எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 ஜூன், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.



விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.



மனோ மேம் மிகப்பெரும் பதிவர். இவரது மனநலம் உடல் நலம் குறித்த இடுகைகள் எனக்குப் பிடிக்கும். இவரது உணவு வலைத்தளம் வெகு ஆண்டுகளுக்கு முன்பே பதிமூன்று லட்சம் பார்வைகளைக் கொண்டு என்னை மிரட்டியது ! 

தஞ்சையிலும் துபாயிலுமாக வசித்து வரும் இவர்களிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது துபாய் பற்றியும் அங்கே செல்வதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன் ஃப்ளைட் நடைமுறைகள் பற்றியும் சுவாரசியமாகச் சொல்லி இருந்தார். இப்ப பச்சைத் தண்ணீர்னா கூட எகனாமிக் ஃப்ளைட்டுகளில் காசு கொடுத்து வாங்கித்தான் குடிக்கணும்.

காற்றுப் பேருந்து என்ற பதம் இப்ப ரொம்பப் பொருத்தம். ஏன்னா மும்பை – ஹைதைக்கு நான் பயணம் செய்த இண்டிகோவில் பஸ் மாதிரி ஏறி உக்கார்ந்து வறுத்த கடலை எல்லாம் சாப்பிட்டுட்டு முன்சீட்டு கவர்ல காலிபேப்பரைச் சொருகி வைச்சாங்க ஒரு மராத்தி குடும்பம் ! 

சிறுவயதில் சினிமாக்களில் பாத்துட்டு நானும் கூட ஃப்ளைட்னா ஆஹா ஓஹோன்னு நினைச்சிருந்தேன். ஆனால் எங்கள் முதல் ஃப்ளைட் பயணத்தை என் தம்பி எமிரேட்ஸில் பதிவு செய்ததால் மெய்யாலுமே அது ஆஹா ஓஹோதான். ஃப்ரீ ட்ரிங்க்ஸ், லெமனேட், காஃபி எல்லாம் சப்ளை செய்தாங்க. முஸ்லீம் மீல், வெஜிடேரியன் மீல், சீ ஃபுட் மீல், ஃப்ரூட் மீல் என விதம் விதமா சாப்பிட்டுக்கிட்டே போனோம். அதுக்கப்புறம் போன லோக்கல் & எக்கனாமிக் ஃப்ளைட்டுகளில் எல்லாம் அது ஏர்பஸ்ஸேதான் J

மனோ மேம் துபாய் பத்தியும் ஷார்ஜா பத்தியும் கூட சொல்லி இருக்காங்க வாசிச்சுப் பாருங்க

என்னைப்பற்றி என்ன எழுதுவது?


அடிப்படையில் நான் ஒரு ஓவியர், கதாசிரியையும்கூட. இளம் வயதில் ஆனந்த விகடன், தேவி, சாவி, மங்கையர் மலர் என்று எழுதியும் வரைந்தும் வந்தேன். வலது கை விரலில் ஏற்பட்ட விபத்து காரணமாய் அனுபவித்த வலியில் மனம் தளர்ந்து போய் விட்டேன். எல்லாம் சரியானதற்கப்புறமும் அந்த ஸ்பார்க் வரவில்லை மனதில்!

சிறு வயதிலேயே சாஸ்தீரிய சங்கீதம் கற்றுத் தேர்ச்சியுற்றதன் பலன், இந்த வயதில் குரலெடுத்து ஆலாபனை செய்ய இயலாவிட்டாலும்கூட ராகங்களை மெய்மறந்து ரசிக்க உதவுகிறது!

தமிழும் ஆங்கிலமுமாய் புத்தகங்கள். கூடவே வலைத்தளம், கணினி. இவை தான் என் தற்போதைய உலகம், சினேகிதம்!!

ஸாதிகா, ஜலீலா, ஆசியா என்று எல்லோரும் வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருந்த போது தான் நானும் எழுத ஆரம்பித்தேன். ஏழு வருடங்களாகி விட்டது என்பதை திரும்பிப்பார்க்கும்போது தான் உணருகிறேன்.

என் வலைத்தளத்தை என் எண்ணங்களுக்கு வடிகாலாக உபயோகித்த்து மட்டுமல்லாமல் பெரும்பாலும் நல்ல விஷயங்கள், நல்ல அனுபவப்பூர்வமான மருத்துவக்குறிப்புகள் என்று தொடர்ந்து எழுதி வருவது மனதுக்கு நிறைவையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.

அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுவது மனதுக்கு உற்சாகமளிக்கிறது. பல அருமையான சினேகிதங்கள் கிடைத்திருப்பது மனதுக்கு என்றுமே இதமளிக்கும் விஷயம்.

என்னைப்பற்றி- அன்பான, என் அனைத்துத்திறமைகளையும் சிறு வயதிலிருந்தே ஊக்குவிக்கும் சினேகிதரான என் கணவர், ஒரு அருமையான நண்பனாக , கண்ணின் இமையாய் பார்த்துக்கொள்ளும் மகன், அன்பான மருமகள், புதுப்புது அர்த்தங்களைக் கற்றுத்தரும் என் பேரன், விரைவில் எங்களுடன் வந்து இணையப்போகும் குட்டி பேத்தி என்ற சிறிய குடும்பம் என்னுடையது.

எண்ணெய்க்கப்பலில் முதலில் வேலை செய்த பின் என் கணவர் ஆரம்பித்த தமிழ் உணவகம் நடிகர் காலஞ்சென்ற ஜெய்சங்கர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 23 வருடங்கள் வெற்றிகரமாக உணவக அதிபராக இந்த வளைகுடாவில் வாழ்க்கை. 

41 வருடங்களுக்கு முன் வளைகுடா நாடான ஐக்கிய அமீரக குடியரசின் ஒரு மாநிலமான ஷார்ஜாவிற்கு திருமணமாகி இரு வருடங்களுக்குப்பிறகு, என் இளம் வயதில் 1976ல் வந்தேன்.

முதலில் ஷார்ஜாவைப்பற்றி ஒரு சிறு அறிமுகம். ஆங்கிலேயரின் கைப்பிடியில் இருந்த நாடுகளில் இதுவும் ஒன்று. சுதந்திரம் அடைந்து ஐக்கிய அமீரக குடியரசானது 1971ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2ந்தேதி. அபு தாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, ஃபுஜேரா, உம் அல் குவைன், அஜ்மான் என்ற மாநிலங்கள் அடங்கியது. மிகப்பெரிய மாநிலமான அபுதாபியின் ஷேக் அன்றிலிருந்து இன்று வரை தலைவராக இருந்து வருகிறார். துபாய் ஷேக் பிரதம மந்திரியாக இருந்து வருகிறார். ஷார்ஜா பின்னாளில் 1984லிருந்து 2003 வரை 200க்கும் மேல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி வரலாற்றில் புகழடைந்தது.

ஷார்ஜாவிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் துபாய் இருந்தாலும் துபாயின் பரபரப்பு எதுவுமில்லாமல் எப்போதும் ஷார்ஜா அமைதியாக இருக்கும். 40 வருடங்களுக்கு முன் எங்கு நோக்கினாலும் மணல் தான். பாலைவன நாடு என்பதன் அர்த்தம் சரியாக இருந்தது. வாழ்க்கையின் முக்கால்பகுதி என் புகுந்த வீட்டில் [ நாட்டில்] கழிந்து விட்டது.

வந்த புதிதில் நேரடியாக துபாய்க்கு விமானம் கிடையாது. மும்பை [ அப்போது பம்பாய்] வந்து அங்கிருந்து விமானம் மாற வேண்டும். முதன் முதலாக விமானப்பயணம் மேற்கொண்ட போது, வயிற்றைப்புரட்டும், மயக்கம் வரும் என்று ஆயிரம் பயங்கள்! இப்படி டவுன்பஸ் மாதிரி வருடத்திற்கு பலமுறை தொடர் விமானப்பயணங்கள் 40 வருடங்களுக்கு மேலும் பயணித்துக்கொண்டிருக்கப்போகிறேன் என்று கனவிலும் நினைத்ததில்லை! முதன் முதலாக 1976ல் துபாயிலிருந்து நேரடியாக சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் பல பரிந்துரைகள், விண்ணப்பங்களின் பேரில் விமான சேவையை ஆரம்பித்தது. முதல் நாள் சென்னைக்கு நேரடியாக விமானம் சென்ற போது பயணிகளுக்கு மலர்க்கொத்துக்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாடித்தீர்த்து விட்டார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் சென்னையைத்தவிர்த்து மதுரை, திருச்சி, கோவையிலிருந்தும்கூட விமானங்கள் வெளிநாடுகளுக்குப் பறக்கின்றன.,

விமானப்பயணங்களில்கூட நிறைய மாறுதல்கள் வந்து விட்டன. முன்பெல்லாம் விமானப்பயணம் அருமையாக இருக்கும். உணவு இனிப்பு, சாலட், புலவு, கறி வகைகள், பழங்கள், தயிர், காப்பி என்று வழங்கும் முறையில்கூட ராஜ மரியாதை இருக்கும். அதுவும் முதல் வகுப்பில் நிஜமாக ராஜ மரியாதை கிடைக்கும்! இப்போதோ பட்ஜெட் விமானப்பயணங்கள் என்று சிறு சிறு தனியார் விமான நிறுவனங்கள் சேவையை ஆரம்பித்து விட்டதால் கட்டணம் மிகவும் குறைந்து போனதால் விமானப்பயணங்களில் மிகக்குறைந்த உணவே தருகிறார்கள். நிறைய தனியார் விமானங்களில் காசு கொடுத்தே உணவை வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த உணவு பிடிக்காமல் வீட்டிலிருந்தே உனவு கொண்டு வந்து உண்பதும் நடக்கிறது. டிரெஸ் கோட் இருந்த காலம் போய் விட்டதால் வெறும் லுங்கிகளில்கூட இன்று பயணம் செய்கிறார்கள்!

40 வருடங்களுக்கு முன் மழையென்பதையே நாங்கள் இங்கு பார்த்ததில்லை. ஊரில் ‘சோ’ வென்று அடித்துப்பெய்யும் மழைக்கு அவ்வப்போது மனது ஏங்கும். எப்போதாவது அங்கங்கே தூறல் போடும்போது அனைவரும் மொட்டை மாடிக்கு ஓடிச்சென்று கைகளில் விழும் அந்தத் தூறல்களை உள்வாங்கி ரசித்திருக்கிறோம். என் கணவர் அமெரிக்க எண்ணெய் கப்பலில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்ததால் ஒரு வாரம் கடல் நடுவே எண்ணெய்க்கப்பலில் வேலை, ஒரு வாரம் நகரில் ஓய்வு என்று இருந்தார்கள். சில சமயங்கள் ஹெலிகாப்டரிலும் சில சமயங்களில் அலைகளின் நடுவே ஸ்டீம் போட்டிலும் செல்வார்கள். ஆக்ரோஷமான அலைகளையும் சுட்டெரிக்கும் வெய்யிலையும் எங்குப்பார்த்தாலும் வெண்மையாக காட்சியளித்த மணலையும் பார்த்துப் பார்த்து சலித்து நம் ஊருக்காகவும் நம் ஊரில் உறவுகளுக்காகவும் பசுமைக்காகவும் ஏங்கிய காலங்கள் அதிகம்!!

முதல் முதலாக, கால நிலை மாறி ஒரு முறை பொங்கலன்று பெருமழை பெய்தது. மக்கள் எல்லோரும் சாலையில் நின்று அதை வேடிக்கை பார்த்தார்கள். மழைக்கேற்ப வடிகால்கள் இங்கு அமைக்கப்படாததால் தேங்கி நின்ற நீரை பம்புகள் கொண்ட லாரிகள் வந்து உறிஞ்சிச் சென்றன.

இப்போதோ மழை தாராளமாக பெய்கிறது. கடல் நீர் சுத்தகரிக்கப்பட்டு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது. செடி கொடிகள் அதிகம் தென்படாத பாலைவன பூமியில் இன்றைக்கு எங்குமே பசுமையான மரங்களும் சோலைகளும் செடிகளும் மலர்களும் அழகிற்கு அழகு சேர்க்கின்றன!

அன்றைக்கு கடல் தாண்டி வருவதற்கு ஒவ்வொருவருக்கும் நிறைய காரணங்கள் இருந்தன. உடன்பிறப்புகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும், படிக்க வைக்க வேண்டும், வேலை தேடித்தர வேண்டும், வறுமையில் இருக்கும் குடும்பத்தை நிமிர வைக்க வேண்டும் என்று இப்படி நிறைய கடமைகளும் பொறுப்புக்களும் இருந்தன. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. பெரும்பாலான இளைஞர்கள் தனக்காக, தன் குழந்தைகள், மனைவிக்காக என்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பொறுப்புக்களோ சுமைகளோ இன்றில்லை.

40 வருடங்களுக்குப்பின், இன்றைக்கு.......
இந்த நாட்டின் எண்ணெய் வளம் உலகத்தின் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த எண்ணெய் வளத்தால் இந்த நாடு பொருளாதாரத்திலும் அனைத்து வளங்களிலும் முன்னேறி உலகின் பணக்கார நாடுகளில் ஏழாவது இடத்தில் உள்ளது. உலகத்திலேயே முதன்மையான செயற்கைத்தீவு [The Palm Trilogy Islands], உலகிலேயே உயர்ந்த கட்டிடம் [The Burj Khalifa], [ இது 828 மீட்டர் உயரம் கொண்டது. 174வது மாடியில் உலகிலேயே உயரமான மசூதியும் 76ம் மாடியில் உலகிலேயே உயர்ந்த நீராடும் குளத்தையும் தன்னகத்தே கொண்டது], உலகைலேயே பெரிய ஷாப்பிங் மால் [Dubai mall ], உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நீரூற்று [ The Dubai fountain ], உலகிலேயே மிகப்பெரிய அக்வேரியம் [Dubai Aquarium], உலகிலேயே உயர்ந்த மக்கள் வசிக்கும் கட்டிடம் [Princess Tower], உலகிலேயே இயற்கையான மலர்கள் நிறைந்த மலர்ப்பூங்கா [Dubai Miracle garden] , என்று உலகின் முதன்மையான அதிசயங்கள் இங்கு நிறைய இருக்கின்றன.

தொடர்ந்து பயணம் சென்று கொண்டிருக்கிறது...!! ஆசைப்படும்போது சொந்த ஊரான தஞ்சைக்கும் பின் என் மகனிடமுமாக பயணம் தொடர்கிறது!!

டிஸ்கி:- அட ! எப்பிடி மேம் 40 வருஷமா அந்தப் பாலை மண்ணுல இருக்கீங்க. ரியலி சூப்பர்ப்தான். எனக்கு போய் மொத்தம் 25 நாள் இருந்ததுதல நாலாம் நாளே போர் அடிச்சிருச்சு. எங்க பார்த்தாலும் கட்டிடம்தான். தம்பி வீடு வசதியா இருந்துச்சு, தம்பி எல்லா இடத்துக்கும் கார்ல கூட்டிட்டுப் போனான். பட் அங்கே வசிக்கிறதுன்னா யோசிக்கத்தான் வேண்டும். 




அதுல அங்கேயே உணவுக் கடையும் நீங்க நடத்தி வந்ததை நினைச்சா மலைப்பா இருக்கு. நிறைய தரக்கட்டுப்பாடு இருக்குமே. அதை எல்லாம் சமாளிச்சு செய்தது வெகு சிறப்பு. ரியலி ஹேட்ஸ் ஆஃப் டு யூ. தாங்க்ஸ் மேடம் சாட்டர்டே ஜாலி கார்னரை சிறப்பு கார்னர் ஆக்கி கௌரவிச்சதுக்கு. அன்பும் நன்றியும் J
 


18 கருத்துகள்:

  1. மனோ மேடம் கிட்டயிருந்து வித்தியாசமான ஒரு அனுபவத்தை வாங்கிப் பிரசுரித்தமைக்கு நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.

    பதிலளிநீக்கு


  2. மனோ மேடத்தின் திறமைகளை கொஞ்சம்தான் அறிந்திருந்தேன். சங்கீதப் பயிற்சி முறையாகக் கற்றவர் என்பது உட்பட்ட திறமைகளுக்கு ஒரு ஸலாம். ஷார்ஜா ஸலாம்!

    திடீரென பருவநிலை மாறி மழை அங்கும் சாதாரணமானது ஆச்சர்யம்.

    ட்ரெஸ் கோட் பற்றி மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களையும் பற்றி சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறார். நன்றி மனோ மேடம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையாக இருந்தது மனோசாமிநாதன் அவர்களின் சாட்டர்டே ஜாலி கார்னர்.
    பாலை பூக்கள் நகரமாய் திகழவது மழை பெய்வது எல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது.
    உலகின் அதிசயங்கள் நிறைந்த நகரை அறிந்து கொள்ள உதவியது பகிர்வு.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. ஐக்கிய அரபுக் குடியரசில் வேற்று நாட்டினர் அவர்கள் பெயரில் எந்தத் தொழிலையும் நிறுவனத்தையும் நடத்த முடியாதாமே யாராவது தெரிந்த உள்ளூர்க்காரர் பெயரில்தான் இயங்கவேண்டுமாமே

    பதிலளிநீக்கு
  5. என்னைப்பற்றிய அறிமுகத்திற்கும் என் பதிவை வெளியிட்டதற்கும் அன்பு நன்றி தேனம்மை!

    இந்த நாட்டை நான் தான் புகுந்த வீடு என்று முன்னமேயே சொல்லி விட்டேனே! பிரச்சினைகளோ, கஷ்டங்களோ புகுந்த வீட்டில் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்துத்தானே ஆக வேண்டும்! உண்மையில் 41 வருடங்களாக இங்கு வசிப்பதில் நாங்கள் எந்தப்பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை! நாங்கள் என்றில்லை, பொதுவாக யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து அவற்றை ஒழுங்காக பின்பற்றும்வரை அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை!

    இங்கு வியாபாரம் செய்ததால் எத்தனையோ பேருக்கு பொருளாதார உதவிகள் செய்ய முடிந்தது. திருமணங்கள் நடத்தி வைக்க முடிந்தது. படிக்க வைக்க முடிந்தது. இன்னும் அவற்றை செய்ய முடிகிறது. என் மகனுக்கு அமெரிக்கா, ஸ்விட்ச்ர்லாந்து, என்று அனுப்பி உயர்தர கல்வி தர முடிந்தது.

    என் கணவர் உணவகம் நடத்திக்கொண்டிருந்தபோது இங்கு வந்து ஏமாற்றப்பட்டு வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த பலரையும் திரும்ப தாய்நாடு செல்ல உதவிகள் செய்திருக்கிறார்கள். திடீரென்று மரணம் எய்தியவர்களும் தாய்நாடு செல்ல பலருடன் சேர்ந்து உதவியிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ கொடுப்பினைகளுக்கு என் புகுந்த வீடு தான் காரணம்!!

    இன்னொன்றும் இருக்கிறது தேனம்மை! இங்கிருக்கும்போது ஊரில் எதிர்நோக்க வேண்டிய பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
  6. இனிமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  7. சிற்ப்பான பின்னூட்டம் மிக்வும் மகிழ்ச்சியைத்தந்தது கோமதி அரசு! மனங்கனிந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!

    பதிலளிநீக்கு
  9. அன்புச் சகோதரர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு!
    ஐக்கிய அமீரகத்தில் நம் பெயரில் மட்டுமோ அல்லது அரேபியர் ஒருவருடன் கூட்டாகவோ தொழில் தொடங்க முடியும். இப்படி இரண்டு முறையிலேயும் நாங்கள் தொழில் நடத்தியிருக்கிறோம். நம் பேரில் மட்டும் தொழில் இருந்தால் அதில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே வேலை செய்ய ஆட்களுக்கு விசா எடுக்க முடியும். அரேபியருடன் கூட்டாக தொடங்கினால் போதிய அளவு விசா கிடைக்கும். அரேபியர் பெயரில் 51 சதவிகிதமும் நம் பெயரில் 49 சதவிகிதமும் அக்ரிமென்ட் இருக்க வேண்டும். இது சட்டத்திற்க்காக மட்டுமே. தொழிலின் முழுமையான வருமானம் நமக்கு மட்டுமே. இதைத்தவிர எந்தத்தொழிலும் ஒரு அரேபியரின் ஸ்பான்ஸர்ஷிப் இல்லாமல் தொடங்க முடியாது. ஸ்பன்ஸர்ஷிப்பிற்கு குறிப்பிட்ட பணம் வருடந்தோறும் கொடுக்க வேண்டும். இது இல்லாமல் எந்த வியாபாரமும் இங்கில்லை.
    தொழிலில் mainland business, free zone business என்ற இரு வகை உண்டு. Mainland businessல் கட்டாயம் ஸ்பான்ஸர்ஷிப் உண்டு. free zone businessல் ஸ்பான்ஸர்ஷிப் கிடையாது. என் மகன் இரண்டு businessம் செய்கிறார்.

    பதிலளிநீக்கு
  10. ///அன்றைக்கு கடல் தாண்டி வருவதற்கு ஒவ்வொருவருக்கும் நிறைய காரணங்கள் இருந்தன. உடன்பிறப்புகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும், படிக்க வைக்க வேண்டும், வேலை தேடித்தர வேண்டும், வறுமையில் இருக்கும் குடும்பத்தை நிமிர வைக்க வேண்டும் என்று இப்படி நிறைய கடமைகளும் பொறுப்புக்களும் இருந்தன. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. பெரும்பாலான இளைஞர்கள் தனக்காக, தன் குழந்தைகள், மனைவிக்காக என்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பொறுப்புக்களோ சுமைகளோ இன்றில்லை.///

    எவ்வளவு அழகாக எளிமையாகச் சொல்லி விட்டார்.
    உண்மை.
    அன்றைய வெளிநாட்டு வாழ்க்கை பொதுநலன்
    இன்று சுயநலன்
    அருமை அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  11. மனோ சாமினாதன் அவர்களின்
    பதிவினைத் தொடர்ந்து
    படித்து வருவதால் இதில் கூறியுள்ள
    அவரைப்பற்றிய தகவல்கள் ஓரளவு
    எனக்குத் தெரியும். மிகக் குறிப்பாக
    ஓவியத் திறன்

    ஒருமுறை அவர்கள் கடைமுன் முகப்புக்கென
    வரைந்திருந்த ஓவியம் குறித்து'பாராட்டிப்
    பின்னூட்டம் அளித்திருந்தது
    இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது

    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  12. மிகவும் அருமையான அழகான கட்டுரை. துபாய் ஓர் சுவர்க்கபூமி மட்டுமே.

    இங்குபோல எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தங்கள், கடைகளின் கதவடைப்புகள், பந்த், ஆர்பாட்டங்கள், தெருவில் ஊர்வலங்கள், டிராஃபிக் ஜாம் என்ற எந்தத் தொல்லைகளும்
    அங்கு ஐக்கிய அரபு நாடுகளில் கிடையவே கிடையாது.

    // உண்மையில் 41 வருடங்களாக இங்கு வசிப்பதில் நாங்கள் எந்தப்பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை! நாங்கள் என்றில்லை, பொதுவாக யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து அவற்றை ஒழுங்காக பின்பற்றும்வரை அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை! //

    மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்ந்தால் அங்கு வாழ வேண்டும். அங்கு நிம்மதியாக வாழ்ந்து பழகிவிட்டவர்களால் இங்கு வந்து ஒருநாள் கூட நிம்மதியாக வாழவே முடியாது.

    பதிலளிநீக்கு
  13. எனது பதிவில் சில திருத்தங்கள் தேனம்மை!

    1. ஏழு மாநில்ங்களில் ' அஜ்மான்' என்ற மாநிலத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன்.

    2. நம் தமிழ்நாட்டில் விமான சேவை சென்னையைத்தவிர்த்து கோவை, மதுரையில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். திருச்சியை விட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. இனிய பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் அன்பிற்கினிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    பதிலளிநீக்கு
  15. இனிய பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் வழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர். வை.கோபாலகிருஷ்ணன்!

    பதிலளிநீக்கு
  17. THANKS SRIRAM. ETHO ORU THALAIPPU VAIKKANUMEY. ELLAMEY ARUMAIYA IRUNTHUCHU. SO DRESS CODE PATHI YARUKKUM THERINCHIRUKATHUNNU ATHA THALAIPA VAICHEN :)

    THANKS GOMATHI MAM

    THANKS DD SAGO

    THANKS BALA SIR. MANO MAM PATHIL SOLLI IRUKKAANGKA UNGKA KELVIKKU

    THANKS MANO MAM FOR THE EXPLANATION :)

    THANKS DD SAGO

    THANKS RAMANI SIR

    THANKS VGK SIR

    THANKS FOR THE CORRECTIONS MANO MAM. ( IPO MATHIDUREN :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...