புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 9 ஜூன், 2017

மறவர் சீமையை ஆண்ட மறத்தமிழர்கள் மருதுபாண்டியர்கள்.

ஜூன் 12. ஜம்புத்தீவு பிரகடனம்.


மறவர் சீமையை ஆண்ட மறத்தமிழர்கள் மருதுபாண்டியர்கள். 

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருதுசகோதரர்கள் இல்லாமல் சிவகங்கையின் வீரசரித்திரம் எழுதப்பட முடியாது. சொல்லப்போனால் சிப்பாய்க் கலகத்துக்கு 56 வருடங்களுக்கு முன்பே பெரிய மருதுவும் சின்ன மருதுவும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஆங்கிலேயரின் ஆளுகையிலிருந்து விடுதலை ஆகிவிட்டதாகப் பிரகடனப் படுத்தியவர்கள்.

1801  ஜூன் 12 இல் இவர்கள் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையே ”ஜம்புத்தீவு பிரகடனம்” என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் எல்லா இனத்தைச் சேர்ந்த மக்களும் நாட்டுப் பற்றோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.  


வில் வாள், வேல்கம்பு ஆகிய ஆயுதங்களே கொண்டு, ”கப்பமெல்லாம் கட்ட முடியாது.  வேண்டுமானால் மோதிப் பார்த்து விடலாம்” என்று அதி நவீன ஆயுதங்களோடு இருந்த ஆங்கிலேயருக்கு எதிராக அறிக்கை விட்ட மாவீரர்கள் இவர்கள். 

கும்பினியாரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரம் விளைந்த சிவகங்கை சீமையின் காளையார் கோவிலில் 1785 முதல் 1801 வரை வீரதீரத்துடன் போராடியவர்கள். வேட்டைத் துப்பாக்கியுடன் ஆங்கிலேயர்கள் வேட்டைக்கு செல்லும்போது வெறுங்கைகளால் புலியை நேருக்கு நேர் கொல்லும் திறன் படைத்தவர் பெரிய மருது. நாணயத்தை வளைப்பதிலும் வளரி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதிலும் தொடுவர்மக் கலையிலும் பெரிய மருது சிறந்து விளங்கினார். 

மருதிருவர் பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்குளம் என்ற ஊர். அவர்களது தந்தையார் உடையார் சேர்வை என்ற மொக்க பழனியப்பன். தாயார் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள். 1748 டிசம்பர் 15 இல் பெரிய மருதுவும் 1753 இல் சின்ன மருதுவும் பிறந்தார்கள். சிவகங்கைச் சீமையின் அரசர் முத்துவடுகநாத தேவரின் படையில் சேர்ந்தார்கள். இவர்களது திறமையையும் வீரத்தையும் கண்ட அரசர் இவர்களை முக்கியப் பொறுப்பில் நியமித்தார்.  

எட்டு ஆண்டுகளாக முத்து வடுகநாதரின் ஆளுகைக்கு உட்பட்ட சிவகங்கை ராஜ்ஜியத்திலிருந்து ஆற்காடு நவாப்பால் வரிவசூல் செய்ய முடியவில்லை. எனவே அவர் கிழக்கிந்தியக் கம்பெனியார் துணையுடன் வரிவசூல் செய்ய நினைத்து அவர்களின் துணையை நாடினார்.  

1772 இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் லெஃப்டினெண்ட் கொலோனல் பான் ஜோர் காளையார் கோவிலைத் தமது படையுடன் தாக்கினார். ராஜா முத்துவடுகநாதர் கொல்லப்பட மருதிருவர், பட்டத்து ராணி வேலு நாச்சியார், முத்துவடுகநாதரின் மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராய பிள்ளை ஆகியோருடன்  விருப்பாச்சிக் காடு வழியாக  ஹைதர் அலி ஆண்ட திண்டுக்கல்லில் தஞ்சமடைந்தார்கள். ஹைதர் அலி அபயம் அளித்து அவர்களைக் கௌரவமாக நடத்தினார். 

மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் பன்னிரண்டாயிரம் வீரர்களைச் சேர்த்து ராணிக்காகப் போராடினர். ஆனால் நவாப் பிரிட்டிஷ் படைகளுடன் கொல்லங்குடியைத் தாக்கினார். வீரத்துடன் போரிட்ட மருதிருவரின் படையினர் ஹைதர் அலியின் படையின் துணையுடன் அனைவரையும் தோற்கடித்து சிவகங்கைச் சீமையை மீட்டு 1780 இல் ராணி வேலு நாச்சியாரை அரியாசனத்தில் அமர்த்தினார்கள்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீர பாண்டிய கட்டபொம்மனின் ஆலோசனையை மருதிருவர் ஏற்பார்கள். அவர் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட பின்பு அவரது சகோதரர் ஊமைத்துரைக்கு சின்ன மருது தஞ்சம் அளித்ததாலும் ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்துக் குழுக்களையும் ஒன்று திரட்ட முயற்சித்ததாலும் கோபம் கொண்ட ஆங்கிலேயர் 1801 மே 28 இல் மாபெரும் படையுடன் சிவகங்கையைத் தாக்கினர். அவர்களுடன் வீர தீர சாகசத்தோடு போராடி மூன்று ஜில்லாக்களை மருதிருவர் பிடித்தனர். 

அதைக் கண்டு பயந்த ஆங்கிலப் படை இவர்கள் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கு என்றும் அச்சுறுத்தலாகத் திகழ்வார்கள் என்று எண்ணி இன்னும் அதிகப் படைகளை வருவித்து காளையார் கோயிலில் இருந்த மருது பாண்டியரைச் சுற்றி வளைத்து ஆக்கிரமித்தது. மருதுபாண்டியரும் அவரது முக்கியத் தளபதிகளும் சாகசமாகப் போரிட்டுத் தப்பித்தனர். 

அதன் பின்னர் விருப்பாட்சி, திண்டுக்கல், சோழபுரம் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் விருப்பாட்சியில் மட்டுமே ஜெயித்து மற்ற இடங்களில் தோற்றனர். அரசியலில் தந்திரமிக்கவராக விளங்கிய சின்னமருது தஞ்சாவூரிலிருந்து திருநெல்வேலி வரை அரசியல் கூட்டணி உருவாக்கி எதிர்த்தார். இதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர் சின்ன மருதுவைப் பிடித்துக் காயப்படுத்திச் சிறையில் அடைத்ததாக கர்னல் வெல்ஷ் என்பவரும் 1813 இல் கோர்லே என்ற ஆங்கிலேயர் எழுதிய மருதுபாண்டியர் வரலாற்றிலும் வரலாற்று ஆசிரியர் மீ மனோகரன் என்பவரும் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

கிட்டத்தட்ட 150 நாட்கள் நடந்த போரில் மருதிருவர் சிறைப்பிடிக்கப்பட்டனர். 1801 அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் இவர்களைத் தூக்கிலிட்டார்கள். இவர்களை மட்டுமல்ல இவர்களது குடும்பத்தினர் அனைவரையும் விசாரணை இன்றி கிட்டத்தட்ட 500 பேரைத் தூக்கிலிட்டான் அக்கிரமக்காரனான ’மேஜர் அக்னியு’ என்பவன். 

மற்ற தளபதிகளையும் மருதுவின் குடும்பத்தின் சிறுவர்கள் இருவரையும் பினாங்குக்கு நாடு கடத்தி கடுமையான தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. சின்னமருதுவை சிறையிட்ட இரும்புக் கூண்டோடு கொண்டுவந்து தூக்கிலிட்டிருக்கிறான் இந்த அக்கிரமக்காரன். 

மத ஒற்றுமை நல்லிணக்கம் கொண்ட மருது சகோதரர்கள் முஸ்லீம் கிறிஸ்துவர்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் அமைக்க அனுமதித்ததோடு  திருமோகூர், குன்றக்குடி ஆகிய ஸ்தலங்களுக்கும் திருப்பணி செய்திருக்கிறார்கள். காளையார் கோயில் கோபுரத்தையும் கட்டி இருக்கின்றார்கள்.

மருதிருவர் நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது. திருப்பத்தூரில் இருவருக்கும் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. குன்றக்குடிக் கோயிலின் உள்ளே சிவன் சன்னிதிக்கு எதிரில் மருதிருவரின் ஆகிருதியான முழு உருவக் கற்சிலைகள் இருபுறமும் பத்தடி உயரத்தில் தூணோடு சேர்த்து நிறுவப்பட்டுள்ளன. அதே போல் காளையார் கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. மருது வீரர்களின் நினைவாக 2004 இல் அஞ்சல்தலைகள் வெளியிட்டு கௌரவம் அளித்துள்ளது அரசு. 

நாட்டு விடுதலைக்காகப் போராடிய மருதிருவரை ஆங்கிலேயர் அழித்திருக்கலாம். ஆனால் அவர்களின் வீரத்தை ஆங்கிலேயர்களால் அழிக்கவும் அவர்களின் புகழை மறைக்கவும் முடியவில்லை, என்றும் அவர்கள் வீரமும் துணிச்சலும் புகழும் மக்கள் மனதில் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கும்  என்பதே உண்மை. 

 

5 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

வீர வரலாறு. எங்கள் வீட்டில் "மானம் காத்த மறுத்து பாண்டியர்" என்னும் புத்தகம் ஒன்று இருந்தது. சிறு வயதில் வாசித்திருக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரிய மாவீரர்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாசிக்க வாசிக்க மனதில் ஒரு பெருமிதம்...

நன்றி சகோதரி...

G.M Balasubramaniam சொன்னது…

சரித்திரங்கள் திருத்தி எழுதப்பட வேண்டும் முதல் சுதந்திரப்போராட்டம் பற்றியது

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

"நாட்டு விடுதலைக்காகப் போராடிய மருதிருவரை ஆங்கிலேயர் அழித்திருக்கலாம். ஆனால் அவர்களின் வீரத்தை ஆங்கிலேயர்களால் அழிக்கவும் அவர்களின் புகழை மறைக்கவும் முடியவில்லை, என்றும் அவர்கள் வீரமும் துணிச்சலும் புகழும் மக்கள் மனதில் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கும் என்பதே உண்மை." என்ற கருத்தை உளநிறைவோடு வரவேற்கிறேன்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...