாற்பதை
இடித்துரைக்க ...

பரம்பரையோ
உன் கைப்பக்குவமோ
அதிகம் உண்டு கொழுப்புமேற்றி ...

நெற்களஞ்சியத்திலிருந்து
நியூதில்லியின் கரோல்பாக்
கணப்பு வீட்டில்....

மார்கழியின் திருவையாறும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒலி ஒளி நாடாக்களில் கண்டு....

பகல் பத்தும் ராப்பத்தும்
வைகுண்ட ஏகாதசியும்
ஆனித்திருமஞ்சனமும் ஏக்கமெழ வைக்க..

பத்துவிரல் கோலத்தில் பூத்த
என் பரங்கிப்பூவே...
பப்ளிமாஸே....

வியாழன், 19 நவம்பர், 2009

ஜாதிப்பூ

நவதான்யங்களிலும் எள்முடிச்சிலும்
எலுமிச்சை விளக்கிலும்
கழிந்துகொண்டே இருக்கும்...

உன் இளமை வீணாய்....
நன்னீர் முகத்துவாரம்
கடலுள் அழிவது போல்... .

உன் அன்பு வார்த்தைகள்
என்னுள் கங்கின்
கதகதப்போடு...

சூரியனைப்போல்
தீராமல் எரிந்துகொண்டே
நான்...

பாம்புப்பிடாரனின் மகுடியாய்
உன் பார்வைகளிலும்
வார்த்தைகளிலும் மயங்கி...

நேசத்தின் இழைகள்
சரங்கொத்தியாய்
இன்பமாய் வலித்து...

விடுபடமுடியாமல்
உன் அன்பெனும் ஆணிக்குள்
அழுந்தி ரத்தச்சுகத்துடன்....

புதன், 18 நவம்பர், 2009

சரக்கொன்றைப்பூ

பார்வதி ஆயா வீட்டு முகப்பு
பாத்திர வாடகை நிலையமாய்
சரக்கொன்றை சாட்சி....

பிறந்து வளர்ந்து படித்து
உனைப் பார்க்கவென்றே
அபுதாபி வந்தது போல்...

அல் அய்னில் க்ரூஸரில்
அல் மராயின் லாபான் போல்
வெண்மஞ்சளில் வந்த
லெபனிய அழகே...

கிரிஸ்டல் பேலஸின்
ஷாண்டிலியர்கள் போல
ஜொலித்த கண்களுடன்...

துபாய் மாலின்
கேண்டிலைட்டின்
அல்ப்ரோஸாய்...

புர்ஜ் அல் அராபின்
கலங்கரை விளக்கமாய் நீ
இசை நீரூற்றாய் நான்...
உன்னை எட்ட...

செவ்வாய், 17 நவம்பர், 2009

டிசம்பர் பூ

நொடிக்கு நூறு முகம்
காட்டும் என் ஆசை
இந்திராணி....

கண்கள்வழி பிடிபட்டேனே
மத்திய சிறையா அது...
வெளியேறமுடியாமல்
ஆயுள் கைதியாய்....

மயங்கினாயா
மயங்குவதுபோல்
மயக்கினாயா....

நீ தட்டெழுத்தால் எனைத்தட்ட
நான் சுருக்கெழுத்துக் கூட
சுருக்காய் எழுதி...

உனைக் காணும்
ஒரு நொடி கூட
வீணாக்க விரும்பாமல்....

ஜிஆர் ஈ வகுப்புக்கும்
கணினி பயிற்சிக்கும்
சென்றுவரும் நாம்...

திங்கள், 16 நவம்பர், 2009

கினியா பூ

வான் ஹ்யுஸைனின்
ஸூட்டணிந்த
வயலட் லேடி...

காப்பர்கலர் ஹேர்ஸ்ட்ரீக்கிங்கும்
ஏரோபிக்ஸும் யோகாவும் செய்யும்
மெல்லிய தேவதையே...

ப்ரூட் மீல்ஸும் சாலட்ஸும்
ஸாண்விச்சும் உண்டு உடம்பை
ஸ்லீக்காக வைத்திருக்கும்...

மேடம் டூஸாட்டின்
மெழுகுச் சிலையே.....
மிட்டலின் பெண்ணுருவே....
என் மேலதிகாரியே..

நிர்வகத்திறமையில் நீ
இந்திரா நூயிக்கும் மேலே...
உன் பிஏவாய் நான்
ஒவ்வொரு தருணத்திலும் வியந்து...

ஆட்சி மாறினாலும்
பங்குச்சந்தை சரிந்தாலும்
நெருக்கடிநிலையே பிரகடனம் ஆனாலும்
நெஞ்சுறுதியுடன் புன்னகைப்பாயே....

ஞாயிறு, 15 நவம்பர், 2009

தும்பைப்பூ

கடலில் மூழ்கிய
கப்பலாய் சென்னை...
மழையில் ராயவரம்
குடிசைகள் தெப்பமாய்...

ஆலை ஊருக்குள்
தும்பைப்பூ வேஷ்டி செய்யும்
தினக் கூலியாயிருந்து ...
வேலையிழந்து...

ரிக்ஷாக்காரனாய்.
மீன்பாடிவண்டி ஓட்டியாய்
திருவல்லிக்கேணியில்...

நியானோ சோடியமோ
ஒளிவீச என்னுடன்
சேர்த்துக்கொண்ட
என் கறுத்த உதட்டழகி ...
கன்னத்து மருவழகி...

காடுகளில் முளைத்துக்
கிடக்கும் தும்பைப்பூவாய்
என் மார்பில் மகன் ...
சிறுகோழிக்குஞ்சாய்...

வெள்ளி, 13 நவம்பர், 2009

வாழைப் பூ

கீரைக்காரியின் கூவலில்
மிதந்து வந்தது
வாழைப்பூ..

மாடியில் இருந்து
கூடையைக் கீழிறக்கி
பூ வாங்கிய பூவை...

சாம்பல் புறா நீ...
சாண்டில்யனின்
ராஜபேரிகை...

என் நெஞ்சம் அதிர அதிர
மறுபடி மறுபடி பார்த்தேன்..
என் இதயம் இயங்குவதை
உறுதி செய்ய...

கின்னஸில் பதியலாம்
உலகின் அதிவேக பம்ப் என
என் இதயத்தை...

கிண்ணம் வழி
என் வீட்டில்
உன் உசிலி
என் தட்டில்...

வியாழன், 12 நவம்பர், 2009

அனிச்ச மலர்

என் ஆன்மாவின் கர்ப்பமே ..
நான் சூலுறாத சொர்க்கமே.. .
என் இள உருவின் பேரழகே...
என் மகளே.. என் தாயே ..

மகரந்தச் சேர்க்கையின்
போதே அறிந்தேன் ..
நீ சூல்கொண்டதை
தேனே.. என் தெய்வமே..

உனக்குச் சோறூட்டிப்பசியாறி
நீ தூங்கி நான் விழித்து ..
திரிசங்கு சொர்க்கத்தில் நான்.. .

உனக்கு வரும் நோயெல்லாம்
பாபர் போல்
எனக்கு வேண்டி...

பென்டெனிலிருந்து பிஎஸ்பி வரை
உன்னோடு களித்திருந்து ...
விழிப்பும் கனவும் அற்ற பேருலகில்..

நீ பள்ளி செல்ல
நான் அழுத கதை
ஊரறியும்...

புதன், 11 நவம்பர், 2009

புங்கைப் பூ

அட்சரேகை தீர்க்கரேகை போல்
உன் முகத்தில்
வெட்க ரேகை... .

பேசாமடந்தையாய் நீ..
விக்கிரமாதித்தனாய் நான்..
திரைச்சீலைதான் பாக்கி ..

போர்ப்பகுதியில்
ராபர்ட் யங் பெல்டன் போல்
உன் கண்ணால் சுடப்படும்
அபாயத்தில் உன்னருகே...

நீ ஹெலனா எரிமலையா
கத்ரீனா புயலா ...
என்னை என்ன செய்யப்
போகிறாய் அன்பே...

செவ்வாய்ச் சாமி
கும்பிடும் நீ..
செவ்வாய்க்காரனான
என்னை ஒதுக்கி....

புங்கைப் பூவும்
புளிய இலையும்
கோலமாவும்
தேங்காய் நாரும்...

திங்கள், 9 நவம்பர், 2009

கருங்குவளை

ஹிஜரப் அணிந்த
ஹாஸல்நட்டே ...
வான் ஹூட்டனே..

கண்ணாடிக்குடுவைக்குள்
கருமணல் ஒட்டகம் போல் ..
அல்மஜாஸின் கார்னிஷில்
அழகாய் வந்தாய்.. .

நாவல்பழக்கண்ணே..
என் நைஜீரிய பெண்ணே..
கருநிற மோஹினியே..
ப்ரபஞ்சத்தின் கருந்துளையே..
எனைக் கண்களால் விழுங்க..

கட்டுறுதியான இரும்பை
உடுத்த க்ரானைட் போல
பளபள தேகம்..

கருந்திராட்சை ரஸத்தைக்
கண்களில் ஊற்றி
பெல்லி டான்ஸைவிட
போதை ஏற்றினாய்..

சக்கரவியூகத்து
அபிமன்யுவாய் உன்
பார்வைக்குள் நான்...

வெள்ளி, 6 நவம்பர், 2009

தொடர் இடுகை

நண்பர் ராகவன் நைஜீரியா கணக்குப் பிரிவு
மேலாளராக இருக்கிறார்.. அவர் ஒரு தொடர்
இடுகைக்கு அழைத்து இருக்கிறார் ...
நட்பு கொண்ட நல்லவருக்காக இந்த இடுகை ...

1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு:-
இல்லத்தரசி ..
இரு பையன்கள்..
இந்தியாவுக்குள் கணவர் பணி நிமித்தம்
10 .,12 ஊர்களில் இருந்திருக்கிறோம்..

2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு
வரும் (மறக்க முடியாத) சம்பவம் எது ?
1977 தீபாவளி என் அப்பா திருப்பதியில்
மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு
மீண்டு வந்தது ...
மற்றும் தமிழ் வாணன் மறைவு..
(நான் ஐந்தாவது படிக்கும் போதே கல்கண்டு
ரசிகை .. )

3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள் ?
ஷார்ஜாவில் என் சின்னத்தம்பி வீட்டில் ..
என் தம்பி மெய்யப்பன் தங்கக் கம்பி..
அவன் மனைவியும் அப்படியே....

மரமல்லி

மூடி மூடித் தூறும்
மழையாய் முகிழ்ந்துகொண்டே
இருந்தது காதல்....

பருகப் பருகத் தீராமல்
வழிந்துகொண்டே இருந்தது
உன் விழிவழி அமிழ்தம்....

காதலுடன்
புன்னகைக்கிறாயா
கருணை சிந்துகிறாயா...

ஒவ்வொரு ஈராவிலும்
உனைக் கண்டு பிடிக்கிறேன்
டார்வினிஸப் பரிணாமம்....

உருவாய் அருவாய்
இருந்திலாத நிலையிலும்
உனை உணர்ந்து....

அசரீரியைப் போல
அவ்வப்போது
வாய்ஸ் மெஸேஜிலும்...

ஒலித்துக்கொண்டே
இருக்கிறாய்
உன் காதலை...

வியாழன், 5 நவம்பர், 2009

சப்பாத்திக் கள்ளிப்பூ

எனக்குப் பகையில்லை
எந்த மாநிலத்தோடும்
எந்த நதியோடும்....

யாவரும் கேளீர்...
தண்ணீரின்மையிலும்
தளிர்த்துக் கிடப்பேன்...

வேலியோரம்...
காய்ந்த வாய்க்காலோரம்...
தோட்டத்து எல்லைகளில்...
இயற்கை அரணாய்...

வேலிக்காத்தான்., முள்முருங்கை,
கருவேலம்., பிரண்டை,
சோற்றுக்கற்றாழையுடன்
காக்டஸாய் நானும்....

விரல் நக அளவில்
வெங்காயக் கலரில்
வாடாமல் நான்
பூத்துக் கிடப்பேன்...

மழையோ, வெய்யிலோ,
சூறாவளியோ
சூறாடுவதில்லை
என்னை எதுவும்...

புதன், 4 நவம்பர், 2009

மயில் மாணிக்கம்

கண்கள் இரண்டும்
பளபள கன்னங்களும் இணைந்து
பட்டாம் பூச்சியானதொரு முகம்...

சிறகடிக்கும் தேன்சிட்டு
செம்பிள மேனி
செந்நிறத் தும்பி...

காமட்டின் வால் போல்
குழந்தைகள் அவள் பின்...
ராணித்தேனி....

ஓராவின் ஒளிப்பிழம்பு
வெள்ளிக் கிழங்கு
பாலிவினைல் வழுமை...

கண்கள் இரண்டும்
ஐஸ்க்ரீமில் விழுந்த
ரஸ்மலாய் போலும்
குலோப் ஜாமூன் போலும்...

பப்பேயில்
பார்வைகளின் சாணையில்
அவள் இன்னும் மெருகேறி...

செவ்வாய், 3 நவம்பர், 2009

கல் வாழைப்பூ

வாசலோடும் ஜன்னலோடும்
மட்டுமே நான் ..
வாகைசூடி அணிய அல்ல....

செங்கொற்றக்கோல் போல்
செம்மையாய் உயரமாய்
இருந்தாலும்...

அகநானூறில் நீ யாரோடோ கூட
உன் புறநானூறுக்கான
பெருமை நான் ...

பரணியோடும்
புலவர்களோடும்
வீரத்தழும்புகளோடும் நீ...

மஹாராணிகளோடு
மஞ்சத்தில் நீயிருக்க உன்
சேடிப்பெண்ணாய் நான்....

இதயப் பாதக்குறடு உனக்காய்...
ஆனால் என் வாசம்
உன் வாசலில்....

ஞாயிறு, 1 நவம்பர், 2009

நாகலிங்கப்பூ

பங்களா தோட்டத்தில்
பூத்து இருந்தது
மரத்தில் அங்கங்கே
நாகங்கள் போல்...

சிறுவயது வியப்பு ..
செறிந்த மகரந்தங்களின்
காவலாய் ஒரு குடை
மழைத்தடுப்பாய்...

மலைப்பாம்பு சுற்றியதான
மணிப்பிளாண்ட் போல்...
மழையில் பூத்த
மரக்காளான்களும் குடையுடன்...

சிவன் சூடுவதா
மன்மதனின் அடையாளமா
பார்த்தால் பரமபதப் பாம்பு...

மேலே ஏற ஏற
உன்னைக் கீழிறக்கிக்
கொண்டு இருக்கிறது
அதன் கடிவாய்..
Related Posts Plugin for WordPress, Blogger...