எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 பிப்ரவரி, 2015

உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.



உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி

தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.

தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல் ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.

அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள் இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து  ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார்.  ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய் சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர். அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள்  இன்னபிற கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு, கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான அனுபவம்.


அங்கே இருந்த க்ரீனரி பப்ளிக் ஸ்கூலில் எங்கள் சின்னப் பையன் படித்துக் கொண்டிருந்தான். அரைநாள்தான் பள்ளிக்கூடம். அவனைப் பள்ளியில் காலை கணவர் விட்டுவிட்டுச் சென்றுவிடுவார். மதியம் அழைக்க நாங்கள் செல்வோம்.

நாங்கள் என்றால் மூன்று தோழிகள் நான், மல்லிகாம்மா, மீனாம்மா ஆகியோர் செல்வோம். டி பி குப்தா ரோட்டில் இருக்கும் அந்தப் பள்ளியின் அருகேதான் அஜ்மல்கான் ரோடு. ஷாப்பிங்க் ஏரியா. அங்கே விர்மானி பாத்திரக்கடைக்கு அருகில் ட்ரைஃபுரூட்ஸ் & நட்ஸ் கடைகளும் பானி பூரி கடைகளும் இருக்கும்.

மாலை நேரத்தில் இந்த பானி பூரி கடைகளில் உடைத்த பூரியில் வெறும் பானியை வாங்கி லபக் லபக்கென்று விழுங்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் நமக்கு அந்தப் பானி பிடிப்பதில்லை. ஆனால் அது கொண்டைக்கடலை வேகவைத்த சத்துநீர். கறுப்பு நிறத்தில் ஏதோ அழுக்குத்தண்ணீர் போல பார்க்கவே சந்தேகத்துக்கிடமாக இருக்கும் அதை கோட் டை அணிந்த பலரும் விரும்பி ருசிப்பார்கள்.

அங்கே கஃபார் மார்க்கெட்டில் விற்கும் சோளா பட்டூரா செம ருசியாக இருக்கும். ஷாப்பிங் செய்துவிட்டு சாப்பிடப்போனால் இந்தக்கடை ஒரு முட்டுச் சந்தில்தான் இருக்கிறது. அந்தத் தெரு முழுக்க சாயக் கடைகள் உல்லனிலிருந்து பட்டுவரைக்கும் சாயம் தோய்த்துக் கொடுப்பார்கள். கடை வாசலிலேயே சாயத்தைத் தோய்த்து குச்சியால் பிடித்தபடி மடித்து மடித்து பார்டர் நனையாமல் சாயம் தோய்த்துப் பிழிவார்கள்.

அப்பிடிக்கா போய் ஒரு புடவையையோ ஷாலையோ சாயம் போடக் கொடுத்துவிட்டு இந்த சோளா பட்டுரா கடைக்குப் போனால் ஒரே கூட்டமாக இருக்கும்.

மைதாவில் தயிர் ஈஸ்ட் போட்டுப் பிசைந்து மூடி வெய்யிலில் லேசாகப் புளிக்கவைத்த மாவைக் கையாலேயே உருட்டி பூரி போலத் தட்டிக் காயும் எண்ணெயில் போட்டுப் புஸ்ஸென்று பொரித்துத் தருகிறார்கள். அதுக்காக நம்மூரி பூரி மாதிரி இது உப்பாது. பேருதான் பட்டூரா ஆனா கனமான வெள்ளை சப்பாத்திபோல அங்கங்கே உப்பி மெத்தென்று இருக்கும். லேசா ரப்பர் மாதிரியும் இருக்கும். இங்கே சீசன் சமயங்களில் பச்சைக் கொண்டைக்கடலை மசாலா இருக்கும். சீரகம் இஞ்சி வெங்காயம் தக்காளி ஆம்சூர், கரம்மசாலா சேர்த்தது. இங்கே அதிகம் பூண்டு சேர்ப்பதில்லை. இதுதான் உண்மையான சோளா மசாலா. இத்தோடு மாங்காய் ஊறுகாய், வெள்ளரி தக்காளி வெங்காயத்துண்டுகளைப் பெரிதாக வெட்டித் தருகிறார்கள். ஒருவருக்கு ஒரு செட் பட்டூரா போதும். ருசியாகத்தான் இருக்கும் என்றாலும் அதுக்கு மேல அந்த ரப்பரைச் சாப்பிட முடியாது. பல்லும் வலிக்கும்.

அப்பிடிக்கா திரும்பி வெளியே வந்தா அங்கே குல்ஃபி விற்றுக் கொண்டிருப்பார்கள். குல்ஃபி என்பது நம்மூரு பால் ஐஸ் சைஸில்தான் இருக்கும். முழுக்க முழுக்க மில்க்மெய்டில் செய்தது போன்ற சுவை. இதிலும் இரண்டு விதம் ஒன்று ப்ளெயின் குல்ஃபி விலை கம்மி அதன் முனையில் சும்மா 4 முந்திரிப்பருப்புத்தான் இருக்கும். இன்னொண்ணு கொஞ்சம் விலை கூட அதில் முழுதும் முந்திரி பாதாம் இருக்கும். சாப்பிட சாப்பிட கூலாய் நெஞ்சாங்கூடு வரை தொட்டுத் தழுவும். அம்புட்டு ருசி. ருசியா இருக்கேன்னு இன்னொன்னு சாப்பிட்டோம்னா அதிகமில்லை, ஒரே நாளில் ரெண்டுகிலோ வெயிட் போட்டுடுவோம்.

அங்கேயிருந்து நகர்ந்து ட்ரைஃப்ரூட்ஸ் நட்ஸ் வாங்கிகிட்டு அகர்வால் ஸ்வீட்ஸ் போனோம்னா அங்கே பேணி ஸ்பெஷல் பாலில் போட்டு சாப்பிடலாம். இன்னும் பலவிதமான நெய் ஸ்வீட்டு வகைகள் இருந்தாலும் வெளியே விற்கும் பலூடா அருமையா இருக்கும். சேமியாவை வேகவைத்துப் பானையில் போட்டு இருப்பார்கள். நாம் பலூடா கேட்டதும் ஐஸ் கதைதான். ஒரு க்ளாஸ் எடுத்து அதில் பானையிலிருக்கும் சேமியாவை ஒரு கைப்பிடி அள்ளிப் போட்டு எல்லா எசன்ஸும் ஊத்தி ஐஸ்க்ரீம் போட்டு அதுமேலே கொஞ்சம் ஐஸ்கட்டி போட்டு மேலே சில பருப்புகளையும் தூவி ஒரு குச்சி போட்டுக் கொடுப்பார்கள். அந்தக் குச்சியால் சேமியாவை எடுத்துத் தின்ன முடிந்தால் அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் லேசாக சாய்த்துக் கைவிட்டுத் தின்ன வேண்டியதுதான்.

ரோடுகளில் தள்ளுவண்டிகளில் மிகப்பெரிய சைஸ் தோசைக்கல்லில் பழங்களை வெட்டி துண்டுகளாக்கி வேகவைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மாதிரி டால்டாவும் இனிப்பும் கலந்த வாசனை. சிலருக்குப் பிடிக்கும் நமக்கு ஒரு அசட்டுத் தித்திப்பை டால்டா குமட்டலோடு சாப்பிடுவது போல இருக்கும். வெந்த பழம் ஒரு மாதிரி கொழ கொழவென்று ஞானப் பழம்போல சாப்பிடக் கஷ்டம். அதுக்கு சும்மாவே பழமாகச் சாப்பிடலாம்.

குளிர்காலங்களில் ரோடுகளில் ஆம்லெட்டும், பச்சை முள்ளங்கியும், சாத்துக்குடிச்சாறும், சுட்ட சோளக்கருதும் தந்தூரியில் சுட்ட கோழியும் தந்தூரி ரொட்டியும் கிடைக்கும்.

பகல் நேரங்களில் பச்சை முள்ளங்கி வண்டி வரும். அதில் இலையோடு கூடிய முள்ளங்கியை எடுத்துத் தோல்சீவி அதை நான்காகக் கீறி உள்ளே காலா நமக்கும் எலுமிச்சையும் கலந்து கொடுப்பார்கள். ஒரு மாதிரி உறைப்பாக இருக்கும். ஆனால் இதை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வராது என பச்சை முள்ளங்கியை அங்கே இருக்கும் அனைவரும் சாப்பிடுவார்கள். நல்லதுதானே என்று உறைப்பைப் பொறுத்துக் கொண்டு ஓரிரு முறை சாப்பிட்டதுண்டு. ஆனால் இங்கே ரொட்டிக்கே பச்சை வெங்காயம் பச்சை முள்ளங்கியை சைட் டிஷ்ஷாக சாப்பிடுகிறார்கள்.

தள்ளுவண்டிகளில் சின்ன சைஸ் சாத்துக்குடி 4 ஐ எடுத்துப் பிழிந்து ராக் சால்ட், ஜல்ஜீரா போட்டுக் கொடுப்பார்கள். இதெலாம் தாக சாந்தி. குடித்தால் கொஞ்சம் வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பலாம். சாயங்காலங்களில் சோளக்கருது வண்டி வரும். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் சோளத்தை உரித்துத் தணலில் சுட்டு கறுப்பு உப்பும் எலுமிச்சையும் உரசிக் கொடுப்பாங்க. சோளக்கருது படபடவென்று தணலில் வெடிக்கும் அழகே அழகு. அசைவம் பிடித்த வெளிநாட்டுக்காரர்கள் அதை தேர்ந்தெடுத்துக் கொடுத்து சுட்டுத்தரச்சொல்லிச் சாப்பிடுவதைப் போன்றது இது. என்ன லேசா பல் எல்லாம் கறுப்பு கறுப்பாக திப்பியாக ஒட்டிக் கொள்ளும். ஒரு தரம் பல்லு தேச்சுக்கவேண்டியதுதான்.

இரவுநேரம் தெருமுனைகளில் தள்ளுவண்டிகளில் ஆம்லெட் போட்டு விற்பார்கள். சாயங்காலங்களிலிலிருந்தே தந்தூரிக் கடைகள் களைகட்ட ஆரம்பித்துவிடும். தந்தூரி ரொட்டி, தந்தூரி சிக்கன் மசாலா என மணம் பரப்பத்துவங்கிவிடும் கரோல்பாக் ஏரியா. கோழிகளை உரித்து மசாலா தடவி உப்புக் கண்டம்போலக் கயிறுகளில் கட்டி ஓவனில், க்ரில்லில் அவை சுற்றிக் கொண்டிருப்பது ரோட்டின் எந்த முக்கில் வந்தாலும் கடையின் கண்ணாடிக் கதவு வழியாகத் தெரியும். 

நம்கீன் பண்டார் என்பது காரசார வகைகள் விற்கும் கடைக்குப் பெயர். இங்கே ஆலு புஜியா, ( உருளைக்கிழங்கு ஓமப்பொடி) மூங்க்தால் ( வறுத்த பாசிப்பயறு ),, இன்னும் ஓமம் சேர்த்த, சீரகம் சேர்த்த பலகாரவகைகள் வாங்கலாம். இது எல்லாமே பிடிப்பது அவரவர் ருசி சம்பந்தப்பட்ட விஷயம்.  

மட்டி என்றொரு ஐட்டம் உண்டு. அது மைதாவில் டால்டா போட்டுப் பிசைந்து உருண்டையாக உருட்டி லேசாகத் தட்டி வேகவைத்து எடுத்திருப்பார்கள். அதில் உப்புகூட இருக்காது. ஆனால் டீக்கு பக்கபதார்த்தமாக அதை சாப்பிடுகிறார்கள். நமக்கு டால்டா நாக்கில் உருண்டு கொண்டிருப்பதைப் போலிருக்கும். அதே போல் ப்ளெயின் பராத்தா என்று காலங்கார்த்தாலே ஒரு ஐட்டம். அதாவது சப்பாத்தி மாவை நன்கு பிசைந்து மாவும் எண்ணெயும் மடித்து மடித்துத் தேய்த்து சப்பாத்திக் கல்லில் போட்டு எடுப்பார்கள். அதுவும் டீயுடன் சாப்பிட. அதாவது பரோட்டா ஒரு வாய் கடித்துச் சாப்பிட்டு விட்டு டீயைக் குடிப்பது அவர்கள் வழக்கம்.

சின்னப்பையனின் பள்ளிக்கு அருகிலேயே ஜண்டேவாலன் மந்திர் என்றொரு கோயில் உண்டு. அங்கே தினம் போக முடியாவிட்டாலும் வெள்ளிக் கிழமைகளில் மூன்று தோழிகளும் போவோம். பன்னிரெண்டு மணிக்கு ஹாரத்தி இருக்கும். சுமார் பத்தரைக்கு நடக்க ஆரம்பித்தால் பதினொன்றரைக்குக் கோயிலுக்குப் போகலாம். இல்லாவிட்டால் பஸ்ஸில் 3 ஸ்டாப்தான். பதினோரு மணிக்கு டவுன்பஸ் பிடித்தால் அஜ்மல்கான் ரோடு தாண்டி அடுத்த ஸ்டாப்பில் இறங்கி இடதுபுறம் நடந்தால் கோயில் வந்து விடும். சில சமயம் நவராத்திரி என்றால் கூட்டமான கூட்டமிருக்கும் . அங்கே இரண்டு நவராத்திரிகள் உண்டு. சாரதா நவராத்திரி வஸந்த நவராத்திரி என்று. எனவே க்யூவில் நின்று போனால் கரெக்டாக பன்னிரெண்டு மணியளவில் ஹாரத்திப் பாடலோடு அம்மனைத் தரிசிக்கலாம்.

ஜண்டேவாலன் மந்திர் என்பது வெள்ளைக்காரர் காலத்தில் நம் சுதந்திரக் கொடியேற்றி வணங்கவென்று ஜண்டேவாலி மா என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட கோயில் என்று அங்கே செட்டிலாகி இருந்த இன்னொரு தோழி ( செண்ட்ரல் பாங்கில் பணிபுரிந்துவந்தார் அவர் கணவர். ) சொன்னார். அவரின் இரட்டைப் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகளுடன்தான் படித்து வந்தார்கள்.

முதல் முறை இந்த மாதிரிக் கிளம்பும்போது நேரமாகிவிட்டபடியால் வீட்டில் வேலை எல்லாம் முடித்துக் கிளம்பி டிபன் சாப்பிடாமல் காஃபி மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன். உச்சி வெய்யில். நல்ல கிறக்கம். லேசாகத் தலை வலிப்பது போலிருந்தது. பேருந்தையும் காணோம். நடக்கத் துவங்கிவிட்டேன். தோழிகள் மூவரும் வெவ்வேறு தெருக்களில் இருந்ததால் அவர்கள் தெருவழியாகச் சென்றால் ஒன்றாகச் செல்வோம். அல்லது தனித்துச் சென்று கோயிலில் சந்தித்துக் கொள்வோம்.

ஒரு வழியாக வழி கேட்டு கொதிக்கும் வெய்யில் தலையிலிறங்கி நல்ல தலைவலியுடன் கோயிலைச் சென்று சேர்ந்தேன். அங்கே தோழிகளைப் பார்த்ததும் ஆசுவாசம். அர்ச்சக் நிவாஸ், த்யான் மண்டப் என்று நல்ல பெரிய கோயில். அங்கே  கருவறையில் ஜண்டேவாலி மா வின் இரு பக்கமும் சரஸ்வதியும் காளியும் கொலுவிருக்கிறார்கள். நம்மூரு மாதிரி பிசுபிசுப்பெல்லாம் கிடையாது. வெள்ளை சலவைக்கல் கோயில் தண்ணென்றிருந்தது. தேவியின் ஹாரத்தி பாடலோடு பூஜை முடிந்ததும் யாரோ ஒருவர் வேண்டுதலின் படி பூரியும் அதில் கேசரியும் வைத்துக் கொடுத்தார்கள். ஆளுக்கு இரண்டு பூரி அதன் நடுவில் சூஜி . பக்கத்தில் இருந்தவர்களிடம் அது என்ன என்று கேட்டோம். பூடி, சூஜி என்றார்கள். பூரிக்குப் பெயர் பூடி, கேசரிக்குப் பெயர் சூஜி – வெள்ளை ரவையின் இந்திப்பெயர் சூஜி. !

நாம் கிழங்கு வைத்தோ குருமா வைத்தோ சாப்பிடுவோம். அங்கே பூரியை வாங்கிக் கொண்ட பக்தர்கள் பூரியைப் பிய்த்து சூஜியில் தொட்டுச் சாப்பிட்டார்கள். நாமும் அதையே பின்பற்றினோம். ஒரு மாதிரி வித்யாசமாக இருந்தது. பின்பு அங்கே பைப்படியில் கை கழுவிவிட்டு வெளியே வந்தால் அங்கே பாக்குமட்டைத் தொன்னையில் பிரசாதமென்று சொல்லிக் கோயில் சார்பில் கிச்சடி கொடுத்தார்கள். அது என்ன கிச்சடி என்றால் ரவா கிச்சடி அல்ல. அது வேகவைத்துத் துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கோடு பாசிப்பயறுக் குழம்பை கரம்மசாலா போட்டு பச்சரிசிச்சோற்றில் குழைத்தது போல் இருந்தது. சூடாகவும் சுவையாகவும் இருந்தது. தலைவலி எல்லாம் போயே போச்சு.

வீட்டுக்கு வந்தபின் பக்கத்து வீட்டம்மாவிடம் அது பற்றிக் கேட்டால் அதன் பெயர் கிச்சடி என்று வயிறு சரியில்லாவிட்டால் அதை வீட்டில் வைத்துச் சாப்பிடுவார்கள் என்றும் சொன்னார்.

இன்னும் பக்கத்திலிருக்கும் சிவ் மந்திருக்கு சாயங்கால வேளைகளில் போனால் பெரிது பெரிதாக இருக்கும் கலர் பூந்தியும் காசிமிட்டாயும் கொடுப்பார்கள். சில சமயம் அதிர்ஷ்டமிருந்தால் தூத் பேடாவே கிடைக்கும்.

உறவினர்கள் வந்திருந்தபோது டெல்லி சிட்டி டூர் போனோம். அங்கே இந்தியா கேட்டருகில் கடையில் ரோட்டியும் காலிதால் மாக்னியும்( கறுப்பு உளுந்து சப்ஜி)  சாப்பிட்டோம். ருசி என்றால் அவ்ளோ ருசி. ஏனெனில் நடந்து நடந்து களைத்துப் போய் பசி எடுத்து இருந்தது. வீட்டில் இருந்து தயிர்சாதமும் இங்கிலீஷ் காய்கறி பிரட்டலும் கொண்டு சென்றிருந்தோம். அத்தோடு அதையும் வாங்கி வெட்டினோம்.

டெல்லியிலிருந்து காசிக்குச் சென்ற போது அங்கே நகர சத்திரத்தில் உணவு இருக்குமோ என்னவோ என்று பக்கமிருந்த ஒரு கடையில் இரவு உணவை வாங்கிச் சென்றோம். இரவு நேரம் என்பதால் கடை மூடும் நேரம் மேலும் கழுவி விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் உணவு இருக்கிறது என்று சொல்லி ஆசுவாசப்படுத்தினார்கள். என்ன வடநாடு பூரா சப்பாத்தியை விட சப்ஜிதான் விலை அதிகம் சுக்கா பிண்டி சப்ஜி ( வெண்டைக்காய் வறுவல்) என்று கேட்டு வாங்கிச் சென்றோம். அழகான குட்டிமண் பானையில் கொடுத்தார்கள், இன்னொரு மண் பானையில் தஹி ( தயிர் ) பசி மயக்கத்தோடு சென்று அனைவரும் சாப்பிட ஆரம்பித்தால் மேலே மட்டும் பிண்டி அதன் கீழே எல்லாம் கரேலா. அப்பிடின்னா என்னன்னு கேக்கிறீங்களா. பாகற்காய் கறிங்க பாகற்காய். ஏதோ வெண்டைக்காய்தான் கசக்குது போல என்று எடுத்து பார்த்தால் நல்ல விதைகளோடு சேர்த்துச் சமைக்கப்பட்ட பாகற்காய்.

எனக்கு மட்டும் அது மிஞ்சிப் போச்சு. உடனே கடைக்குப் போய் கடைக்காரர் சட்டையைப் பிடித்து ஏன் ஐயா ஏன் இப்பிடி நான் சாப்பிடும்போது கசப்பைக் கொடுத்தாய் என்று உலுக்க ஆசை. ஆனால் கணவர் விடு ஊறுகாய், தயிர் வைச்சு சாப்பிடு. பாகக்காயும் நல்லதுதானே என்று அவர் சாப்பிட நானும் கசந்துகொண்டே சாப்பிட்டு முடித்தேன். சப்பாத்தியும் பாகக்காய் கறியும் சாப்பிட்டது வித்யாசமான அனுபவம்.

டெல்லியின் பஞ்சாபி உணவுகளைப் பத்தி சொல்லியே ஆகணும். மா கி டாபா, அப்னா டாபா, வைஷ்ணோ டாபா என்று கடைகள் தெருவெங்கும் முளைத்திருக்கும். அங்கே நாம் கோதுமை மாவைக் கொண்டுபோய்க்கொடுத்தால் போதும் பிசைந்து அங்கே இருக்கும் தந்தூரி அடுப்பில் ஒட்டி சுட்டு குச்சியால் கொத்தி நிமிஷத்தில் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். அரைக்கிலோவில் பத்து ரொட்டி கனம்கனமாக இருக்கும் ஒரு புறம் கருத்து மறுபுறம் உப்பி இருக்கும் ஆனால் ருசியாக இருக்கும். இங்கே விற்கும் பஞ்சாபி பனீர், ஆலு டிக்கி, ட்ரைஃப்ரூட்ஸ் டிக்கி, ப்ரெட் டிக்கி, காலி தால் மாக்னி, தால் ஃப்ரை , கடி, செய்க் கபாப், ஷாஹி பனீர், வெஜிடபிள் கோஃப்டா க்ரேவி எல்லாமே செம செம ருசி.

எங்கள் வீட்டின் கீழ்ப்புறம் ஒரு ஜிலேபி கடை இருந்தது. அதை ஜலேபி என உச்சரிப்பார்கள் நார்த் இந்தியர்கள். மைதாவில் தயிர்போட்டுப் பிசைந்து புளிக்கவைத்து துணியில் ஓட்டை போட்டு மாவை காயும் எண்ணெயில் பிழிந்து ஜீராவில் ஊறவைத்து உடனே எடுப்பார்கள். அதுவும் சமோசாவும் பிரசித்தம். ஆனால் சமோசாவில் முந்திரி பாதாம்பருப்பு வகைகள் மட்டுமில்லை, முழு கொத்துமல்லி விதையும், ஓமமும், சீரகமும் போட்டு இருப்பார்கள். முதலில் சாப்பிடக் கஷ்டமாக இருந்தது பின் பழகி விட்டது.

அதே போல்தான் அந்தூரு உணவுகள் பேசன் ரொட்டி, மக்கி ரோட்டி ( சோளம் ), சரசோங் கீ சாக் ( கடுகுகீரை சப்ஜி ),

சுர்மா என்றொரு ஐட்டம் உண்டு. அது கடலைமாவை டால்டாவில் அல்லது நெய்யில் வறுத்து சீனிப் பொடியும் வறுத்த பாதாம் பிஸ்தா முந்திரியும் சேர்த்து இன்னும் சிறிது நெய்விட்டு உருண்டையாக உருட்டுவது. நம்மூரு மாவுருண்டை ஸ்டைல். நல்ல ருசியாக இருக்கும். அதே போல் மக்கன் பேடா, தூத் பேடா, பாதாம் பேடா, முந்திரி பேடா எல்லாம் தீபாவளி கிஃப்டாக ஒரே ஸ்வீட் பாக்ஸில் கிடைக்கும். தீபாவளி சமயம் தில்லியில் இருந்தால் பரிசுப் பொருட்களாலும் இனிப்புவகைகளாலும் உயர்தர்மான பிஸ்கட், சாக்லேட், பானங்கள், ட்ரைஃபுரூட் டப்பாக்கள் வகைகளாலும் நிரம்பிவிடும் வீடு.

ரோட்டில் கூடையில் சுமந்து தஹி பூரி, தஹி சேவ், டிக்கி, எல்லாம் விற்பார்கள். குல்ச்சா ஸ்டஃபுடு குல்ச்சா எல்லாம் தள்ளுவண்டியில் வரும். சிறுகடைகளில் தோசை என்று தோசைமாவில் கடலைமாவு, மைதா , எல்லாம் போட்டுச் சுடுவார்கள். மஞ்சள் கலரில் இருக்கும் தோசை. !

ஒரு முறை வைஷ்ணோ தேவி கோயிலுக்குப் போயிருந்தபோது அங்கே பஸ்ஸில் எங்கள் கூடவே வந்த சமையற்காரர்கள் எல்லா இடத்திலும் உணவு தயாரித்து வழங்கினார்கள். கடைசியாகத் திரும்பும் சமயம் அவர்களும் களைப்படைந்து விட்டதால் ஒரு பஞ்சாபி டாபாவில் உணவருந்தினோம். மலையிலிருந்து நடந்து நடந்து வந்ததால் எல்லாரும் பஸ்ஸைவிட்டுப் புள்ளத்தாச்சி மாதிரி சாய்த்துச் சாய்த்து நடந்து வந்தோம். ஒரு வழியாக சீட்டுப் பிடித்துச் செட்டிலானதும் இஷ்டப்பட்ட வெரைட்டிகளை ஆர்டர் பண்ணி வெட்டு வெட்டு என்று வெட்டினோம். எங்களுடன் வந்த பஸ் ட்ரைவர் 2 கப் லஸ்ஸி மட்டும் சாப்பிட்டார். !

டிஸ்கி. 1 :- இந்த நகைச்சுவை உணவுக் கட்டுரை 12.10.2014 திண்ணையில் வெளிவந்தது.

டிஸ்கி 2:- அவள் பக்கத்திலும் இந்தக் கட்டுரை பாகம் 1 வந்துள்ளது. :) 
அவள் பக்கத்தில் பாகம் 2, அவள் பக்கத்தில் பாகம் 3, அவள் பக்கத்தில் பாகம் 4,
அவள் பக்கத்தில் பாகம் 5. 


6 கருத்துகள்:

  1. ஆஹா! டெல்லியில் உள்ள உணவு வகைகள் அனைத்தையும் அழகான முறையில் வர்ணித்து எழுதியுள்ளது நாக்கில் நீர் வரவழைத்தது. - துளசி

    கீதா: நான் ஒவ்வொரு முறையும் வட இந்தியப் பயணம், டெல்லிக்குச் சென்ற போது இவை அனைத்தையும் சுவைத்திருக்கின்றேன். வீட்டிலும் செய்வதுண்டு. அனைத்தும். டெல்லி அருமையான ஊர். அதுவும் நீங்கள் இருந்த கரோல் பாக் பகுதி தமிழர்கள் இருக்கும் பகுதி இல்லையா? நல்ல நெருக்கடி மிகுந்த பகுதி.

    ஆனால் என்ன வெயில் தான் தாக்குப் பிடிக்க முடியாது.

    மிகவும் ரசித்தோம் பதிவை...

    பதிலளிநீக்கு
  2. அஹா உங்க வீட்ல இருக்கவங்களும் படிச்சாங்களா துளசிதரன் சகோ :)

    கருத்துக்கு மிக்க நன்றி துளசி & கீதா. :)

    உண்மைதான் வெய்யிலும் குளிரும் கூட அதிகம் சகோ :)

    கருத்திட்டமைக்கு நன்றி முரளிதரன் சகோ :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்.... தில்லியில் ஒரு உலா வந்த உணர்வு! இப்போதும் ரசித்து சாப்பிடும் உணவு வகைகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...