புதன், 4 நவம்பர், 2015

கோல்கொண்டாவும் கோஹினூரும். குதுப் ஷாஹிகளும் கல்லறைகளும்:- GOLKONDA & KOH-E-NOOR


கோல்கொண்டாவும் கோஹினூரும். குதுப் ஷாஹிகளும் கல்லறைகளும்  :-


கோட்டைகளின் காதலர்களா நீங்கள்.. அப்போது அவசியம் பார்க்கவேண்டிய கோட்டை கோல்கொண்டா கோட்டை. வெறும் பாறைகளின்மேல் கற்களால் கட்டப்பட்ட கோட்டை கூட வசீகரிக்க முடியும் உங்களை இன்றும் கூட அந்த வடிவமைப்பு அதிகம் கெட்டுவிடாமல் அரசர் இல்லாவிட்டாலும் அரசு தர்பார் மலை உச்சியில் இருக்க கம்பீரமாகக் கோலோச்சும் கோட்டை கோல்கொண்டா மட்டுமே. 

கோட்டைகளின் அணியாரத்தில் பதிக்கப்பட்ட முத்து என்று குவாலியரைச் சொன்னால் கோட்டைகளின் க்ரீடத்தில் பதிக்கப்பட்ட வைரம் என்று கோல்கொண்டாவைச் சொல்லலாம். ஏனெனில் உலகில் சிறந்த முத்துக்களை விற்கும் நகரில்தான் உலகம் புகழும் மிகப் பெரும் கோஹினூர் வைரம் கிடைத்தது. கோஹினூர் வைரம் கித்த கொல்லூர் கோல்கொண்டாவுக்கு மிக அருகில் உள்ள சிற்றூர்தான். குவாலியர் கோட்டைக்கு அடுத்தது என்னைக் கவர்ந்தது என்றால் அது கோல்கொண்டா கோட்டைதான். ஜெய்ப்பூரில் இருக்கும் நாகா கோட்டையை இதற்கு அடுத்தபடி சொல்லலாம்.  ஹைதராபாத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிடுகின்றார்கள். 


பதிமூன்றாம் நூற்றாண்டில் காகதியாக்கள் ஆண்டு வந்தபோது இந்தக் கொல்லா கொண்டா என்ற மலையில் ( மேய்ப்பர் மலை )கொண்டாபள்ளிக் கோட்டையைக் களிமண்ணால் கட்டி இருக்கின்றார்கள். பின் வந்த குதுப் ஷாஹி மன்னர்கள் இப்போது இருக்கும் கிரானைட் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோட்டையைக் கட்டி இருக்கிறார்கள். இதை குதுப் ஷாஹி கட்டிடக் கலை என்கிறார்கள். ஹைதை கொண்டாப்பூரில் இருந்து கோல்கொண்டா கோட்டை 11 கிமீ தூரத்தில் இருக்கிறது. முன்பே ஒரு முறை பார்த்திருந்தாலும் இன்னுமொரு முறை பார்க்கச் சென்றோம்.

கோல்கொண்டா என்றால் கோஹினூர் வைரம் மட்டுமல்ல. இன்னும் ஹோப் வைரம் , நாசக் வைரம் தர்யா இ நூர், நூருல் எய்ன் வைரம், பிரின்சி வைரம், ரீஜண்ட், விடல்ஸ்பேக் வைரம் என உலகின் பிரபலமான பெரிய வைரங்கள் கிடைத்த சுரங்கங்கள் இதன் அருகேதான் இருக்கின்றன. உலகின் வைர வரலாறு எழுதப்படும்போதெல்லாம்  கோல்கொண்டாவை விட்டுவிட முடியாது. இந்த கோஹினூர் வைரம் மால்வா மன்னர், காகதியா அரசர்கள், சுல்தான்கள், கில்ஜி, தைமூர், டெல்லி சுல்தான், லோடி, முகலாய மன்னர்கள், ஈரான் மன்னர், பாரசீக மன்னர், சீக்கிய மன்னர் எனப் பல அரசர்கள் கைமாறி தற்போது இங்கிலாந்து ராணிகளின் மகுடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. (THE GREAT DIAMONDS OF THE WORLD.THEIR HISTORY AND ROMANCE & CHASING THE MOUNTAIN OF THE LIGHT:ACROSS INDIA ON THE TRIALS OF THE KOH-I-NOOR DIAMOND) 

நாம் முதலில் ஒரு பெரிய ஸிக்ஸாக் கோட்டை வாயிலைப் பார்த்ததும் பிரமிப்போம். எவ்வளவு பக்காவான அமைப்பு. எல்லாக் கோட்டையையும் போல டைனோசர் முதுகு முள்போல அழகான மதிலமைப்புகள்.  அதன் பின் உள்ளே எஸ் போல நுழைந்தால் ஒரு அழகான ஊரே விரிகிறது உள்ளே. 

பொதுவா எல்லாக் கோட்டைகளும் மிக பிரம்மாண்டமா அமைஞ்சிருக்கும். அதன் சுற்றளவு பல கிலோமீட்டர் விரிஞ்சிருக்கும். ஏன்னா எதிரிகள் முற்றுகையிட்டால் பல மாதங்கள் கோட்டைக்கு உள்ளே உள்ள மக்களும் படைவீரர்களும் வாடாமல் உணவுண்ண கருவூலங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இயற்கையா தேக்கப்பட்ட நீர் அல்லது அங்கே பாயும் நதி அவங்களோட தேவையைத் தீர்க்கும். 

ஒவ்வொரு கோட்டையும் ஒரு தன்னிறைவு பெற்ற நகரம்னு சொல்லலாம். அதுபோல இங்கேயும் அந்தக் காலத்துலேருந்து வசித்து வரும் ஆந்திர, இஸ்லாம் பெருமக்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டிருக்கு. அவங்க எல்லாம் சின்னச் சின்னதா வீடுகள் அடுத்தடுத்துக் கட்டி இருக்காங்க. அதை எல்லாம் கடந்தா ( அடேங்கப்பா எவ்ளோ ரோடுகள். எவ்ளோ வீடுகள் ) கோல்கொண்டா கோட்டையின் நுழைவாயிலைப் பார்க்கலாம். அந்த நுழைவாயிலில் இருந்து உள்ளே போகும்போது இளையவர்கள் எல்லாம் இங்கேருந்து மலை உச்சிக்குக் கேட்பது போல இறைந்தும் கைதட்டியும் குதுகலித்துக் கொண்டிருந்தார்கள்.

கோட்டை ஆஸிலேட்டிங்க் பாப்புலேஷன் எனப்படும் மிதக்கும் ஜனத்தொகையின் உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. அது ஒரு பொன்மாலைப் பொழுதாகையால் இளமையும் உற்சாகமும் ஊர்சுற்றிப்பார்க்க வந்த வெளியூர் வெளிநாட்டுக் கூட்டமுமாக அந்தக் கோட்டையை ஒரு கோடை வாசஸ்தலம் போலக் காட்டிக்கொண்டிருந்தது.

முகப்பை ஒட்டி ஒரு பெரிய பூங்காவும். அதன் ஆர்க்கியாலஜிகல் டிபார்ட்மெண்ட் பகுதியும் இருக்கு. அந்தப் பூங்காவில் மிகப் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர் மதில்களோடும் மூன்று அரைவட்டக் கொத்தளங்களோடும் இருக்கு. அதன் பக்கம் வளைவாய்த் திரும்பினால் மெயின் தர்வாசா. மொத்தம் எட்டு வாயில்களும் 87 அரைவட்டக் கொத்தளங்களும் ( சிலவற்றில் பீரங்கிகளோடும் )  இருக்கு. 

போரிடத் தயாராய் காவல் வீரர்கள் பதுங்கி இருக்கும் முன் பகுதி வளைவுகள் அமைந்துள்ளன. வெளிப்பக்கம் ஒரு பீரங்கியும் உள்ளே நுழைந்தவுடன் தர்வாசாவிலிருந்து திரும்பி கோட்டைக்குச் செல்லும் நடைபாதைப் பகுதியில் ஒன்றும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. . 

கோட்டை என்பது மிகப் பெரும் பாதுகாப்புப் பாசறை போன்றது. யுத்த சமயத்தில் சமய சஞ்சீவினி இதுதான். உள்ளே அரச குடும்பத்தினர், மந்திரிகள், மற்றும், இவர்கைப்ுகாக்க வீரர்கள் இருக்க எதிரி நாட்டினர் படையெடுத்தால் உள்ளிருந்தே துப்பாக்கி பீரங்கி குண்டுகளால் தாக்கியும் மதிலில் இருக்கும் ஓட்டைகளின் வழியே காய்ச்சிய எண்ணெய் போன்றவற்றை ஊற்றியும் போரிடுவார்கள். கோட்டைகள் என்றாலே பீரங்கி இல்லாமல் இருக்காது. அவர்கள் கட்டிய கட்டிடங்கள் கூட கலகலத்துப் போய் இருக்கும் ஆனா அந்த பீரங்கிகள் வார்ப்பிரும்பில் செய்யப்படுவதால் பல நூற்றாண்டுகள் தாண்டியும் அதே இரும்புக் கலரிலேயே இருக்கும். எவ்வளவு மழை, எவ்வளவு வெய்யில் எவ்வளவு புயல், கண்டாலும் துளி செம்பட்டைகூடப் பிடிப்பது ( ரஸ்ட் ஆவது – துருப்பிடிப்பது ) கிடையாது.

கோட்டையின் முகப்பு தர்வாசாக்களில் ஒரு கைதட்டல் ஒலி கேட்டால் கூட அது 300 அடி உயரத்தில் இருக்கும் கோட்டை உச்சியில் உள்ள கோபுரத்தில் கேட்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். 

பரதாரி என்ற அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இங்கே இருக்கின்றன. அதாவது நாலு பக்கமும் மூன்று மூன்று வாயில்கள் வீதம் இயற்கையான காற்றோட்டம் அதிகமாகக் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கு. இதில் என்ன சிறப்புன்னா ஜெய்ப்பூர் அரண்மனைகள் போல குளிர் மற்றும் வெய்யில் காலங்களில் ராஜா ராணியின் சயன அறையை வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ வைக்கும் முறையில் இரட்டைச் சுவர்களோடு கட்டப்பட்டிருக்கு. மிகப் ப்ரம்மாண்டமான ஹால்களும் மஹால்களும் நடை பாதைகளும் ஆர்ச்சு வளைவுகளும் குவி மாடங்களும் தர்வாஜாக்களும் மசூதிகளும் வசிப்பிடங்களுமாக மிரட்டுகிறது கோல்கொண்டா. 

ராஜாவின் சயன அறைகளும் ராணிகளின் அந்தப்புரமும் சுற்றுச் சுவர்களும் விதானமும் இரட்டைச் சுவர்களோடு கட்டப்பட்டிருப்பதால் வெய்யில் காலத்தில் குளிர்ச்சியான நீரையும் குளிர்காலத்தில் வெந்நீரையும் இந்தச் சுவர்களுக்குப் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ப்ரத்யேகக் குழாயில் அரசவைப் பணியாளர்கள் ஊற்றுவார்களாம். அஹா அந்தக் காலத்திலேயே ஏசியும் ரூம் ஹீட்டரும் அமைத்து சொகுசா ராஜ வாழ்க்கைதான் வாழ்ந்திருக்காங்க. J ராயல் ஹால்ஸும் இப்படி அமைக்கப்பட்டிருக்கு.

கோட்டையின் கீழிருந்து கோட்டைக்கு மேலே கூட எந்த மோட்டாரும் இல்லாமல் ஒரு விதமான சுழற்சி முறையில் குழாய்களில் நீரை கோட்டைக்கு மேலே ஏற்றி இருக்காங்க. ஆயிரக் கணக்கான ஆர்ச்சுகளும் வளைவுகளும் குவி மாடங்களும் கொண்டதோடு மட்டுமல்ல சில கோயில்களும் பல மசூதிகளும் உள்ளேயே அமைந்துள்ளன.
இப்ராஹிம் மசூதி


ஏன் மகா காளிக்குக்கூடக் கோயில் அரசவை எதிரேயே படிகளை விட்டு இறங்கியவுடன் இருக்கிறது. இதை துர்க்கை கோயில் என்றும் சொல்கிறார்கள். இரண்டு மிகப் பெரும் பாறைகள் முட்டுக்கொடுத்து நின்றிருக்க அதன் பக்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கே ராமதாசர் சிறை வைக்கப்பட்ட குகையும் இருக்கிறது. தானா ஷா என்ற மன்னரின் அனுமதி பெறாமல் காஞ்சர்லா கோபன்னா என்பவர் மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தில் ராமருக்குக் கோயில் கட்டினார். விஷயமறிந்த மன்னன் அவரைச் சிறையிலடைக்க ராமர் லெக்ஷ்மணர் வந்து அரசரிடம் பணத்தைக் கொடுத்து ரசீதை வாங்கி குகையில் இருந்த ராமதாசரிடம் கொடுத்துச் சென்றார்கள் என்றும் உடனே மன்னன் அவரை விடுவித்ததாகவும். சொல்லப்படுகிறது.
மஹா காளி கோயில்.

அம்பர் கானா, கப்ஷி கமன்ஸ், அஷ்லா கானா, ராணி மஹால் காம்ப்ளெக்ஸ் , ( ராணிகளுக்காக பல்வேறு குதுப் ஷாி மன்னர்களால் கட்டப்பட்ட வசதியான பாலஹிசார் என்று சொல்லப்படக் கூடிய அடுக்கு மாளிகைகள், சிறியதும் பெரியதுமான அறைகள் , பல்வேறு அமைப்புகளுடனும் வடிவங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளன. ) ராமதாசர் சிறை வைக்கப்பட்ட குகை, துர்க்கை/காளி கோயில்,ஒட்டகம் நிறுத்துமிடம்,, மிகப் பெரும் ராயல் அறைகள் ஆகியன உள்ளன. 

தாராமதி மசூதி, நயா கிலா ( புதிய கோட்டை ), இப்ராஹிம் மசூதி, குதுப் ஷாஹி மசூதி, ஸனானா மசூதி, ( இந்த மசூதியின் நடுவில் ஒரு பெட்டகம் போன்ற அமைப்பும் ( மெஹ்ரப் – மெக்கா இருக்கும் திசையைக் காட்டும் அரைவட்ட கோள கூம்பு அமைப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கு. மேலும் 3 மூன்று ஆர்ச்சுகளும் சுவரை ஒட்டி இரண்டு பக்கமும் ஒட்டி அமைக்கப்பட்டு திறந்த வெளி முற்றத்தோடு அமைந்துள்ளது ) மோதி தர்வாஜா, பால ஹிஸ்ஸார் தர்வாஜா, பாமினி தர்வாஜா, பாட்லி தர்வாஜா , ஃபதேஹ் தர்வாசா ( ஔரங்கசீப் நுழைந்த வெற்றி வாயில் ) பராதரி ( தர்பார் ஹால் )  (. இங்கே கை தட்டினால்தான் உச்சியில் இருக்கும் கோபுரத்தில் கூட கேட்குமாம் ). புகழ்பெற்ற ரஹ்பான் பீரங்கி ஆகியன பார்க்கத்தக்கவை. 

தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகள், தண்ணீர்க் குழாய்கள், நீரோடும் பாதை, சுரங்கப் பாதைகள், ( கோட்டையிலிருந்து கீழ்ப்பகுதியில் உள்ள வேறு அரண்மனைகளுக்கும், சார்மினாருக்கும் சுரங்கப் பாதைகள் செல்கிறதாம் . ) தாழ்வான பகுதியில் திடீரெனத் தோன்றி மடங்கிச் செல்லும் மெஷ் போன்ற பாதைகள், நீராடும் இடங்கள் என ஆச்சர்யங்கள் பலவற்றை அடக்கி வைத்துள்ளது கோல்கொண்டா கோட்டை. கல்படிகள் நடந்து நடந்து நமக்கு கால் உறுதியாகிவிடும். 


நேச்சுரல் அக்யூபஞ்சர் ட்ரீட்மெண்ட் எடுத்தது போல. தர்பாரி ஹாலுக்குச் செல்ல கற்களால் கட்டப்பட்ட பாலத்தில் செல்வது விநோத அனுபவம். ஏனெனில் நாம் இறங்கி வரும்வரை தெரிவதில்லை அது பாலம் என்று. மலையில் செதுக்கியது போல் இருக்கிறது. ஆனால் கீழிருந்து ஐந்தடி இடைவெளியில் அவ்வளவு உயரம் வரை கற்களை அடுக்கிப் பதித்து அதன்மேல் பாலத்தை – பாதையை அமைத்திருக்கின்றார்கள்.  

ராணி மஹால் நடுவில் உள்ள மிகப் பெரும் திறந்த வெளியில் மணிப்புறாக்களும் மாடப்புறாக்களும் கொஞ்சி மகிழ்ந்து அலைய இரும்பால் செய்யப்பட்ட ஆதிகாலத்து ஃபவுண்டன் ஒன்று ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு இரும்பு ரோஜா பூ பூத்துள்ளது போன்றிருக்கிறது இதன் அமைப்பு. இதே போன்ற ஒன்று சார்மினாரிலும் இருக்கிறது. அது அந்த மண்டபத்தின் நடுவில் உள்ள மாடத்தின் மையத்தில் தரையில் அமைக்கப்பட்டுள்ளது. ராணி மஹாலுக்கு எதிரிலும் கோட்டைக்கு வெளியிலும் முகலாய் கார்டன் எனப்படும் மிகப் பெரும் முகலாய பாணித் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே ஓரங்களில் வளர்ந்திருக்கும் குத்துச் செடிகளையும் குவி மாடங்கள் போல் டோம் ஷேப்பிலேயே வடிவமைத்து வெட்டி இருக்கின்றார்கள். 

ஒவ்வொரு கற்சுவரும் ஆர்ச்சுகளும் அலங்கார வளைவுகளும் தூண்களும் இரண்டடியில் இருந்து நான்கடி ,( சில ஆறடி கூட ) நீளமும் அகலமும் கொண்டவை. அதன் உச்சியில் குவி மாடங்கள் உட்புறமாக பெர்சியன் அமைப்பில் நீள் டைமண்டுகளாகத் தூண்களில் இருந்து அழகான வடிவமைப்பு செய்யப்பட்டுச் செதுக்கப்பட்டுள்ளன. நல்ல காற்றோட்டம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஹாலும்., மஹாலும். ஒவ்வொரு மஹாலின் வெளிப்புறத்திலும் இஸ்லாமிய, பெர்சிய, ஈரானிய கட்டிடக்கலை அமைப்புகளின் படி உருவங்கள் அலங்கரிக்கின்றன. பாலா ஹிஸ்ஸார் தர்வாசாவில் சிங்கங்களும் யாளிகளும் அலங்காரத் தோகைகளோடு மயில்களும் செதுக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய வட்ட வட்டமான பூத்தட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. . இது இந்து முஸ்லீம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. ஒவ்வொரு கட்டிடத்திலும் ஷெல்ஃபுகளைப் போலப் பல வித சைஸ்களில் விளக்கு மாடங்கள் போல அமைக்கப்பட்டுள்ளன. யானை வந்து மோதினால் கூட சேதமடையாமல் இருக்க இரும்புக் குவி உருளைகள் கோட்டை வாயிலில் செதுக்கப்பட்டுள்ளன. 
பாராதரி ( தர்பார் ஹால் )

பாராதரி ( தர்பார் ஹால் ) – இது மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இதன் மேல் ஒரு திறந்த முற்றமும், பார்வையாளர் அரங்கமும் இருக்கின்றது. கீழே இருக்கும் இரு தளங்கள் திவானி இ காஸ், திவானி இ அம் ( DIWANI-I-KHAS & DIWANI-I-AM ) என்று அழைக்கப்படுகின்றன. நான்கு பக்கங்களிலும் குவிமாடங்கள் உள்ள அமைச்சர்கள் அமரும் வேலைப்பாடு மிக்க அரசவை இரட்டைத் தளங்கள் திவானி இ காஸ் என்றும் பொதுமக்கள் மற்ற பார்வையாளர்கள் அமரும் இடம் திவானி இ ஆம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

எத்தனை அரசர்கள் ஆண்ட இடம். எத்தனை ஆசைகள் நிராசைகள் ஆன இடம். ராஜாக்களும் ராணிகளும் மந்திரிகளும் அந்நியப் ப்ரதானிகளும், அந்நிய தேசத்தவரும் ஆசைப்பட்டு வந்து அமர்ந்திருந்த இடத்தில் சிறிது நேரம் நின்றோம். அநேக அரசர்களின் ரத்த சரித்திரத்தியும் கோஹினூர் வைரத்தின் பயணத்தையும் சொல்வது போல சன்னமாய் அடித்துக் கொண்டிருந்தது காற்று. எவ்வளவு பெரிய மலையானால் என்ன எல்லாம் ஒரு நொடியில் காற்றில் கலந்து மாயமாகிவிடும் என்று புரிந்தது. அந்த அரசர்களின் அயராத உழைப்பால் நிமிர்ந்து நிற்கும் அந்த மதில் சுவர்களைப் பார்த்து விட்டு ( இந்த அரசவைை விட ஆக்ராவில் அக்பரின் கோர்ட் அழகாக இருக்கும் ) ஆனால் பெரும்பாலான கோட்டைகளில் அரசவை மட்டுமல்ல எந்த அறைகளும் உருப்படியாக இல்லாமல் சிதலமடைந்தே இருக்கும் ஆனால் கோட்டைக் கதவுகளும் மதில் சுவர்களும் அரண்களும் அகழிகளும் மட்டும் பலம் வாய்ந்தவையாக இருக்கும். 
தாராகிலா மசூதி

அவர்கள் உபயோகப்படுத்திய மட்பாண்டங்களையும் குடுவைகளையும், உணவருந்திய பீங்கான் கப்புகள், தட்டுகள், கிண்ணங்களையும் , அங்கே மீட்கப்பட்ட/கண்டெடுக்கப்பட்ட அமர்ந்திருக்கும் நிலையில் உள்ள தலையில்லாத லெக்ஷ்மி நாராயணர் சிலையையும், நான்கு கரமுடைய கணபதி சிலையும், மினியேச்சர் பில்லர் ஸ்டோனையும், மிகப் பெரும் இரும்பு உருளையையும், பாக்கு வெட்டிகள்,கத்திகள், கோப்பைகள், யானை உருவம் ஆகியவற்றையும் கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள்.  

தெலுங்கானா கவர்மெண்டின் 68 ஆவது குடியரசு தினத்துக்கான பயிற்சிகள் மற்றும் அணிவகுப்பு இங்கே  - 2014 ஆண்டு  நடைபெற்றது. பிரம்மாண்டத் திருவிழா போல கோட்டையினுள் சுதந்திரக் கொடி ஏற்றப்பட்டது.  

கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் குதுப் ஷாஹி மன்னர்களின் கல்லறைகளும் அழகான வேலைப்பாடுகளுடன் மிக அழகான தோட்டங்களுக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளன அவர்கள் அரசாண்ட கோட்டை கூட சிதைந்து விட்டது. ஆனால் அந்தக் கல்லறைகள். டோம்கள் அப்படியே இருக்கின்றன. தாம் அரசாண்ட இடத்தையும் தம்முடைய அழகான கல்லறைகளில் இருந்து அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தோன்றியது.



5 கருத்துகள் :

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

விரிவான தகவல்கள்! அழகான படங்கள்! இருபகுதிகளாக பிரித்து போட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும் என்பது எனது சிறிய கருத்து! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

காண கிடைத்தற்கரிய காட்சிகளைஇன்று தங்களால் கண்டேன்
நன்றி சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எத்தனை பிரம்மாண்டமான கோட்டை.... படிக்கும்போதே அதன் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது....

குவாலியர் கோட்டையை நேரில் பார்த்ததுண்டு. இங்கே இன்னும் செல்லவில்லை. செல்லத் தோன்றுகிறது உங்கள் பதிவினை வாசித்தபிறகு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ்சகோ :)

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ :) சென்று பாருங்கள் பிரமிப்பீர்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...