எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பனிப்பறவைகள்.

பனிப்பறவைகள்:-
**********************************
“வான ராஜ்ஜியத்தில்
ஒளியரசனை வரவேற்கக் காத்திருக்கும்
வைகறைத் தாரகையே
தனிமை உனக்கு மட்டும் உரிமையல்ல.
அதன் பங்குதாரி நானும்தான். “

என்று தன் டயரியில் எழுதி மூடிவைத்தாள் பவித்ரா, அம்மா நாலாவது தடவையாக “ பவித்ரா. இங்கே வாயேன்.” என்று அழைத்துக் கொண்டிருந்தாள். அடுத்த தடவை கூப்பிடாமல் நேராக ஹாலுக்கு வந்துவிட்டாள்.

வரும்போதே எண்ணெய்ச் சட்டியில் போட்ட கடுகு போல படபடவென்று பொரிந்து தள்ளிக்கொண்டே வந்தாள். “ பெண் பிள்ளைன்னா எல்லாம் தானாத் தெரியணும். ஏதாடா அம்மா ஒத்தையா கஷ்டப்படுறாளே அவளுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவோம் இல்லைன்னா பேங்கில் போய் பணம் எடுத்துக் கொண்டு வருவோம். ஒண்ணும் தெரியாது. என்னவோ எந்நேரம் பார்த்தாலும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் வைச்சுக்கிட்டு இராவும் பகலும் விடியக்காலைலயும் நட்சத்திரத்தையும் பறவைக்கூட்டத்தையும் மரத்தையும் மட்டையையும் பார்த்து என்ன எழுத வேண்டிக் கிடக்குங்குறேன்.  சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப்புடுவம்னாலும் ஒருத்தன் அகப்பட மாட்டேங்குறான்.



சிரிக்கிறையாடி, என் கோவத்தைப் பார்த்த உனக்குச் சிரிப்பாவா இருக்கு. எவன்கிட்டக்கப் போயி ஒதைவாங்கப் போறியோ.ஹூம்,. இவளோட சேர்ந்து மாரடிக்க என்னைத் தனியா விட்டுட்டு அவர் பாட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டார் மகராஜன் “ என்று ஆத்திரமாகக் கோபத்தில் ஆரம்பித்து இயலாமையில் கொண்டு வந்து முகாரியில் முடித்து வைத்தாள்.

பவித்ரா எப்போதும் இப்படித்தான். அம்மா எவ்வளவு கோபித்தாலும் புன்னகைதான் அவள் பதில். அம்மா தன் ஆற்றாமை பொறுக்க முடியாமல் குதி குதியென்று குதித்துவிட்டுப் பின் கொஞ்சுவாள். அப்பா போனபின்பு இப்படித்தான் மாறிவிட்டாள்.

அவளது பூர்வீகம் மதுரைதான். ஐந்து வயதாக இருந்தபோது கண்டியில் அவள் அப்பா இரயில்வேயில் ஆஃபீசராகச் சேர்ந்தார். இனக்கலவரம் திடீரென்று மூண்டுவிடவில்லை. பூசல்கள், உரசல்கள் இருந்துகொண்டேதான் இருந்தன. உச்சக்கட்டத்தில்தான் தமிழ்க்குடும்பங்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டன. தமிழ் வாலிபர்கள் சுடப்பட்டு அக்கினிதேவனுக்கு அவியுணவு ஆக்கப்பட்டனர். இளம்பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர்.

இந்தச் சமயத்தில் பவித்ராவின் வீடும் விடப்படவில்லை. பவித்ரா இப்போது இருபத்திமூன்று வயது இளம்பெண். அன்புள்ளம் கொண்ட சில சிங்கள நண்பர்கள் தம் வீட்டில் இடம்கொடுத்தனர். இரவில் கள்ளத்தோணியில் அவர்கள் இந்தியா வந்து சேர்ந்தார்கள். கலவரத்தில் குண்டு பட்டு கடுமையாக அடிபட்ட அவள் அப்பா அன்றிரவே இந்திய எல்லையை சமீபித்ததும் இறந்துவிட்டார்.

இந்தியாவில் பண்ணையாரானா பவித்ராவின் தாத்தா விட்டுச் சென்ற சிறுவீடும், பாங்கியில் கொஞ்சம் சேமிப்புப் பணமுமே மிஞ்சியிருந்தன. இவை பங்காளிகள் பங்குபோட்ட பின்பு எஞ்சியவை.

வித்ரா ரொம்ப உற்சாகமாகத் தெரிந்தாள். அவள் அத்தை பையன் மெட்ராசில் எம் காம் படித்துக் கொண்டிருக்கும் ராஜேஷும் அத்தையும் இன்று வருகிறார்கள். அம்மா கூட சிரித்துச் சிரித்துப் பேசினாள். ராஜேஷ் ரொம்ப மாறித் தெரிந்தான். கலகலவென்று முன்பு போலப் பேசவில்லை. பவித்ரா பக்கம் திரும்பக் கூட இல்லை. இலட்சியமே செய்யவில்லை. அவனுடைய செய்கைகளால் பவித்ரா ரொம்பவும் புண்பட்டுத்தான் போனாள்.

இராத்திரி சாப்பிட்டு முடிந்ததும் மொட்டை மாடிக்கு போய் மேல் படியில் அமர்ந்து வானத்தைப் பார்த்ததும் இன்று அமாவாசை என்பது நினைவுக்கு வந்தது.

இருளில் அமர்ந்திருந்ததால் இவளைக் கவனிக்கவில்லை அத்தையும் ராஜேஷும். மெதுவாக அத்தை குசுகுசுவென்று பேச ராஜேஷ்.,” என்னம்மா நீ பவித்ராவைப் போய்க் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றே. இலங்கைக் கலவரத்திலேருந்து இவங்க தப்பி வந்திருக்காங்க. ஆனா கலவரத்துல என்ன நடந்ததுன்னு உன்னால சொல்ல முடியுமா. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டாங்களாம்.

பவித்ராவும் இளம்பெண்தானே. அவ கற்புள்ளவள்னு உறுதியா சொல்ல முடியுமா நான் அவளைப் பண்ணிக்க மாட்டேன். அவ்வளவுதான். ஆளை விடு.. “ என்று கூறிவிட்டுப் படியின் பக்கம் வந்தான். விக்கித்துப் போன பவித்ரா சத்தமில்லாமல் வேகமாக கீழிறங்கினாள். மறுநாள் அதிகாலை ஊருக்குச் செல்ல தன் துணிகளை எடுத்துப் பாக் செய்யத் துவங்கினான் ராஜேஷ்..

அம்மா அடுக்களையில் இருந்ததால் கேட்கவில்லை. மனம் என் மேல் சந்தேகமா.. என்று குமுறியது.

றுநாள் காலை அம்மா வயிற்றிலடித்துக் கொண்டு அழுதுபுரண்டாள். பவித்ரா பஸ்பமாகித் தன் பவித்திரத்தை நிரூபித்து விட்டாள். அடுக்களை ஜன்னலில் இருந்த டயரியை மெதுவாக ராஜேஷின் கரங்கள் நடுக்கத்துடன் பிரிக்க அதில் முதல்நாள் தேதியிட்ட கவிதை ஒன்று இருந்தது.

ஒரு சாம்பற்பூவின் சரிதம்:-
********************************************
திசையறியாமல் தடுமாறியதால்
தடம் மாறியதென்று சந்தேகிப்பப்பட்ட
பனிப்பறவை
தன் வானத்தில் நிலவை எதிர்பார்த்தது.
ஆனால் புன்னகைப் பூப்பொரிக்க வந்தவை
அக்கினி நட்சத்திரங்களே
என்றறிந்ததும் சாம்பற் பூவாய்ச் சிதறிவிட்டது. 


டிஸ்கி :- ‘84 ஆம் வருட டைரியிலிருந்து. 


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...