திங்கள், 28 மே, 2012

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை. :- **************************************************

சாஸ்திரி பவனில் பெண்கள் சங்கத்தலைவியாய் இருக்கும் மணிமேகலை தங்கள் தலித் இனப்பெண்கள் வெளிவந்து தங்கள் சாதி பெயரை சொல்லவே பயப்பட்ட நிலையில் தலித் பெண்களுக்கென்றும் ஒரு சங்கம் ஆரம்பித்தார். அவர்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது பெண்கள் ஊக்கம் பெற்று தங்கள் நிலையை வெளியே சொல்வதாகவும் , அதனால் அவர்களுக்கெதிரான தவறுகள் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.

சமீபத்தில் IWID -- INITIATIVES : WOMEN IN DEVELOPEMENT என்ற NGO நடத்திய மாநாட்டில் பெண்கள் பணியிட சூழல் பற்றிய அனுபவ பகிர்வு என்ற தலைப்பில் பேசி இருக்கிறார். அங்கு பலவிதமான பெண்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார். பெண்குழந்தைகளுக்கான ஆரோக்கியம் கிராமப்புறப் பகுதிகளில் சரிவர இல்லை என்றும் இனி அடுத்து தன்னுடைய கவனம் அதில் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் சொன்னார்.

இவர் சென்ற சில மாதங்களாக பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கும் ப்ராஜெக்டை ஒவ்வொரு ஸ்கூலிலும் சென்று தன் தாயார் நடத்தும் அட்சயா பவுண்டேஷம் மூலம் விழிப்புணர்வுக்கு கொண்டு வந்ததாக சொன்னார். எல்லாரும் பறவைகளுக்கு உணவளிப்போம் ஆனால் தண்ணீர் வைக்க மாட்டோம். அதை அங்குள்ள பள்ளிப் பிள்ளைகள் உணர்ந்து இனி தாங்களும் செய்வோம் என சொன்னதாக பெருமையுடன் சொன்னார்.

இவரது தாயார் நடத்தும் அட்சயா பவுண்டேஷன் மூலம் எல்லா கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கும் சென்று அங்கு சிறப்பாகப் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் விதமாக விருதுகளும். புத்தகங்களும் பரிசளிக்கிறார். மனித நேயத்தோடு செயல்படும் மணிமேகலை தான் ஒரு தலித் இனப் பெண் என சொல்லிக் கொள்வதில் பெருமையுறுவதாகவும். பெண்கள் மற்றும் தலித்துக்கள் உரிமைக்குப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்காரின் உருவச் சிலையை சாஸ்திரி பவனில் வைக்க அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். சீக்கிரமே இவரது எண்ணங்கள் நிறைவேறட்டும். இவரது சேவைகள் இன்னும் பலருக்குக் கிடைக்கட்டும். !!!.


வெள்ளி, 25 மே, 2012

புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம். ( BAPASI)

புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம்.
 ****************************** ********************

புத்தகம் வாசிப்பது என்பது ஒரு மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. சென்னையில் நடக்கும் 35 ஆவது புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக விரும்பிகளுக்கான ஒரு திருவிழா. இதில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி மற்றும் பிற மொழி நூல்களுக்கான கிட்டத்தட்ட 400 பதிப்பகங்களும் புத்தக விநியோக நிறுவனங்களும் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். சென்ற வருடங்களை விட இந்த வருடம் இணையதளத்திலும், வலைத்தளங்களிலும் எழுதுவோரும் வாசிப்போரும் அதிகரித்திருக்கிறார்கள்.

கேபிள் சங்கர் என்ற வலைப்பதிவர் கிட்டத்தட்ட 5 புத்தகங்களும். யுவகிருஷ்ணா 4 நூல்களும் வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் மற்றும் மற்ற வலைப் பதிவர்கள் வெளியீட்டிலும் புத்தகங்கள் நிறைய வெளிவந்து சக்கைப் போடு போடுகின்றன. இணையதளங்களிலும் நூல்கள் இணைய இதழ்களாக வாங்கப்பட்டு வாசிப்பாளர்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் புத்தகம் வாங்கி வாசிப்பவர்கள் பற்றி  ஒரு தமிழ்ப் பதிப்பாளர், ஒரு ஆங்கிலப் பதிப்பாளர், ஒரு புத்தக நிலைய உரிமையாளர் ஆகியோரிடம் விசாரித்தோம்.

எமரால்டு பதிப்பக உரிமையாளர் திரு . ஒளிவண்ணன் கூறும்போது நிறைய புதுப்புத்தகங்கள் வருடந்தோறும் வெளியிடப்படுவதாக சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வருடம் முழுமைக்கும் 25 ஆங்கில புத்தகங்கள் வெளியிடப்படுவதாகவும் , இது போக ஆன்லைனில் இன்னும் அதிக அளவு நூல்களைப் பதிப்பித்து வருவதாகவும் சொன்னார்.

புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் முதலில் கிடைக்க வேண்டும். பின்பு பதிப்பகங்கள் பேரைப் பொறுத்தும் , அதன் பிரபலத்தைப் பொறுத்தும் புத்தகங்கள் வாங்கப்படுவதாக சொன்னார். கிட்டத்தட்ட 35 வருட பாரம்பர்யம் உள்ள எமரால்டு பப்ளிஷிங் நிறுவனத்தை தன் தந்தை காலத்துக்குப் பின் புத்தக வாசிப்பில் உள்ள நேசத்தாலே தொடர்ந்து நடத்தி வருவதாகவும். உலகளாவிய அளவில் அது நிறைய வாசகர்களைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

குழந்தைகளுக்கான பசில்ஸ்( PUZZLES) புதிர்ப்போட்டிகள், மற்றும் சுய முன்னேற்ற நூல்கள், ஆங்கிலம் பேச கற்பிக்கும் நூல்கள், முதலீட்டு நூல்கள் அதிகம் விற்பதாகவும் . தற்போது E-BOOK எனப்படும் மின்னிதழ் வாசிப்பு அதிகரித்திருப்பதாக சொன்னார். விநியோகஸ்தர்கள் மூலமும் தங்கள் தரமான புத்தகங்களின் தொடர் வெளியீட்டின் முலமும் இந்த வெற்றியை அடைந்திருப்பதாகச் சொன்னார்.

அடுத்து தமிழின் மிக முக்கியமான பதிப்பகமான உயிர்மையின் உரிமையாளர் கவிஞர் திரு மனுஷ்யபுத்திரன் 10 வருடங்களாக உயிர்மை கிட்டத்தட்ட 500 புத்தகங்கள் வெளியிட்டுள்ளதாகவும் அதில் மொழிபெயர்ப்பு நூல்களும் அடக்கம் என சொன்னார். ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்கள் 10 இருக்கும் என சொன்னார். இலக்கியம் படிக்கும் இளைஞர்கள் 75 % அதிகரித்திருப்பது நல்ல ஆரோக்கியமான விஷயம் என்றும் அதனால் அவர்கள் எதைப்படிக்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும் எனவும் சொன்னார்.

பொது அறிவு, அறிவியல், கணினி இவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல இலக்கியத்தையும் வாழ்வியலுக்கும் மொழி அறிவுக்கும் , மொழி ஆற்றல் பெருகவும் படிக்கவேண்டும் என கூறினார். தங்களுடைய வேர்களை அடையாளம் காட்டும் இலக்கியம், வாசகர்களால் துய்த்துணரப்படவேண்டும் என்ற தீராத தாகத்தாலே இன்னும் உயிர்மை இலக்கிய நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினார். கட்டுரைகள் உலகியலை அதிகம் பிரதிபலிப்பதால் நன்கு விற்பதாக கூறினார். கவிதை விரும்பிகளுக்கான அருமையான கவிதைத் தொகுதிகளையும் உயிர்மை வெளியிட்டு வருகிறது. ஆசிரியர்களின் பெயருக்காகவே புத்தகங்கள் விற்பதாக கூறினார். சுஜாதா, எஸ். ரா போன்றவர்களின் நூல்கள் அதிகம் விற்பதாக கூறினார், ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட் மார்க் போன்றவை தங்கள் புத்தகங்களுக்கு உரிய இடம் கொடுப்பதாக கூறினார்.

ஆன்லைனில் தமிழில் புத்தக வாசிப்பை கொண்டு வந்தது உயிர்மையும் கிழக்குப் பதிப்பகமும்தான் எனவும் அதில் க்ரெடிட் கார்டு மூலமும் பணம் வாங்கிக் கொள்ளப்படுவதான வசதியும் உள்ளதாக சொன்னார். ஒரு எழுத்தாளராகவும் இருப்பதால் உயிர்மையின் மூலம் வருமானம் கருதாது நம் இலக்கியத்தை இளையோரிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள் அவர்கள் மின்னிதழ்கள் அதிகரித்து வந்த போதிலும்.புத்தக விற்பனை வருடம்தோறும் கூடி வருவதாக சொன்னார். ஆன்லைனிலும் தங்களுடைய புத்தகங்கள் விற்கப்படுவதாக சொன்னார். 5 ரூபாயில் இருந்து 1,00,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்படுவதாக சொன்னார். எஸ். ராமகிருஷ்ணன் , ஜெயமோகன் சாருநிவேதிதா, யுவகிருஷ்ணா நூல்கள் அதிகம் விற்கிறது. பொதுவாக தமிழில் சுயமுன்னேற்ற நூல்களுக்கு வரவேற்பு அதிகம் என்றும். புதிதாக காமிக்ஸ் ரசிகர்களும் அதிகரித்து வருவதாக சொன்னார். நாம் சின்னப்பிள்ளையில் ரசித்த எல்லா காமிக்ஸ்களும் ( அணில் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் ) வந்து ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

புத்தகத்திருவிழா நிஜத் திருவிழா போல சக்கைப் போடு போடுகிறது. ஒவ்வொரு ஸ்டாலும் இன்ஷூர் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்டால் உரிமையாளர் 17,500 ரூபாய் கட்டியுள்ளதாகவும் , 3. 00,000 ரூபாய் வரை தன் ஸ்டாலில் புத்தகம் வைத்துள்ளதாகவும், அதில் 20 சதவிகிதம் விற்பனை செய்துள்ளதாகவும் சொன்னார்.எல்லா புத்தகங்களும் 10 சதவிகித தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. நீண்ட நடைபாதைகள், உணவுக்கடைகள், மேடை என்று எல்லாம் தாண்டி வண்டியை விட்டிறங்கி பொது ஜனம் உள்ளே வர கொஞ்சம் வயதானவர்கள், மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்கள் சிரமப்படுகிறார்கள். ஊனமுற்றோர் புத்தகம் வாங்க வசதியாக உள்ளே சக்கரநாற்காலிகள் வழங்கப்படுவதாக கேள்வியுற்றேன். வண்டிகளை நிறுத்துமிடம் ஒரு இடமாகவும் வாயில் இன்னொரு இடமாகவும் இருப்பது மட்டுமல்ல சில கடைகளின் எண்கள் வேறொரு இடத்தில் தொடங்குவதால் தேடி வருவோருக்கு சில சிரமங்களும் ஏற்படுகிறது.

அதோடு அதாக நிறைய சொற்பொழிவுகளும், குழந்தைகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தி, பரிசு வழங்கி தினமும் புத்தகம் என்னும் தெய்வத்தை பபாசி என்னும் தேரில் உலா கொண்டு வந்து சீராட்டும் பபாசி மெம்பர்களும்., புரவலர்களும், புத்தக நிலைய உரிமையாளர்களும் , கடைக்காரர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நன்கு படித்த ஒரு உயர்ந்த சமூகத்தை, வன்முறைகளற்ற சமுதாயத்தை., புரிந்து கொள்ளல்களுடன் கூடிய ஒரு உலகளாவிய நட்பை புத்தக வாசிப்பால் மட்டுமே கொண்டுவர இயலும் என்பதால் பல்வேறு இடையூறுகளும் கடந்து இதை நடத்துபவர்கள் சிறப்பிக்கப்படவேண்டியவர்கள். .

எங்கே எல்லாரும் கிளம்பிட்டீங்க.. டிவியையே பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு கொஞ்சம் புத்தக உலகத்தையும் சுவைத்துப் பாருங்கள். நீங்களாகவே சொல்வீர்கள்..புத்தகங்களை வாசிப்போம் வாழ்வை நேசிப்போம் என்று.


வியாழன், 24 மே, 2012

நாக. மெ. சுப. வள்ளியப்ப செட்டியார். நூற்றாண்டு விழா

இன்றோடு 100 ஆண்டுகள் !

 ”உழைப்பே உயர்வு தரும்!” என எங்களுக்கு சொல்லித் தந்த தந்தையே . . .

 6 புத்தகங்கள் எழுதிவிட்டேன் !  50,000 பிரதிகள் விற்றுவிட்டன. 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள்;

அதுமட்டுமா . . .? கணக்கு எழுதுவதிலிருந்து பங்குச் சந்தை வரை . . . எல்லாமே உங்களிடம் கற்றதும் பெற்றதும்.

உங்களை நினைக்காத நாளில்லை . . . எல்லாவற்றிற்கும் நன்றி!  

---- பங்குச்சந்தை இயக்குநர் நாகப்பன் வள்ளியப்பன்.

எங்கள் பேரன்புக்குக்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா உங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் எங்களைச் சூழ்ந்திருக்கட்டும், 

புதன், 23 மே, 2012

மனமாச்சர்யங்களை உடைப்போம். அணைகளை அல்ல. & புக் கிளப் இந்தியா ஒரு அறிமுகம்.

வள்ளங்களும் ஓடங்களும் கணக்கற்றுக் கிடப்பது மலையாள நாடு. கடவுளின் தேசம் எனப் புகழப்படும் அளவு வளமை, செழிப்பம். நூறு சதவிகிதம் கல்வியறிவு பெற்ற மக்கள். கம்யூனிஸ்ட் ஆட்சிதான் பெரும்பாலும். இருந்தும் எல்லாருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து தரும் பரந்த மனப்பான்மை இல்லை.

தமிழகத்திலிருந்து அரிசி மற்ற அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது போல டீக்கடை நாயராகட்டும், நகைக்கடையாகட்டும், நிதி நிறுவனமாகட்டும், நடிப்புத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் நடிகையராகட்டும். தமிழ்நாட்டில் எல்லாருக்கும் இடம் உண்டு. எல்லாருக்கும் இருக்கவும் வாழவும் எல்லா உரிமைகளும் வழங்கி மதம், இனம் மொழி சாரா தன் இறையாண்மைமை நிரூபித்துள்ளது தமிழ்நாடு.

எல்லாவற்றையும் உற்பத்தி செய்து மற்ற மாநிலத்தவருக்கு வழங்கும் தமிழகத்துக்கு தண்ணீராகட்டும், மின்சாரமாகட்டும் மற்ற மாநிலங்கள் தருவதில் தயக்கம் காட்டவே செய்கின்றன. தமிழனுக்கும் கொடுக்கும் போது மட்டும் அவற்றின் கை சுருங்கி விடுகிறது.

தமிழக கேரள எல்லையில் இருக்கும் முல்லைப் பெரியாற்றின் மூலம் 225 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு விவசாயத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் கிடைக்கிறது. வைகையாற்றில் தேக்கப்படும் இந்நீர் தேனி பகுதியின் விவசாயத்திற்கு உதவுகிறது. இதன் தேவையே இன்னும் அதிகமாய் இருக்கிறது. இந்த சூழலில் இது ஒரு நூற்றாண்டுக்கு முன் செஞ்சாந்தையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டப்பட்டது என்பதால் இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக கேரள அரசியல்வாதிகள் ஒரு பிரசாரத்தை மேற்கொள்ள அது கேரளாவிலும்., நீர்வரத்து குறைந்தால் என்ன செய்வது என்ற கவலையை தமிழக விவசாயிகளிடமும் விதைத்துத் தேவையற்ற போராட்டங்களையும் சச்சரவையும் உருவாக்கியுள்ளது.

கேரளாவிலிருந்து உயிர் தப்ப பயந்தபடி கானகம்வழியாக எளிய தமிழகமக்கள் வருவதாக செய்தித்தாள்கள் சொல்லுகின்றன. தமிழகத்தில் பல ஆண்டுகளாக நம்முடைய தெருமுக்கின் அடையாளச் சின்னங்களாக இருந்த அப்பாவி நாயரின் கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாக மக்கள் அங்குமிங்கும் உருட்டப்படுகிறார்கள்.

வன்முறைகளற்ற தேசத்தை உருவாக்க காந்தி பாடுபட்ட நம் நாட்டில் தங்கள் சுயலாபத்துக்காக மக்களிடம் தேவையற்ற பீதியை கிளப்பும் முயற்சி பல ரூபங்களில் நடந்துவருகிறது.

நம்நாட்டில் அந்த அணையை கட்டும்போது அதன் பொறியாளரான பென்னிகுயிக் தன் மனைவியின் நகைகளைக் கூட அடகுவைத்துக் கட்டினாராம். ஒரு வெளிநாட்டுக்காரருக்கும் நம் மண்ணின் மேல் இருந்த சேவை மனப்பான்மையை என்ன என்று சொல்ல.? இன்று அதே மண்ணைச் சேர்ந்த சொந்த சகோதரர்களாகிய நாம் நம் சகோதரர்களுக்கே தண்ணீரை மறுக்கிறோம், மின்சாரத்தை மறுக்கிறோம். அது வீணானாலும் பரவாயில்லை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்ற மனோபாவம் மாறவேண்டும்.

தமிழக அரசு மத்திய நதி நீர் ஆணையம் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சொல்லிக் கேட்கிறது. அதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இன்னும் 11.25 டி எம் சி தண்ணீர் தேவை நம் மக்களுக்கு. ஆனால் அந்த அணையை இன்னும் உயர்த்தவும் பலமுள்ளதாக்கவும் அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்த சிலவற்றையும் நிறைவேற்ற முடியவில்லை.

மார்ஷல் நேசமணி அவர்கள் தமிழக கேரள எல்லைப் போராட்டத்திலும் தமிழகத்துக்கு நீர் கிடைக்க வேண்டியும் போராடிய போது எதிர்த்த கேரளத்தவருடன் கேரள மக்கள் கை கோர்த்தனர். ஆனால் நேசமணி அவர்கள் பெரும் பலம் கிடைக்காமல் நம் சகோதரர்களின் ஆதரவு கிடைக்காமல் தனித்தே போராடினார். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் நம் சொந்த நாட்டுக்குள்ளேயே நமக்கு சாதகமாக நீர்வழங்கும்படி இடப்பட்ட சட்டங்களை நிறைவேற்றும்படி போராட வேண்டிவருமோ. நதி நீர் எல்லாம் தேசியமயமாக்கப் படவேண்டும். இதை குறிப்பிட்ட மாநிலத்தவர் தங்களது என உரிமை கோரக்கூடாது.

உள்ளபடியே அந்த அணையில் விரிசல் இருந்தால் செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட அனுமதிக்கப்படவேண்டும். அதை விட அதிகம் விரிசல் உள்ள அணைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த அணையை மட்டும் உடைக்கவேண்டும் . இன்னும் இரு சிற்றணைகள் கட்டப்படவேண்டும் எனச் சொல்வது அரசியல் ஆதாயத்துக்காகவும், தமிழர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்வுக்காகவும்தான்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பகிர்ந்து வாழ்வோம். பிரச்சனைகள் வந்தால் சேர்ந்தே சமாளிப்போம் . இதில் தனிமனிதர்களைத் தாக்க மாட்டோம் என ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். இதை விடுத்து மற்ற மாநில மக்களின் கடைகளை உடைப்பது, சொத்துக்களை சூறையாடுவது, மரங்களை வெட்டுவது, பாலை கொட்டுவது என அழிவு வேலைகளில் ஆக்கபூர்வமான தமிழரும், கேரளத்தவரும் ஈடுபடக்கூடாது. எதாயிருந்தாலும் மனித உழைப்பு, மனித உயி்ர் மதிக்கப்படவேண்டும்.

எனவே மன மாச்சர்யங்களை உடைப்போம், மனிதநேயத்தோடு அனைத்தையும் நம்முள் பகிர்ந்து வாழ்வோம்.

***********************************************************************************


புக் கிளப் ஒரு அறிமுகம்:-
**************************** .

புக் கிளப் இந்தியா..இது வாசிப்பனுபவம் மறந்துவிட்ட மக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் திரும்பக் கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

திரு ஜி். ஒளிவண்ணன் அவர்கள் ரோட்டரி கவர்னராக இருந்தவர். இவர் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் அதிபரும் கூட. சுமார் 25 வருடங்களாக பதிப்பாளராக புத்தகங்கள் வெளியிட்டு வரும் இவர் இணையத்தின் மூலம் புக் கிளப் இண்டியா என்ற வெப்சைட்டை இந்திய புத்தக வாசிப்பாளர்களுக்காக உருவாக்கி இருக்கிறார்.

இதன் குறிக்கோள் புத்தக நேசர்களை ஒரு பொதுப்படையான இணையதளம் மூலம் ஒருங்கிணைப்பதே ஆகும். இது நிறைய ஆலோசனைகள், மதிப்புரைகள், கலந்துரையாடல்கள், கருத்துப் பகிர்வு, மற்றும் புது புத்தகங்கள் மற்றும் எல்லா புத்தகங்களுக்குமான விமர்சனத்துக்கான ஒரு இணைய மேடை அமைத்துக் கொடுக்கிறது.

இதற்கான இணையதளத்தின் பெயர் www.bookclubindia.net . இது 2011 ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்டு இப்போது வரை 90 நகரங்களிலிலிருந்து பார்வையாளர்கள் தொடர்ந்து பார்வையிட்டும் தங்கள் பங்களிப்பை செய்தும் வருகிறார்கள். கிட்டத்தட்ட 60 வெளிநாடுகளிலிலிருந்து பார்வையாளர்களைப் பெற்றுள்ளது புக் கிளப்.

பதிப்பாளர்கள் தங்கள் புதுப் புத்தகம் பற்றியும் புத்தக வெளியீடு பற்றியும் பகிர்ந்து கொள்ள இது வகை செய்கிறது.ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரை, கருத்துரை இதில் வாசகர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் பற்றியும் ஒரு ஸ்பெஷல் இடம் கொடுக்கிறது.

இந்த வெப்சைட்டின் நோக்கம் புத்தக வாசிப்பாளர்கள் வாழ்வில் தங்களைப் பாதித்த எழுத்துக்களை, புத்தங்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே. எந்த புத்தகம் பற்றியும் உங்கள் கருத்துக்கள், மதிப்புரைகள், அலசல்கள் எதுவானாலும் அனுப்பவேண்டிய முகவரி bookclubindia@gmail.com.

புத்தகம் வாசிப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு புரட்டிப் போடும் அனுபவத்தை எப்போதேனும் உண்டாக்குகிறது. எனவே புத்தகத் திருவிழா நடைபெறப்போகும் இந்நேரத்தில் நீங்களும் புக் க்ளப் மெம்பராகி உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜனவரி 1 - 15 , 2012 இன்& அவுட் சென்னையில் வெளியானது.  


செவ்வாய், 22 மே, 2012

இனிய இல்லறம். அது நல்லறம். & இளம் மாஜிஷியன் ஆர்த்தி மங்களா சுப்ரமண்யம்.

இனிய இல்லறம்.. அது நல்லறம். :-
************************************

வீடென்று எதனைச் சொல்வீர்.. ஒரு கணவனும் மனைவியும் இணைந்து இறையாண்மையோடு செயல்படும் இடம்தான் வீடு.ஒரு இல்லம் இனிய இல்லமாக இருக்க கணவன் மனைவி இருவரின் கூட்டு முயற்சியும் புரிந்து கொள்ளலும் அவசியம். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற எண்ணம் கணவன் மனைவிக்குள் பொதுவா இருக்கக் கூடாது.. விட்டுக் கொடுத்துப் போதலும் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியம்.

வீடு என்பது கோயில் என்றால் அங்கே கணவனும் மனைவியும் குழந்தைகளுக்கு கடவுளைப் போல இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரின் பொறுப்பும் பளுவும் அதிகம். வாழ்வியலுக்கான பணம் சம்பாதிக்க கணவன் மனைவி இருவரும் ஓடி ஓடி சம்பாதிக்கிறாங்க.. ஆனா சிலர்தான் அதன் பயனை அனுபவிக்கிறாங்க.. சிலர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத தன்மையோடு வேறு வழியில்லாமல் சேர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. இந்த நிலைமையிலிருந்து உங்க வாழ்க்கை என்றென்றைக்கும் மகிழ்ச்சியானதா ஆக சில மந்திர வார்த்தைகள் உண்டு .. அதை உங்களோடு பகிர்ந்துக்கிறேன்..

முதலில் மனைவிகளுக்கு நீங்க உங்க கணவரை நேசிக்கிறீங்களா.. இதுதான் முதல் கேள்வி.. இதிலிருந்துதான் எல்லாம் தொடங்குது.. உண்மையா நேசித்தால் அவரிடம் இருக்கும் குற்றம் குறைகளைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.. உங்க பொருளாதார விபரங்களைப் பகிர்ந்து கொள்வது போல உங்கள் எண்ணங்களை , ஆசைகளை நிதானமான ஒரு சந்தர்ப்பத்துல அவருக்கு புரிய வைச்சிருக்கீங்களா..

எப்ப பார்த்தாலும் வருமானம் பத்தியும்., வரவு செலவு கணக்கு பத்தியும்.,அவர் அதிகமா செலவு செய்றது பத்தியும் அவங்க அப்பா அம்மாவுக்கு செய்றது பத்தியும் பேசிகிட்டே இருக்கீங்களா.. அப்போ அவருக்கு உங்களைப் பார்த்தா இன்கம்டாக்ஸ் ஆஃபீசரப் பார்த்தது போலத்தான் இருக்கும். எதை மறைக்கலாம் என முயல்வார். சில சந்தர்ப்பங்களையும் சில விஷயங்களையும் அவருக்காக விட்டுக் கொடுங்க. என்கொயரி ஆஃபீசர் போல கண்காணிச்சுகிட்டே இருக்காதீங்க.

எப்பவும் உங்க கூடவே இருக்கணும்னு நினைக்காதீங்க. அவருடைய நண்பர்களோடவும் அவர் நேரம் செலவழிக்க அனுமதிங்க.. ஒரு சின்ன சின்ன பிரிவும் உங்க தாம்பத்துல நெருக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு பிடிச்ச விஷயங்கள்ல அபிப்ராய பேதம் இருந்தாலும் அதை ரொம்ப சொல்லி காட்டிக்கிட்டே இருங்காதீங்க.

ஒரு விவாதம்னு வந்தா முடிந்தவரை அதை தவிர்க்கப் பாருங்க.. வீட்டுக்குள்ள உங்களோடு இருக்கிற அவர்தான் முக்கியம்.. நீங்க சண்டை போடக்கூடிய விஷயம் முக்கியம் இல்லை. அது போல அவருடைய ஆசைகள்., எண்ணங்கள் என்னன்னு காது கொடுத்துக் கேளுங்க.. அவர் பேசும்போது அவர் அருகில் அமர்ந்து கண்களை கவனியுங்கள்.. ஏதோ வேலை செய்துகிட்டு ஏனோ தானோன்னு கேக்குறது , போற போக்குல வாய்க்கு வந்த கமெண்டை உதிர்த்து அவரை சங்கடப்படச் செய்யாதீங்க..

நீங்க வேலை செய்யும் இடங்களில்., வெளிஆட்களுடன் பழகும்போது என்ன மரியாதை கொடுக்கிறீங்க.. பிடிக்காட்டி கூட வேலை ஆகணும்னா விட்டுக் கொடுத்து சிலசமயம் புன்னகையோடு சகிச்சுகிட்டு வேலையை வாங்கிக்கிறீங்க.. உங்களோடு வாழ்நாள் பூரா கைபிடிச்சு நடக்கப்போற கணவன் கொஞ்சம் அப்படி இப்படி கோச்சுகிட்டா மட்டும் வாழ்நாள் பூரா பேசாத மாதிரி வென்சன்ஸ் வச்சுக்காதீங்க..

எந்தக் கோவத்தையும் அப்பவே விட்டுடுங்க.. சொல்ல வேண்டியதை சரியா சொன்னா மற்றும்புரிய வைச்சா போதும். உங்க கோவம் அவங்களை யோசிக்க வைக்கணும். காயப்படுத்தக் கூடாது. உதவி தேவைன்னா கேளுங்க.. எல்லாரும் உதவ தயார்தான் . அது நீங்க எப்படி காரியம் சாதிச்சுக்கிறீங்கங்கறது முக்கியம். எதையும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்க.. பணத்தை மாதாந்திர செலவுகளுக்கு பட்ஜெட் போடுவதிலிருந்து பங்குச் சந்தையில் சேமிப்பது வரை.. அவரிடம் கேக்காம சீட்டு கட்டி பின்னாடி ஏமாந்து போறதை எல்லாம் இது தவிர்க்கும்.. ,

மனைவி என்பவள் இன்னொரு அம்மா மாதிரி.. எனவே உங்க கணவரை குழந்தையாக்கும் சாமர்த்தியம் உங்க அணுகுமுறையில்தான் இருக்கு.

இனி கணவர்களுக்கு .. அதே கேள்விகள்தான் .. நீங்க உங்க மனைவியை நேசிக்கிறீங்களா.. எப்ப பார்த்தாலும் அடுத்த பெண்களோட சமையல்., பழகும் முறைகள்ல கம்பேர் பண்ணிகிட்டே இருக்கீங்களா.. அவங்க ரொம்ப செலவு பண்றாங்க.. அல்லது உங்கள கட்டுப்படுத்துறாங்கன்னு நினைக்கிறீங்களா.. முதல்ல உங்க செலவுக் கணக்கை எழுதிப் பாருங்க.. உங்க தனியாளுக்கு செலவழிக்கிறத விட மொத்தக் குடும்பச் செலவும் ஆகாது..

டாஸ்மாக்கு , சிகரெட்டுன்னு எத்தனை எத்தனை பழகி வைச்சிருக்கீங்க.. ஹையர் லெவல் மக்களிடம் இதுக்கான செலவு ரொம்ப பாதிக்கிறது இல்லைன்னாலும் மிடில் க்ளாஸ் லெவல்ல இது கடுமையான பாதிப்பு ஏற்படுத்துது. அப்புறம் குடிச்சா உங்களுக்கு எல்லாம் பேச தைர்யம் வந்த மாதிரி நினைச்சது நினைக்காதது எல்லாம் சொல்லி வீட்டுல சண்டை போடுறீங்க.. சிலர் அடிக்கக் கூட செய்வாங்க.. இது குடும்ப வன்முறைன்னு உங்க மனைவி கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும். சிலர் வார்த்தைகளால துன்புறுத்துவாங்க. இன்னும் அப்பர் க்ளாஸ் ஆண்கள் நீ சொல்றத சொல்லு நான் செய்யிறத செய்றேன்னு செய்துகிட்டு இருப்பாங்க.

அப்புறம் உங்க வரவு செலவு சேமிப்பு எல்லாம் மனைவிக்கும் சொல்லுங்க. மனைவியிடமும் நல்ல ஆலோசனைகள் கிடைக்கலாம். எதையும் மனைவியை கலந்துகிட்டே செய்ங்க.. வங்கியில் உங்க இருவருக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருந்தா ரொம்ப நல்லது. மனைவியின் உறவினர்கள்.,மனைவியின் ஆசைகள்., எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அங்கீகரியுங்கள். வாழ்க்கையை ரொம்ப இனிக்க செய்யும் மந்திரம் இது.உங்ககூட வாழ வந்த பெண்ணை பிட்டர் ஹாஃபா ஆக்குறதும் , பெட்டர் ஹாஃபா ஆக்குறதும் உங்க கையிலதான் இருக்கு.

லீவு நாட்களில் மனைவி மட்டுமே வேலை செய்ய நீங்க டிவி., பேப்பர்., சினிமான்னு போகாம அவங்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்ங்க. அப்புறம் அவங்களையும் வாரம் ஒருநாள் வெளியே கூட்டிகிட்டு போங்க. வெளிநாடுகளில் இதனால விவாகரத்துகள் அதிகம். மனைவியோடு சேர்ந்து இருக்கும் நேரங்களிலும் அலுவலக போன்கால்கள்., பிசினஸ் மீட்டிங்குகள்., உத்யோக பிரச்சனைகளை பேசிக்கிட்டு இருக்காம கொஞ்சம் உங்க ரெண்டு பேரைப் பத்தி மட்டுமே பேசுங்க.. ஒரு வாழ்நாள் பூரா போதாதுங்க ஒருத்தர் தன் மனைவியை புரிந்து கொள்ள.. இன்னும் நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதும்.

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்க.. உங்க அம்மா எப்பவுமே உங்க கூட இருக்க முடியாது என்பதால் கடவுள் மனைவியை கொடுத்திருக்கிறார்.. அந்த தேவதையோடு மட்டும் சந்தோஷமா வாழுங்க.. ****************************************************************************************

ஆர்த்தி மங்களா.. இவர் யாருன்னு கேக்குறீங்களா.. ஆறு வயசிலேயே ஆப்ரா கா டாப்ரா/ ஜீபூம்பான்னு சொல்லி மாஜிக் செய்து எல்லாரையும் அசத்துனவங்க இவங்க. . இந்த 19 வயது தஞ்சாவூர் பொண்ணு இப்போ மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் விஸ்காம் படிக்கிறாங்க.

எல்லாரும்தான் மேஜிக் பண்றாங்க .. இவங்க கிட்ட என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா.. இவங்க அறிவியல் சம்பந்தமான மாஜிக் மற்றும் சமூக விழிப்புணர்வு மாஜிக் செய்றாங்க. சிகரெட்டின் தீமையை விளக்க ஒரு ப்ளாக் பாக்ஸில் சிகரெட்டை வைச்சு இதை விட்டு விலகி வரணும் அல்லது இதை விரட்டி விடணும். என்று சொல்லி சிகரெட்டை காண்பித்து மறைக்கும் மாஜிக்கை செய்வாராம்.

ராஜா., ராமசந்திரன்., கணேஷ் ஆகிய மாஜிக் நிபுணர்களிடம் கற்றுக் கொண்ட இவர் நிகழ்ச்சியைப் பார்த்து நையாண்டி தர்பாரிலும் யூகி சேது இவரை அழைத்து பங்கு பெறச் செய்தாராம். சினிமா மூலமும் மக்கள் கிட்ட மாஜிக் என்பது கண்கட்டு வித்தை இல்லை என சொல்ல விரும்புவதால் விஸ்காமில் டைரக்‌ஷன் கோர்ஸ் படிக்கிறார். பெண்களால் எல்லாம் செய்யமுடியாதுன்னு சொல்லப்பட்ட இந்த மாஜிக்கை வெற்றிகரமா செய்துகிட்டு வர்றாங்க.  ஆர்வத்தோடு இருக்குற  நிறைய திறமையுள்ள புதுமுகநடிகர்., நடிகைகளை வைத்து ஒரு திரைப்படம் இயக்க நினைக்கிறார்.

இவங்களும் இனி தன்னோட கருத்துக்களை, எண்ணங்களை எழுத்து வடிவில் இன் அண்ட் அவுட் சென்னையில் உங்களோட அடுத்த அடுத்த இதழ்களிலும் பகிர்ந்துக்க வர்றாங்க.. ரெடியா இருங்க.. ஆப்ராகா டாப்ரா..!!!

டிஸ்கி:- இந்தக் கட்டுரை டிசம்பர் 15 - 30, 2011 இன் & அவுட் சென்னையில் வெளிவந்தது. 


திங்கள், 21 மே, 2012

மின்சார சிக்கனம். தேவை இக்கணம்..( இன்& அவுட் சென்னைக் கட்டுரைகள் --2)

ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாட்டை அலுக்காம சலிக்காம லட்சக்கணக்கா கேட்டுக்கிட்டு இருக்கிற இளைஞர்களுக்கு தெரியுமா கூடங்குளம் பிரச்சனை.. மின்சாரம் எப்பிடி எல்லாம் நமக்கு கிடைக்குதுன்னு.. அனல் மின்சாரம், நீர் மின்சாரம்., அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரம். எல்லாம் எவ்வளவு பயன் தருது.. இதனோட நன்மை தீமை என்னன்னு..

அனல் மின்சாரம் நிலக்கரியிலும்., நீர் மின்சாரம் அணைகளில் இருந்தும்., அணு மின்சாரம் அணுவை பிளப்பது மற்றும் இணைப்பது மூலம் கிடைக்குது. இதில் நீர் மின்சாரமும்., அனல் மின்சாரமும் அதிகளவில் சேமிக்கப்பட முடிவதில்லை. அதிக அளவு பயனுக்காக அணு மின்சார உலைகள் அமைக்கப்படுது.. ஆனால் இதன் கழிவுகள் அச்சமூட்டுபவையாக உள்ளன. பல லட்சக்கணக்கான ஆண்டுகள் இதன் கழிவுகளை பராமரிக்கணும். இதன் செலவு மின்சார உற்பத்தி செலவை விட அதிகம்..இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் இன்றைய தேவைக்கு அவசியம் என்றாலும் பலர் வாழ்வில் உலை வைக்கும் இந்த உலை தேவையா என பார்ப்போம்.

இந்த அணு உலை அமைக்கப்படுவதை பலர் எதிர்க்கிறார்கள். அதன் காரணங்கள் சுனாமி போன்ற அழிவுகள்., இயற்கை சீற்றங்களான பூகம்பம் போன்றவற்றாலும் அணு உலையில் மிச்சமிருக்கும் அணுக் கழிவுகளால் மிகப்பெரும் ஆபத்து நிகழக்கூடிய சாத்தியங்கள் இருக்கு. இது அமைக்க்ப்படும் முன்பே பல முறை யோசிக்கப்பட்டு இருக்க வேண்டும். இப்போது முடியும் தருவாயில் பெரும் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்ட அணு உலை அந்தப் பகுதி மக்களுக்கு அச்சமூட்டுவதாயிருக்கிறது. எந்த திட்டமும் மக்கள் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தால் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறி ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு தனியார் முதலாளிகளும்., அரசாங்கமும் வேறு அல்ல. ஆனால் அதன்படி வழங்கப்படுவதுமில்லை. அவங்க இடம்., வாழ்வாதாரம் எல்லாம் பறிபோய் விடுகிறது. நர்மதா அணைத்திட்டமும் இப்படித்தான் மேதா பட்கரின் பெரும் போராட்டத்தால் தடுக்கப்பட்டது.

நம் நாடு தொழில் துறையில் முன்னேற வேண்டுமென்றால் இந்த பவர் ப்ராஜெக்டுகள் எல்லாம் அவசியம் என்று ஒருகருத்து இருக்கு. ஆனா இந்த மாதிரி மக்களின் பயத்தின் மேல் அமைக்கப்படுவது தேவையா என்ற கேள்வியும் இருக்கு.வெளிநாடுகளில் பல அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் இருப்பது 6 மட்டுமே என ஒரு சாரார் கூறும் போது இல்லை வெளிநாடுகளில் இருக்கும் சிலவும் மூடப்பட்டு வருகின்றன. என இன்னொரு சாரார் சொல்கின்றார்கள்.. இந்த சமயத்தில் நாம் ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு விபத்தையும்., போபாலில் நடந்த விஷவாயுக் கசிவையும்., செர்னோஃபில்லில் நடந்த அணு உலை விபத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதில் எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் எந்த விபரமும் தெரியாமல் மாண்டன என்று.

யாருக்கோ எங்கோ நடப்பதுதானே என நீங்க பாட்டுக்கு ஹெட்போனில் பாட்டு கேட்டுகிட்டு போகலாம்.. ஆனால் அது உங்களையே தாக்கினா அதன் பதில் என்ன சொல்லுங்க.. உங்களால முடிஞ்ச அளவு மின்சார உபயோகத்தை குறைக்கவாவது செய்ங்க. வீட்டில் இருக்கும் மின் பொருட்களை பட்டியலிடுங்கள். டி. வி., ஃப்ரிட்ஜ்., வாஷிங் மெஷின்., சி டி ப்ளேயர்., எம் பி 3., கம்ப்யூட்டர்., லாப்டாப்., ஏ சி., ரைஸ் குக்கர்., மைக்ரோவேவ் அடுப்பு., இண்டக்‌ஷன் அடுப்பு., மிக்ஸி., க்ரைண்டர்., ஜூசர்., காஃபி மேக்கர்., ட்ரெட் மில்., வாட்டர் ப்யூரிஃபையர், வாட்டர் ஹீட்டர் ..வாட்டர் மோட்டார்., இது போல எத்தனை லைட்டுகள்., ஃபான்கள் பத்தாததுக்கு பாட்டரி சார்ஜுடு வெஹிக்கிள்ஸ் வேற உபயோகிக்கிறீங்க நீங்க..

இது போல எல்லா அலுவலகங்களிலும்., கடைகளிலும் ஏசி யின் பயன்பாடு அதிகரிச்சுகிட்டு இருக்கு.. இத்தனை மின் பொருட்களை உபயோகிச்சுகிட்டு நாம க்ளோபல் வார்மிங்கை அதிகப்படுத்திக் கிட்டு இருக்கோம்.. இயற்கையை சிதைச்சுகிட்டு இருக்கோம். இதை எல்லாம் நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நம் சந்ததியினருக்கும் வெறும் நிலத்தைக் கூட விட்டு வைப்போமா தெரியாது.

பெரிய தொழிற்சாலைகளிலும்., வணிக வளாகங்களிலும்., கல்லூரி விடுதிகளிலும்., அரசு அலுவலகங்களிலும் சோலார் எனர்ஜி பயன்படுத்தப்படவேண்டும். அதை சேமிக்கும் வழி முறைகளையும் அதிகப்படுத்த வேண்டும். சோலார் குக்கர்கள்., சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தலாம். சாதாரண க்ளைமேட் உள்ள நம் நாட்டில் ஏசி யின் பயன் பாடு குறைக்கப்பட வேண்டும். இயற்கை காற்றையும் அனுபவியுங்கள்.. தேவையற்ற இடங்களில் லிஃப்டை உபயோகிக்காம படியை உபயோகியுங்க. தேவையற்று ஓடும் லைட் ஃபான்களை அந்த ரூமை விட்டு வெளியே வரும்போது அணைத்து விடுங்கள். தேவையின் பொருட்டே மின் சாதனங்களை சிக்கனமாக உபயோகியுங்கள்..

தெருக்களில் காலை முதல் மாலை வரையும் கூட தெரு விளக்குகள் அநாவசியமாக சில சமயம் எரிவதைப் பார்க்கலாம். இந்த மாதிரி அநாவசியமான மின்சார உபயோகம் பார்த்து சரிசெய்யப்பட வேண்டும், ஒலி பெருக்கிகள்., கூட்டங்களில் கண்ணைப் பறிக்கும் விளக்குகள் எல்லாம் கூட தவிர்க்கப்படலாம்.

ஒரு பிரஜையா சக பிரஜைகளுக்கு நீங்க செய்யக்கூடிய உதவி என்னன்னா அவங்க துன்பத்துல பங்கெடுத்து ஆறுதல் அளிப்பதுதான். அதுக்கு முதல் கடமையா இன்னிலேருந்து மின்சாரத்தை அளவோடு பயன்படுத்துவோம்னு உறுதி எடுத்துக்குங்க..

 டிஸ்கி:- இந்தக் கட்டுரை இன் & அவுட் சென்னை டிசம்பர் 1-15 இதழில் வெளிவந்தது.

சனி, 19 மே, 2012

அளவோடு நட்பு ( இன் & அவுட் சென்னைக் கட்டுரை -- 1)

இன்னிக்கு இருக்குற டீனேஜ் பசங்களுக்கு உள்ள பிரச்சனை என்னன்னா நல்ல படிக்கணும்., நல்ல வேலைக்குப் போகணும்., நல்லா கை நிறைய சம்பாதிச்சு கேள்வி கேப்பாரில்லாம என் ஜாய் பண்ணனும். அப்பிடித்தானே நினைப்பீங்க.. இது எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொரு பதின்பருவ ஆணுக்கும் உள்ள ஆசை என்னன்னா., “ பால்போலே பதினாறு . எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா” என்று சங்கரின் படப்பாடல் போல ஒரு தோழிதான். பதின் பருவத்துல இல்லாட்டியும் தன்னைப் புரிஞ்சி ஊக்கம் கொடுக்குற எல்லாப்பெண்ணையும் தோழியா நினைக்கிறாங்க.. அவங்க பதின்பருவப் பெண்ணா இருந்துட்டா ரொம்பவே சந்தோஷம்தான். அவங்களோட பைக்கில ஊர் சுத்தணும். என் கேர்ள் ஃப்ரெண்ட் என நண்பர்களுக்கு காட்டணும். அப்போ அப்போ அவகிட்ட இருந்து போன் கால் வரணும். அத கெத்தா நண்பர்கள் கிட்ட காமிச்சிகிட்டு போய் தனியா பேசணும் அவங்களுக்கு.

 பெண்களைப் பொறுத்தவரை பெண்களுக்கு அவங்களைப் பாராட்டுற எல்லாரையும் பிடிக்கும். ஆனா அந்தப் பாராட்டு உண்மைக்கு மிக நெருக்கமா இருக்கணும். பொய் சொல்லும் எந்த ஆணையும் பெண்ணுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

அடலஸண்ட் ஆண் அல்லது பெண் மனதில் ஏற்படும் கன்றுக்குட்டிக் காதல்., அல்லது இன்ஃபாச்சுவேஷன்., எதிர்பாலினக் கவர்ச்சி என்பது ஒரு காலகட்டம் வரை அவங்களை ஆட்சி செய்யுது. அதன்பிறகு அவங்க மெச்சூர்டா ஆகும்போது நல்லது கெட்டது., தேவையானது., தேவையில்லாதது புரியுது அந்த இனம் காணும் காலகட்டம் வரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பலவித குழப்பங்களில் ஆழ்கிறார்கள். நம் தோழி அல்லது தோழனுக்குப் பிடிக்குமோ இல்லையோ என பலதும் செய்வார்கள்.

எப்போது பார்த்தாலும் செல்போனில் மெசேஜ்., தூங்கினியா., சாப்பிட்டியா., குளிச்சியான்னு ஒரே அரட்டைதான். நடுராத்திரி அப்பா அம்மாவுக்குத் தெரியாம போர்வைக்குள்ள ஒளிச்சி வைச்சி கூட மெசேஜ் பண்ணிகிட்டு இருப்பாங்க. இதெல்லாம் ஒரு வயசு வரைக்கும்தான்னு நீங்க நினைச்சா தப்பு., அது சில கேஸ்ல இருவருக்கும் திருமணம் ஆகும் காலம் வரை கூட அதுக்குப் பின்னேயும் கூட தொடரும். இப்பதான் பிரச்சனையே ஆரம்பிக்குது. ஏன்னா எப்ப ஒரு உறவுல இரண்டுக்கு மேற்பட்டவங்க இருக்காங்களோ அப்பவெல்லாம் பிரச்சனைதான். அதுனால எந்த நட்புலயும் அளவோடு மெயிண்டெயின் பண்ணுறது நல்லது.

இதுவுமில்லாம பொஸஸிவ்னெஸ் ஒரு காரணம். என்னோடதுன்னு அந்த உறவுல இறுக்கிப் பிடிச்சீங்கன்னா உறவுநொறுங்கிப் போயிரும். மேலும் வேலையில் இருக்கும் சிலர் இருவர் வீட்டுக்கும் தெரியாம மணமாகும்வரை சேர்ந்து வாழ்வோம் என முடிவெடுத்து ஒண்ணா தங்குறது இதெல்லாம் தவறான முடிவுகள். நம் கலாசாரம் என்று ஒன்று உண்டு. அதுக்குன்னு சில பாரம்பர்யங்கள் உண்டு. அப்பா அம்மா சம்மதத்தோடு சேர்ந்து வாழணும் . இல்லாட்டா நல்ல நண்பர்களாகவே பிரிந்துவிடணும். யாரும் யார் வாழ்விலும் ஆக்கிரமிப்பு செய்து., பின் அவர்களைப் பிடிக்கவில்லை என்னும்போது கொலை செய்தல் அல்லது திருமணத்துக்குப் பின் கட்டிய வாழ்க்கைத் துணையை கொலை செய்தல் என விபரீதமான போக்குகளில் இறங்கி விடுகிறார்கள்.

எண்ணங்களைக் கட்டுப் படுத்தி வாழ்தல்., ஒழுக்கம்., நேர்மை., உறவுகளை நல்ல முறையில் கையாளுதல் போன்றவை முக்கியம். காதல்., இன்ஃபாச்சுவேஷன்., சுயநலம் மட்டுமே வாழ்க்கையல்ல. விட்டுக்கொடுத்தலும்., புரிந்துணர்வும்., கொண்ட நட்பே என்றும் ஜெயிக்கும். தேவைப்பட்டால் நம் தனிப்பட்ட வாழ்வு இனிமையாக நட்பைக்கூட ( நட்பு கொண்டோரிடம் புரிய வைத்து ) விட்டுக் கொடுக்கலாம்.

வெள்ளி, 18 மே, 2012

மைதானமும் மரமும்..

மைதானம் பொது..
மரமும் பொது..
பலநாளாய்ப் பழக்கம் மைதானத்தோடு.
கால் முளைத்ததிலிருந்து
களமேடை அதுதான்.
விளையாட்டு என்று
வெய்யிலை, மழையை
குளிரைப் பனியைச்
சேர்ந்து சுவைத்திருக்கிறேன் அதனோடு.
விருட்சங்கள் தோறும் ஊஞ்சலாடி
ஊக்க விதைகளை
வாதுமைக் கொட்டைகளைப் போல
உடைத்துத் தின்றதும் அங்குதான்.
பலாவாய் இனிக்கும்
பல மரங்கள்..
இருந்ததும் போனதும்
உறுத்தவோ வலிக்கவோ இல்லை.
இந்த மரத்துக்கும்
எனது வயதிருக்கலாம்..
பூவாய்க் காயாக் கனியாக் கிடந்து
விழுதுகளோடு உருப்பெற்று
விருட்சமாய் பிரம்மாண்டமாய்
பரிமாணித்திருந்தது.
முன்னொருமுறை ஒருத்தி
உரிமைப்படுத்த முயன்றபோது
விரட்டியடித்து விருட்சத்தைத்
தக்கவைத்துக் கொண்டது மைதானம்
தனக்கேயான சொத்தாய்
வளர்ச்சிப் பரிமாணத்தில்
விழுதுகள் வெவ்வேறு திசைகளில்
துளிர்விட்டு வேறூன்ற ஆரம்பித்தன....
பரிணாமத்தின் திசையில்
இடம்பெயர வேண்டிய
கட்டாயம் வந்தது மரத்துக்கு.
நேற்றுவரை மரம் இருந்த இடத்தில்
இன்று மைதானத்தின்
ஈரமண்ணின் நிணமும்
விருட்சத்தின் சல்லிவேர்களும்
பால்துளிகளாய் சிதறிக்கிடந்த
பச்சைக் கவிச்சி வாசமும்
கலந்து கலங்க வைத்தன..
வேறு இடத்தில்
வேரூன்றி இருக்கலாம் மரமும்..
மறந்து விடலாம்
 பலகனிகளோடு குலுங்கும் மைதானமும்..
மைதானங்கள் அங்கேயே இருக்கின்றன.
இடப்பெயர்ச்சி அடையாமல்.,
நிலையாமைத் தத்துவத்தை விளக்கி
அகண்டு கிடந்த பள்ளம்
விளக்கமுடியாத கருந்துளையாய்ப்
படுத்திக் கொண்டே இருக்கிறது
வளர்ந்து விட்ட என்னை இன்னும்..

வியாழன், 17 மே, 2012

பொய்சாட்சி...

வெட்டப்பட்ட முடியையும்
நகத்தையும்
வேறொரு பெயர் சொல்லிப்
புதைக்கிறேன்.
தீர்ப்பு நாளில்
சாட்சி சொல்லக்கூடுமோவென்ற
பயத்தோடு.

அவையும்
நடுக்கத்தோடு கிடக்கின்றன
பெயர் மாற்றக் குழப்பத்திலும்.
கடவுள் முன்
பொய் சாட்சி சொல்வதற்கும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, அக்டோபர் முதல் வார உயிரோசையில் வெளிவந்தது. 


புதன், 16 மே, 2012

காபந்து..

ஒரு பொருளைப்
போர்த்தி வைப்பது
தூசியாவதில் இருந்து
காப்பாற்றுகிறது.
தூசி அடைவதில்
அதற்கு மெத்த மகிழ்ச்சி
என எண்ணி
காபந்து பண்ணுகிறோம் அதை.
அதால் சுவாசிக்க
முடியாத அளவு
முடிச்சை இறுக்கிக் கட்டுகிறோம்.
அது பேசாமல்
இருப்பதைப் பார்த்து
வீட்டிலிருக்கும் அனைத்தையும்
போர்த்தத் துவங்குகிறோம்.
அவற்றுக்குக் குளிர்வது போலும்
போர்வை கேட்டது போலும்.
கட்டுப்பாட்டில் இருக்கும்
எல்லாவற்றையும் போர்த்தியதும்
நிம்மதியாகிறோம்.
உறைகளின் மேலும்
தூசி படிகிறது. ,
காற்றின் போக்குவரத்தினால்.
ஜன்னல்களையும், கதவுகளையும்
திரைச்சீலைகளால் சாத்துகிறோம்.,
மழை., மின்னல்., குளிர்ச்சி
என்னவென தெரியாது.
புகை வெளியேறா
கணப்பே உயர்வென்று
புகைபோக்கிக்கும்
மின்சாரமூடி அணிவிக்கிறோம்.
அந்துருண்டையாய்
கற்பூரமாய்
கட்டிவைக்கப்பட்டது
காற்றான பின்னும்
போர்த்தப்பட்டவைகளுக்குக்
காவலிருக்கிறோம்.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 செப். மூன்றாம் வார உயிரோசையில் வெளிவந்தது.


திங்கள், 14 மே, 2012

பின் சுழற்சி..

பின் சுழற்சி:-
***************
ஆட்டோக்காரர்
வண்டி விட்டிறங்கி
இளநி அருந்தி
களைப்புத்தீர்கிறார்.
இளநி வெட்டியவர்
அரிவாளைப் போட்டுவிட்டு
பக்கத்து மாவுக்கடை
பெஞ்சில் அமர்கிறார்.
மாவுக்கடைக்காரர்
ஆட்கள் இல்லாததால்
மல்லிகைப்பூக்காரரின்
ஸ்டூலில் அமர்கிறார்.
மல்லிகைப்பூக்காரர்
வாடிக்கையாளரற்ற
வெய்யில் நேரத்தில்
ஆட்டோவில் அமர்ந்து
ஹாரனை அமுக்குகிறார்..
நான்கு வெய்யில்கள்
ஒருசேரக் கடக்கும்போது
மருந்துக் கடைக்காரர்
ஆட்டோவில் சரக்கு
ஏற்றுகிறார்..
ஐந்தாவது வெய்யிலைச்
சுமந்தபடி ஆட்டோ
நகரும்போது
இருக்கைகளின்
பின் சுழற்சியில்
கசிந்து வெளியேறுகிறது
வெப்பமும் களைப்பும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, செப்டம்பர் முதல் வார  உயிரோசையில் வெளிவந்தது.


சனி, 12 மே, 2012

பயணம்..

பயணம்;-
***********
தன்னைத் தானாய்
புதுப்பிக்க நேர்ந்தது.

நானும் அவளும்
பயணத்தில் இருந்தோம்.

தோணிகள் வெவ்வேறு.
ராமன்கள் கூட..

ஒரு நினைவுறுத்தலைக்
கற்பித்துக் கொண்டிருந்தது

அந்த ஆறு அதற்கும்
இரு கரைகளென.

தானாய் எப்படி இருப்பதென.
தவம் கலைத்து பெருகுவதென.

மூடிக்கிடந்ததை கரை தள்ளுவதென.
முக்காடுகளை தூக்கிப் போடுவதென.

குறுக்கே கடக்கிறோமா
சங்கமத்துக்கு செல்கிறோமா

நினைவற்றுப் பயணித்துக்
கொண்டிருந்தோம்.

ராமன் ராமனாய் இருப்பதன்
துயரத்தைப் பேசினான்.

சீதையாய் இருப்பதன் துயரம்
தெரிவிக்கப்படவேயில்லை.

மௌனமாய்க் கடந்தோம்
இருவரும் அருகருகாய்.

சுழலுக்காய் திருப்பத்தில்
காத்திருந்தோம்.

கவிழ்ந்தவுடன் நீந்தத்
தொடங்கினோம் தளைகள் விட்டு.

தேடிக்கொண்டே இருந்தான் ராமன்
மாரீச மானிலும் பொன் சிற்பத்திலும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 29,2011 உயிரோசையில் வெளிவந்தது.


வெள்ளி, 11 மே, 2012

”ஷில்ப விகாஸா..”. HUES OF HEART STUDIO.






HUES OF HEART ஸ்டூடியோவில் ஏப்ரல் 28, 2012  அன்று  அங்கு பயின்ற 12 குழந்தைகளின் ஆர்ட் ஷோ நடக்க விருப்பதாக என் தோழி மீனாக்ஷி மதன் அழைப்பு விடுத்திருந்தார்.

எனக்கு மீனாக்ஷியின் தொடர் முயற்சிகளும் , அழகான ஓவியங்களும் பிடிக்கும். இயங்கிக் கொண்டே இருக்கும் உயிர் ஓவியம் அவர். அவரிடம் பயின்ற குழந்தைகள் அங்கே "எங்க மீனாக்ஷி மிஸ்" அன்புடன் என்று விளித்து விளித்து மீடியாக்காரர்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்கள். விதம் விதமான ஓவியங்களுக்குள் குட்டிக் குட்டியாய்ப் பெண்ணோவியங்களும் அவர்களை ஊக்குவித்த அவர்களின் தாய் ஓவியங்களும் பார்க்க கண் கொள்ளாக் காட்சி.

அற்புதமான ஓவியங்கள். அக்ரிலிக், போஸ்டல் கலர், ஸ்கெட்சஸ் என்று. அதில் கணபதியும், ஒற்றைக் கண் மூடிய ஆந்தையும், சிப்பியால் உருவான மீனும், மெத்தையில் அமர்ந்து அளவளாவும் ராஜா ராணிக் கிளிகளும் ( க்ரீடம் அணிந்திருந்தன !) மற்ற எல்லாமுமே.  அழகும் கலைநயமும் பொலிய இருந்தன.

குழந்தைகள் பொழுது போக்கக் கற்பவை பல உண்டு எனினும். அதையும் ஊக்கத்தோடு கற்று தன்னுடைய ஆசிரியைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். நட்புக்கு இலக்கணம் நண்பர் “ பார்த்திபன்” என சொல்லலாம் . எளிமையான தன்மையான மனிதர். அன்று சிறப்பு விருந்தினர்களாக பார்த்திபன் அவர்களும், எஸ். வி சேகர் அவர்களும் வந்து குத்து விளக்கேற்றித் துவங்கி வைத்தார்கள். மக்கள் குரல், குறள் டிவி என்று சுற்றிலும் மீடியா கவரேஜ். ஒரு ஓவிய வகுப்பில் இவ்வாறு நடைபெறுவது எனக்குப் புதிதாக இருந்தது.

பூக்களை வரையும் வனிதை மீனாக்ஷி மதன் பூக்களைப் போன்ற பெண் குழந்தைகளின் இதயத்திலும் தன் அன்பை ஓவியமாக வரைந்திருந்தது அழகு. இன்னும் கலையார்வம் பெருகி அந்தக் குழந்தைகள் மிகப் பெரும் விருதுகள் பெறட்டும், தங்கள் ஆசிரியைக்கு சிறப்பு சேர்க்கட்டும்  என வாழ்த்துகிறேன்.

வியாழன், 10 மே, 2012

நவீன் KBB யின் நெல்லை சந்திப்பு...shoot at sight.

 சகோதரர் நவீன் கேபிபியின் நெல்லை சந்திப்பு ஆடியோ ரிலீஸ் மற்றும் ட்ரெயிலருக்கான அழைப்பு வந்திருந்தது முகநூலில். அவர் இந்த நிகழ்வை நிகழ்த்தும் முன்பே நாங்கள் அவரின் இந்தப் பாடலுக்கு அடிமை ஆகி விட்டோம்.. மிக இனிமையான பாடல். இதுதானே எங்கள் வீடு.. சந்தோஷம் பொங்கும் கூடு, தாய்தந்தை அன்பில் வாழும் ஜீவன் நாங்களே..

http://www.youtube.com/watch?v=UcM5qgRNyfU&feature=share
 
அந்த ஆடியோ லாஞ்சுக்கு நான் அன்று சாஸ்த்ரிபவனில் எனக்களிக்கப்பட்ட மதர் தெரசா அவார்டுடன் ( அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் டாக்டர் சாந்தாம்மா, என் அன்புத் தோழி ஏஜிஸ் ஆடிட்டில் பணிபுரியும் விஜயலெக்ஷ்மி ஜெயவேலு , மற்றும் சிலருக்கும் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலையால் வழங்கப்பட்டது ..). ப்ரசாத் லேப் சென்றடைந்தேன். எங்கே ஆடியோ ரிலீஸ் முடிந்து விட்டதோ என கவலைப்பட்டபடி. ஆனால் அங்கே தேர்த் திருவிழாக்கூட்டம். உள்ளே ப்ரிவியூ தியேட்டரும் நிரம்பி வெளியிலும் 200 பேர் நின்றிருக்க , அதிர்ஷ்ட வசமாக எனக்கு ஒரு சீட் கிடைத்தது. உள்ளேயும் அந்தக்கால த்யேட்டர்கள் மாதிரி எல்லா பக்கங்களிலும் பார்வையாளர்கள் நின்று கொண்டே பங்கேற்றார்கள்.

மேடையிலும் நல்ல ஸ்ட்ரென்த்.. நவீன் மற்றும் திருமலை .. மனிதர்களைச் சேர்த்திருக்கிறீர்கள். நல்ல மனிதர்களை மற்றும் அவர்கள் அனைவரின் அன்பையும்.. வாழ்த்துக்கள்..

 சென்று சேர்ந்த அவசரத்தில் சுற்றும் முற்றும் நோக்கியபோது என் நட்புக் குழாமையும் பின் வரிசை நாற்காலிகளில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அன்பு, கயல், மரியா, செல்வா. இன்னும் பலர். ஆனால் பேச இயலவில்லை. அந்தக் கூட்டத்தைக் கண்டதும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  இதில் அன்பு வேறு அவசரமாய் வேர்த்து வழிய சென்ற என்னைப் பார்த்து , அக்கா மேக்கப் இல்லாமல் வந்துவிட்டீங்களா “ என கலாய்த்தார்.

அப்போது நவீன் கேபி அந்தக் கூட்டத்திலும் கண்டு வரவேற்றுக் கை கொடுத்தார். தொகுத்து வழங்கக் கேட்ட போது எனக்குத் தெரியாத சினிமா பிரபலங்கள் நிறைய பேர் இருந்ததால் கூச்சப்பட்டு மறுத்து விட்டேன். ஆனால் தொகுத்து வழங்கிய நபர் அருமையாக ஒவ்வொருவர் பற்றிய தகவல்களையும் சிறப்பாகக் கூறினார்.

டி கிரியேஷன்ஸ் , திருமலையின் தயாரிப்பு. இணை தயாரிப்பு எஸ் . வெங்கடேசன், கதை திரைக்கதை இயக்கம் - நவீன் கேபிபி, இன்னும் சேவிலோ ராஜா, யுகேந்திரன் வாசுதேவன், சலீம், வெங்கல் ரவி, ஸ்பீட் சையத், பிரபாகரன், மூர்த்தி, மோதிலால், விஜயமுரளி,குமார், முருகன், விமல் ஆகியோரும் பங்களிப்பு செய்துள்ளார்கள். இதில் கே. ஜி. கன்னியப்பன் என்ற முகநூல் நண்பரும் ( வசனம்) பங்களிப்பு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 7 1/2 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில் ட்ரெயிலர் லாஞ்ச் செய்யப்பட்டது. மிக அழகான காட்சியமைப்புகள். உயர்தர தொழில் நுட்பம்,  இயல்பான வசனங்கள், சரளமான காட்சிகள் என்று சென்று கொண்டிருந்த ட்ரெயிலர் முடிவில் அதிரடியான காட்சிகளோடு பரபரப்பாகவும் அற்புதமாகவும்  இருந்தது. 

அன்று திரு ராம சுப்பு அவர்களுக்குப் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டப்பட்டது. நடிகர் ஷாம் இன்னும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள். எல்லாரின் அன்பையும் ஆசீர்வாத்தையும் காண முடிந்தது. அதில் அம்மாவாக நடித்த மீரா அப்போதுதான் வந்தார்.கிட்டத்தட்ட 8 1/2 மணியாகிவிட்டதால் கொஞ்சம் வேலைகள் காரணமாகக் கிளம்ப வேண்டியதாகி விட்டது.

கிளம்பும் நேரம் ஆடியோ ரிலீஸ் நல்லவிதமாக நடந்தது. அந்தப் பாடல் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது . இயக்குநர் விக்கிரமன் பேசும்போது தன் சொந்த ஊர் நெல்லை பற்றிய மனம் நெகிழ்ந்த குறிப்புக்களைக் கூறி படம் பற்றிய தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இரு வேறு விதமான அதிர்வுகளைக் கொண்டதாக  அதை அழகாக இணைத்துள்ளதாக அந்தப் படத்தின் ட்ரெயிலர் பற்றிக் குறிப்பிட்டார். மொத்தத்தில் அற்புதமான நிகழ்வு. கலந்து கொள்ள அழைத்தமைக்கு நன்றி நவீன் கேபிபி. திருமலை , நீங்கள், மற்றும் உங்கள் குழாமின் ஒட்டுமொத்த முயற்சியில் வெளியாக உள்ள நெல்லை சந்திப்பு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- முதன் முதலாக ஒரு படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் ட்ரெயிலர் லாஞ்சுக்காக என்னுடைய வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு இணையப் பதிவு இது

புதன், 9 மே, 2012

சுமந்தவள்..

சுமந்தவள்:-
************

அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
என்னைப் பிரியும் துயரம்.
முன்பே பிரித்திருக்கிறாள்.
பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.

எனக்கும் துயரம்தான்
இருந்தும் வலைபின்னிக்
கிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.

வழக்கம்போல அணைத்தாள்.
நெற்றியில் முத்தமிட்டாள்.
முதுகுச் சுமை விட
கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.

கடக்க நினைக்கிறேன்.
கண்ணீர் பெருகுகிறது.
உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
வயிற்றில் சுமந்தவளின் அன்பை..

டிஸ்கி:- இந்தக் கவிதை  ஆகஸ்ட் 17,  2011 உயிரோசையில் வெளிவந்தது.


செவ்வாய், 8 மே, 2012

நம்பர் ஒன்..

நம்பர் ஒன்...:-
**************
பெட்டிகள் முடிவு செய்கின்றன..
நம்பர்களை..
பெட்டிங்குகள் தீர்மானிக்கின்றன.
காமிராக்களின் ஃப்ளாஷ்களில்
ஷாம்பெய்ன் திறப்பவரை..

சேணங்கள் மாட்டி
திப்புவின் காலத்தில்
போரிட்டவை இன்று
நாட்டியமும்., ஜட்காவும்
மூக்கணாங்கயிற்றில் மாட்டி.

சந்தையில் சுழி பல்பிடித்து
தேர்ந்து வாங்கியது
சேணம் தகர்த்து
சூறாவளிப் பாய்ச்சலில்
பணக் கொள்ளு நோக்கி..

ஆறு அமர ஆடு.,
நாலு ..நின்று ஆடு
ரெயின் ரெயின் கோ அவே
ரன் ரன் கமான்..கமான்..
அதிகப்படி பந்தயத்தில்..

விளம்பரங்களுக்காய் ஆடி
காய்த்துக் காயம்பட்டு
பாய்ச்சல் ஒடுங்கும்போது
பக்கத்துப் பலகைகளில்
தாய்தேசம் நம்பர் ஒன் ஊழல்களில்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 15, 2011 உயிரோசையில் வெளிவந்தது


திங்கள், 7 மே, 2012

கிடை போடுபவன்...

கிடை போடுபவன்:-
****************************
மொழி புரியாதவனிடம்
சொல்ல வேண்டியதிருக்கிறது
குடும்பத்தைப் பிரிந்து
கிடை போடும் கதையை..

உரிமங்களைப் பதுக்கி
விற்பவனிடம் மட்டும்
விளைந்து கிடக்கிறது
பணமும் ஏராளமாய்.

மொழியறியும் தேவையற்றவன்
விளைவுகளின் தேவைக்காய்
விட்டுக் கொடுக்கிறான்
விளைச்சலுக்கான நிலத்தை.

மண்மணம் வீச கிடைபோட்டவன்
வெய்யிலிலும் மழையிலும்
காய்கிறான், மொழி விளங்காதவனின்
நிலத்தை வளப்படுத்த.

புழுக்கைகளால் நிரம்பிய மண்
செழிப்பாய் விளைந்து
பெருகும் போது சில கிடாய்களை
நரிக்குப் பறிகொடுத்துவிட்டு

சொற்ப ஜீவிதத்தோடு
நகர்கிறான்., கிடைபோடுபவன்
அடுத்த மொழி புரியாதவனின்
நிலத்தை வளப்படுத்த..

--- திரை வாய்ப்புக்காய் கதை சொல்லும் உதவி இயக்குனர்களுக்கு சமர்ப்பணம்.

டிஸ்கி.:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 8, 2011 உயிரோசையில் வெளிவந்தது. 


வியாழன், 26 ஏப்ரல், 2012

சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்..

சிகண்டியாய் இருப்பது
எளிதல்ல..
கொஞ்சம் குத்தும்
பார்வைகள் சேமிக்க வேண்டும்.
ஊசிகளில் உறைந்து
கிடப்பவனிடம் திரும்ப செலுத்த.

வெளுப்புக் கிரீமும்
வெண்மைப் பல்லும்
மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி
வெருண்டு செல்பவனுக்கு.

உடலைப் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது
ஹார்மோனல் இம்பாலன்ஸ்.

வணக்கத்திற்குரிய
கோலங்களில் நின்றுகொண்டு
பிறப்பவைகளை
அலங்கோலப்படுத்துவதில் தீர்கிறது
அவனது கலியுகம்.

கோபத்தை எல்லாம்
சேமித்து சூரியனாய்
எரிவதில் தீர்வதில்லை
சடையனின் வெண்சாம்பலும்.,
மோஹினி அமிர்தமும்..

வாழ்ந்தே கிடப்பது.,
எல்லா வினைகளையும்
அனுபவித்தே தீர்ப்பது
இதுவே ஆயுதம்தான்
இந்த ஜென்மம் முழுமைக்கும்.

யாரையும் தாக்காமல்
இடப்பட்டவைகளைக்
கடந்து வெற்றிக்கொடி
கட்டுவதிலே இருக்கிறது
வாழ்விற்குண்டான பலன்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1, 2011 உயிரோசையில் வெளிவந்தது. 

புதன், 25 ஏப்ரல், 2012

அந்த இரவு..

அந்த இரவு மிகவும்
நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.

அவள் ஆடைகளைக் கழற்றாமலேயே
நிர்வாணமாகிக் கொண்டிருந்தாள்.

பூட்டிய பொக்கிஷ அறையை
வார்த்தைச் சாவியால் திறந்திருந்தாள்.

சுமக்க முடியா லட்சம் பொன்னை
பாதாள அறைகளில் அடைத்து வைத்திருந்தாள்.

ஈர இடுக்கு மூலைகளில்
சிலந்தி வலைகள் படிந்து கிடந்தன.

வௌவால் முடை நாற்றமும்
எலிகளின் சிறுநீரும் கூட.

களிம்பு படாத கட்டிகளைக்
கைகள் நிறைய அள்ளி வைத்தாள்.

புஷ்பிக்காத பெண்மை பற்றி.,
கசிந்து பெருகாத முலைகள் பற்றி.,

தவறான ப்ரயோகங்களால்
காயப்பட்டது பற்றி.,

ரத்தம் பெருகி மூச்சிழந்து
சுருண்டு கிடந்தது பற்றி.,

உன்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும்
என்ற பொய்யான பசப்புகள் பற்றி

இழந்த சுயம் பற்றி., எதையோ
பற்றிக் கொள்ளத்தோன்றும் பயம் பற்றி

வீசப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள்
பாறைகளாய் சூழ்ந்திருக்கும் நிலை பற்றி

உடைத்து உடைத்து நீந்திக்
கொண்டிருந்தாள் நினைவு வெளியில்.

எல்லாம் உடைந்த விடியலில்
தலை கோதித் தூங்க வைத்தேன்.

உடைந்த சிற்கள் எல்லாம்
என் மனதிலும் கண்ணிலும் குத்திக் கிடந்தன.

இழந்த பணம் பற்றி சொத்து பற்றி மட்டும்
பேசவேயில்லை அவள்.

அவளை விடுவித்த அந்த விடியலில்
அந்த இரவு இன்னும் நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1., 2011 உயிரோசையில் வெளிவந்தது.


செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மெழுகு..

மெழுகு..:-
***********
முதுமையுற்றவரின் கண்கள்
நீரால் நிறைந்திருக்கின்றன.
கசியக் கசியத் துடைத்துக்
கொண்டேயிருக்கிறார்.
பழுதடைந்த கண்களின்
பலவீனத்தாலும் இருக்கலாம்.

இந்தியாவின் காலடியில்
கேட்பாரற்றுக் கிடக்கும்
ரத்தச்சொட்டாய்த் துளிர்த்துக்
கொண்டேயிருக்கிறது அது.
அதைப்போலச் சுண்டி
எறியமுடியவில்லை இதை.

தமிழை வளர்த்தவள்
தனியளாய் அமர்ந்து
மெழுகைச் செய்து
கொண்டிருக்கிறாள்.

வருமுன் காவாத
பெற்றவரின் கண்ணீரால்
செந்நிறமாக வடிந்து
கொண்டிருக்கிறது.,
சிறைக்குள் அந்த மெழுகு.

தானாடாவி்ட்டாலும்
தனை மறந்து
நீராய்ச் சிதறிக்
கொண்டிருக்கிறது..
சடசடப்போடு மெழுகு.

நீதி தேவதையோ
கண்கள் கட்டாமல்
நியாயத்தராசில்
எடையிட்டுக் கொண்டிருக்கிறது
மெழுகுகளின் உற்பத்தியை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 11.7.2011 உயிரோசையில் வெளிவந்தது. 


திங்கள், 23 ஏப்ரல், 2012

சொர்க்கவாசி.

சொர்க்கவாசி;-
****************
கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து
கீழிமைவழி கசிந்தன.
புத்தக வாசத்தோடே
பலகனவுகளும்.

அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும்
ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது
இன்னும் பேர்காணும்
பேரின்பம் வேண்டி.

 பெரிய விதையாயிருந்தும்
கிளைப்பது சின்னச்செடி
தலை சுற்றிப் பார்க்கிறது
சிறு விதை விருட்சங்களை.

வீரியம் அடக்கின செடிகளுக்கு
வெடித்தபின் வாய்க்கிறது 
எட்ட நினைத்த உயரம்
அளந்து வைத்த அளவு.

ரோஜாக்கள் மரமாவதில்லை
மாட்சிமை விருது பெறுவதில்லை
எனினும் கிடைக்கிறது
விருதளிப்பவரின் இதயத்தில் இடம்

புத்தக அடுக்குகளூடே
ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும்
ஒரு புதைகல்லறையும்
கிடைக்கப்பெற்றவர் சொர்க்கவாசி.

டிஸ்கி:- இந்தக் கவிதை மே 29.2011 திண்ணையில் வெளியானது.


சனி, 21 ஏப்ரல், 2012

மோனநிலை..

மோனநிலை..:-
*****************

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு
இன்னொருத்திக்கு கரும்புவில்
மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள்
சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி.

நான் சமையலறைக் கரண்டியுடன்
சிலசமயம் லாப்டாப்புடன்
எதுவும் சுமக்கா மோனநிலையில்
ஏன் எவருமே இல்லை.

டிஸ்கி:- இந்தக் கவிதை மே. 29, 2011 திண்ணையில்  வெளியானது.


 

புதன், 18 ஏப்ரல், 2012

விளிம்பற்றவை..

விளிம்பற்றவை:-
**********************
விளிம்பு மடிக்கப்படாதவை
பாதுகாப்பானவை அல்ல.
தம்ளர்களில் தட்டுக்களில்
கீறக்கூடிய அபாயமுடையவை

மலைப்பிரதேசங்களில்
பாதுகாப்பு விளிம்புகளைப் போல
திருமண விளிம்புக்குள் நிற்பது
உடலை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.

பொருளாதார விளிம்புகளில்
ஒதுக்கப்பட்டவர்கள் ஏழைகளாகவும்
சமூக விளிம்புகளில் ஒதுக்கப்பட்டவர்கள்
பாலியல் தொழிலாளியாகவும்
பால் மதிப்பீடு விளிம்புகளில்
தள்ளப்பட்டவர்கள் பால் சுயம்புகளாகவும்
ஒடுக்குமுறை விளிம்புகளில்
ஒதுக்கப்பட்டவர்கள் சமூக விரோதிகளாகவும்

விளிம்புநிலை மனிதர்களை
விளிம்பு அற்ற வெளியில்
வீசிக் கொண்டிருக்கிறது சமூகம்.

தம்ளர் விளிம்புகளில் ஏடுகளையும்
தட்டு விளிம்புகளில்
கருவேப்பிலையும் இன்னபிறவும்..

விளிம்பு மடக்கப்பட்டவை
பலசமயம் பாதுகாப்பானவை
சில சமயம் மழுங்கடிப்பட்டவை.

டிஸ்கி :- இந்தக் கவிதை வல்லமை மின்னிதழில் 8.3.2012 மகளிர் தினத்தில் வெளியானது
 

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

பள்ளி நினைவுகள்..( நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி)

காரைக்குடி அழகப்பா மாண்டிசோரி( ப்ரிப்பரேட்டரி)தான் முதன் முதலா நான் போன பள்ளிக்கூடம். அங்கே பள்ளிக் கூடம் குடில் குடிலாக இருக்கும். ஏப்ரல் பூ அங்கேதான் எனக்கு அறிமுகம். போகன் வில்லா பார்க்கும்போதெல்லாம் எனக்கு எங்க ஸ்கூல் ஞாபகம் வந்துடும். அப்புறம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு எல்லாம் பாட ஆரம்பிச்சுடுவேன்னா நம்பவா போறீங்க..:)

அங்கே படிச்சனோ இல்லையோ ஆண்டுவிழாவுல ஒரு பாட்டுப் பாட சொன்னாங்க. நல்லா கொழுக் மொழுக்குன்னு இருக்க பிள்ளைங்கள எல்லாம் மேடையில ஏத்தி ரைம்ஸ் சொல்ல சொல்வாங்கள்ள அதுதான். அந்தப் பாட்டு

“ தங்கம் போல பளபளவென்று ஆப்பிள் இருக்குது
தங்கைப் பாப்பா கன்னம் போல ஆப்பிள் இருக்குது
எங்க ஊரு சந்தையிலும் ஆப்பிள் விக்குது
எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன ஆசை இருக்குது”

அப்பிடின்னு கன்னம் எல்லாம் தொட்டு அபிநயம் செய்து பாட சொல்லி கொடுத்தாங்க. சமத்தா பாடினவுடனே ஒரு சில்வர் ஆப்பிள் டப்பாவுக்குள்ள நிஜ ஆப்பிளும் ஒரு யானை பொம்மையும் ( துணியில் தச்சு பஞ்சு அடைச்சு ஜம்கி , சரிகை வேலைப்பாடு செய்தது ) கிடைச்சுது.

எல் கே ஜி , யுகேஜி எல்லாம் முடிச்சதும் மன்னைக்கு அனுப்பிட்டாங்க.. பின்ன ஆயா வீட்டிலேயே வச்சு அலக்கொடுப்பாங்களா என்ன..:) மன்னார்குடி.. இது ராஜ மன்னார்குடி..அங்கே ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு, செகண்ட் ஸ்டாண்டர்ட். ஏன் இங்கிலிபீஸ் ல சொல்றேன்னா அது கான்வெண்ட்.செயிண்ட் ஜோசப் ஸ்கூல் அப்போதான் கட்டிக்கிட்டு இருந்தாங்க.  க்ளாஸ் எடுத்த டீச்சர்ஸும் ஆங்லோ இண்டியன்ஸ். டீச்சர்ஸுக்கு பிடிச்ச பொருளை வைச்சு ஒருத்தர ஒருத்தர் நிக் நேம்ல கூப்பிட்டுப்பாங்க. எனவே எனக்கும் அந்தப் பேருதான் ஞாபகம் இருக்கு. ஹார்லிக்ஸ் மிஸ். பனானா மிஸ். எங்க மிஸ் பேரு ஹார்லிக்ஸ் மிஸ். என் தம்பியோட க்ளாஸ் மிஸ் பேரு பனானா மிஸ்.

இங்கேயும் ஸ்கூல் ரைம்ஸ் ஆண்டுவிழாவில்  ஏதோ ஒரு ஆங்கில ரைம்ஸ் சொல்லி பரிசு கிடைச்சுது. ( நாம பாருங்க தமிழ் நேசக்காரி.. அதுனால நாம சொன்ன தமிழ் பாட்டு ஞாபகம் வச்சிருந்து இம்மி பிசகாம எழுதினோம். ஆனா பாருங்க ஆங்கிலப் பாட்டுன்னு அதை ஞாபகம் வச்சுக்கலை !)

இங்கே நான் ஒரு பரத நாட்டிய க்ளாஸ்ல சேர்ந்தேன். சேர்த்துவிட்டாங்க.. பதற வேண்டாம்.இன்னும் ஒரு நாட்டியப் பேரொளியை நீங்க இழந்துட்டீங்க. !. சாயங்காலம் ஆனா தை தை தித்தித்தை.. தாம் தாம் என்று ஒரெ ஸ்டெப்பை நாலு நாள் மடக்கி மடக்கி போட்டதுல முட்டி எல்லாம் வலி. அதோட முடிஞ்சுது நம்ம டான்ஸ் ஆர்வம். இன்னும்கூட ஆச்சர்யம்.  ஆடுறவங்க  எல்லாம் எப்பிடி இதையே வாரக்கணக்கா ஆடி பின்ன அடுத்த ஸ்டெப்பெல்லாம் கத்துகிட்டாங்ன்னு.

எங்க சித்தப்பாக்களும் நாங்களும் அடுத்து போன ஸ்கூல் மன்னார்குடியிலேயே ரொம்ப ஃபேமஸ்.. “ கணபதி விலாஸ். நடுநிலைப் பள்ளி” இது மன்னார்குடி ஒத்தத்தெருவில இருக்கு. இங்கே ஸ்கூல் படிக்கும்போது பள்ளிக் கூட எதிர்ல தூரத்துல ஆனந்த விநாயகர் கோயில் தெரியும். இங்கேருந்தே ஒரு கும்புடு மட்டுமில்ல. ரோட்டுல இருக்க மண்ணையும் எடுத்துப் பூசிக்கிறது. இதெல்லாம் நாமளா செய்யிறதில்லை. பள்ளிக்கூட மாணவமணிகளோட நம்பிக்கை. ஒரு நாள் எங்க வாத்தியார் நாராயணன் சார் திட்டுனவுடனேதான் இத சில பேரு விட்டோம். நீங்க எல்லாம் என்ன ஆட்டு மந்தைகளா. ஒருத்தன் எடுத்து நெத்தில பூசுனா எல்லாரும் பூசிக்கிட்டு வர்றீங்கன்னு விளாசிட்டாரு  .. வார்த்தையாலதான். அதுக்கப்பறமும் சில பேரு ரகசியமா பூசிக்கிட்டுத்தான் இருந்தாங்க.

இங்கதான் ப்ரேயர் சாங்ஸ் ல பித்தா பிறை சூடியையும், ஓங்கி உலகளந்தவையும் கத்துக்கிட்டேன். அலுவலகத்துக்குப் பக்கத்துல ஒரு தண்டவாளத் துண்டு தொங்கவிட்டு  இருக்கும் அதுல ஒவ்வொரு முக்கா மணி நேரத்துக்கும் ஒண்ணு , ரெண்டு , மூணுன்னு பெல் அடிப்பாங்க. பட்டாபி ராமன் சார்தான் தலைமை ஆசிரியர். வகுப்பு முடிஞ்சதும் எல்லாரும் போயி குச்சி ஐஸ், இலந்தை வடை, பெப்பர்மிண்ட், கல்கோனா, கடலை அச்சு, பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய், மாங்கா பத்தை, கொடுக்காபுளி,  எல்லாம் வாங்கி திம்பாங்க. ஆனா நம்ம வீட்டுல செம்ம கண்டிஷன்கிறதால நோ பாக்கெட் மணி.. ஒன்லி ஜொள்ஸ் விட்டுட்டு வூட்டுக்குவர வேண்டியதுதான். ( (வேணும்னா வீட்டுல சொல்லு வாங்கித்தரோம் .. என்ன வேணும்னு கேப்பாங்க.. ஆனா அந்த பள்ளிக்கூட ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி பந்தாவா வாங்கி தின்னுகிட்டே போற சந்தோஷம் கிடைக்குமா.. ஹூம்ம்ம்ம்.:))

 மன்னார்குடியை சேர்ந்த பாதிப்பேர் கணபதி விலாஸ்லயும் நேஷனல் ஹைஸ் ஸ்கூல்லயும்தான் படிச்சிருப்பாங்க. அங்கே ஷண்முகம் வாத்தியார்னு ஒருத்தர் மூணாப்பு எடுத்தார். நாலாவது க்ளாஸ் டீச்சர் பேர் மறந்துடுச்சு. ஆனா வகுப்பு லீடர் சிவசங்கர். கொட்டு வைச்சஆளை  மறக்க முடியாதுல்ல. ஹிஹி. ஆனா அஞ்சாவது க்ளாஸ் டீச்சர் பேரு. மீனாக்ஷி டீச்சர். அப்பதான் நாம் படிக்கணும்னு எல்லாம் ஒரு குறிக்கோள் வந்துச்சு. அது வரைக்கும்  ஏதோ பள்ளிக் கோடத்துக்கு அனுப்புறாங்களேன்னு போன நாம படிக்க ஆரம்பிச்சது அப்பத்தான். 4, 5 வது ராங்க் வாங்குவேன்.

அங்கேயும் ஒரு வில்லன் இருந்தான் வகுப்பு லீடர் ரூபத்துல. சந்தான ராமன்னு பேரு. சரியா ஒப்பிக்காட்டி பெஞ்ச் மேலே ஏறுன்னு சொல்லி நிக்க வைச்சிருவான். குர்ருன்னு பார்த்துகிட்டே மேலே ஏறி நின்னா. சாயங்காலம் வந்து என் சித்தப்பாகிட்ட என்ன உன் தங்கச்சி மொறைச்சி பார்க்குது. ஜாக்கிரதையா இருக்க சொல்லுன்னு மிரட்டல் வேற.. நாம எங்க முறைச்சு பார்த்தோம் . பயந்தபடிதானே பார்த்தோம்கிறது நமக்குத்தான் தெரியும்.

ஆறாப்பு ராமாமிர்தம் சார். ஏழாவது சட்டநாதன் சார், எட்டாவது இன்னொரு நாராயணன் சார். இதுல டீ பார்ட்டின்னு வருஷா வருஷம் கலெக்‌ஷன் செய்து வாத்தியார்களை கூப்பிட்டு பசங்க ஆட்டம் போடுவாங்க. பொண்ணுங்க சைலண்ட்தான். அடிக்கடி பென்சில் திருகி எழுதிகிட்டு இருந்ததுதான் ஞாபகம் வருது. அப்போவெல்லாம் ரேவதின்னு ஒரு பக்கத்து சீட் வில்லி.,” டீச்சர் இவ காப் வீட்டு காப் விட்டு எழுதுறான்னு போட்டுக் கொடுப்பா. பொதுவா நல்ல மதிப்பெண்களும்  எப்பவாவது 3, மத்தபடி 4, 5, 7 ந்னு ராங்க் வாங்கினதால டீச்சர்கள் ஒண்ணும் சொல்றதில்லை.வீட்டிலேயே எல்லாருக்கும் ட்யூஷன் வாத்தியார் வந்து சொல்லிக் கொடுக்கும்படி அப்பா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த வகுப்புல எல்லாம். கலைமகள்னு  இந்தியன் பாங்க் மேனேஜர் பொண்ணு என் கூட படிச்சா. என் அப்பாவும் வங்கியில் காசாளரா இருந்ததால நாங்க ரெண்டுபேரும்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ், இன்னும் வைஜெயந்தி மாலா, தாமரைச் செல்வின்னு தோழிங்களும் இருந்தாங்க.

ஒன்பதாம் வகுப்பு மன்னையின் செயிண்ட் ஜோசப் பள்ளியில். தூயவளனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி. அப்ப இந்த ஸ்கூல் இன்னும்  மேல் நிலைப் பள்ளி லெவலுக்கு வந்துருச்சு.  இதுலதான் என் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியையாக தங்கம் மிஸ்ஸும். பத்தாம் வகுப்பு ஆசிரியையாக மைதிலி மிஸ்ஸும் வந்தாங்க. கணக்குன்னா எனக்கு உயிரு. ஏன்னா எனக்கு வகுப்பு எடுத்த மைதிலி மிஸ் அவ்வளவு அழகா கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. குட்டை புஸ்கானா இருந்த நான் இந்தப் பள்ளிக்கூடம் வந்ததும் ஓல்லிக் குச்சியா உயரமா வளர ஆரம்பிச்சுட்டேன். நான் வளர்கிறேனே மம்மின்னு பாடாத குறைதான். ஒரு வேளை அம்மா கொடுத்த( பூஸ்ட் , ஓவல்டின், போர்ன்விட்டா, மைலோ, )காம்ப்ளானோ என்னவோ..:)

பத்தாவது படிக்கும்போதுதான் ஒரு பெண்ணுக்கு உண்டான குணங்கள் குடியேற ஆரம்பித்தன. அதுவரைக்கும் சரிக்குச் சரியாக ஆண் போல எண்ணிக் கொண்டிருந்த எண்ணங்களில் எல்லாம் மாற்றம். நேற்று இல்லாத மாற்றம் என்னதுன்னு பாடலை அவ்வளவுதான்..:)பள்ளிக்கூட ஆண்டுவிழாவுல  எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அப்பிடிங்கிற பாட்டுக்கு ஒரு டாக்டர் பொண்ணு அழகா டான்ஸ் ஆடினா. அந்த தேவதை பாட்டு ரொம்பப் பிடிச்சுது.

அங்கேயும் நாங்க மூணுபேர் ஃப்ரெண்ட்ஸ். அமுதா. ராணி. அமுதா ஒரு லாண்ட்லார்டு பொண்ணு. தஞ்சாவூர்ல வயல். எனவே பாட்டி வீட்டில் இருந்து ராமகிருஷ்ணா நகர்லேருந்து வந்து படிச்சா.  ராணி கொழும்பு ஸ்டோர்ஸ்காரர் பொண்ணு. எங்களுக்கு அஃஹன்னா ராணிகள்னு பேரு. எங்க இருந்தாலும் ஒண்ணா இருப்போம். ஒண்ணா உண்போம். ஒண்ணா படிப்போம். இன்னொருத்தி பேர் வச்சா முக்கூட்டு உடன்படிக்கை, முந்நாட்டு ஒப்பந்தம்னு..யார் என்ன கண்ணு வச்சாலும் பிரியாத நாங்க ப்ளஸ்டூவுல பிரிய நேர்ந்துச்சு. இதுக்கு நடுவுல என்னோட பத்தாவது படிச்சவ நளினி. பயங்கர பாசம். மன்னார்குடி ரெட்டைத்தெருவில இருந்து வருவா. எனக்கு அப்பவே ரொம்ப பாசத்தைக் கொட்டி கடிதம் எழுதுவா.நிறைய சினிமா பாடல்கள், வசனங்கள் எல்லாம் போட்டு ஒரு மாதிரி பாசக்கடல். நாம அவகிட்ட திரும்ப சரியா அன்பு காட்டலையோன்னு கூட எனக்கு ஒரு கில்டி ஃபீலிங்க் இன்னிக்கு வரைக்கும் உண்டு. தோழிகள் கை கோர்த்து உரையாடுவது போன்ற இன்பம் எங்காவது இருக்கா என்ன..?

ஆனா ஒண்ணு நாங்க டில்லியில் இருந்து சிதம்பரத்துக்கு மாற்றலாகி வந்து ட்ரெயினை விட்டு இறங்கி நிக்கிறோம். லக்கேஜ் எல்லாம் இறங்கிட்டு இருக்கு கிட்ட வந்து தேனம்மைன்னு கட்டிப் பிடிச்சுகிட்டவ  என் பசங்களப் பார்த்துக் கேட்டா என்னடி இவங்க உன் தம்பியான்னு.. டீ இவ்வளவு வருஷம் கழிச்சும் என் தம்பிங்க அப்பிடியேவா இருப்பாங்க.. இது என் பசங்கடி என்றேன்..:)

சந்த்ரோதயம்னு இன்னொரு தோழி. அவங்க அப்பா மன்னை மளிகைன்னு வச்சிருந்தார். அவளை அடுத்து சிதம்பரம் வந்தபின்னாடி சந்திச்சேன். ரோட்டில போயிக்கிட்டு இருக்கும்போது ஏய் நீ தேனம்மை தானேன்னு கையைப் பிடிச்சுகிட்டா. பத்தாவதுல தோள் மேல் கை போட்டு உலவிய நாங்கள் அதன் பின் பல முறை சந்திச்சோம்.. 

வயசுப்பிள்ளைகள் என்பதால் ஒரு மாட்டு வண்டியில்  ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அந்த வண்டியில் டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடைக்காரர் பொண்ணு லதாவும், நானும், என் அன்புத்தோழி சிராஜுன்னிசாவும் போவோம். ஒரே ரோட்டில மூணு பேர் வீடும் இருந்தது. சிராஜ் சிகப்பு பர்தா போட்டு வருவா. கண்ணுக்கு வலை மாதிரி ஓபன் இருக்கும். பத்தாவதோட நளினி, அமுதா, ராணி, சந்திரா, சிராஜ் ஆகியோர் படிப்பை நிறுத்திட்டதாலும் வேறு டிப்ளமா படிப்புல சேர்ந்ததாலும் சந்திக்க முடியலை.

ப்ளஸ்டூவில் ப்யூர் சயின்ஸ் க்ரூப்புக்கு மட்டும்தான் ஆங்கில மீடியம் கொடுத்தாங்க எங்க பள்ளிக்கூடத்துல. மத்ததெல்லாம் தமிழ் மீடியம்.  நேஷனல் ஹைஸ்கூலில் தான் கணிதம் ஆங்கில மீடியம் படிக்க முடியும். ஐயோ ஒரு ராமனுஜராகவோ, சகுந்தலா தேவியாவோ வரணும்னு நினைச்ச என் நெனைப்பில மண் விழுந்தது. அங்கே ப்யூர் சயின்ஸ் எடுத்து படிச்சேன். இங்கே எங்க க்ளாஸ் டீச்சர் இராஜராஜேஸ்வரி. பேருக்கு ஏத்தமாதிரி கம்பீரமானவங்க. இங்க்லீஷ் டீச்சர் பாரதி கண்ணம்மா. இந்தப் பேரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு  அப்போ வந்த பாரதி கண்ணம்மா பாட்டு ஞாபகம் வரும்.

டென்த் படிக்கும்போது  கிராஃபும், மேப்புமா அலைஞ்ச மாதிரி ப்ளஸ்டூ படிக்கும் போது டெய்லி ரெக்கார்டு நோட்டு வரைவேன். எனக்கு வரைய பிடிக்கும். அதுல பென்சில ஷார்ப்பா சீவிக்கிட்டு புள்ளி புள்ளியா வைச்சு செல்லோட பாகம் குறிக்கிறதும். விதம் விதமான ஃபாண்ட் ல அது பேரை எழுதுறதுமா இருப்போம் நானும் ஜெயலெக்ஷ்மியும்.

அங்கேயும் நான், அமுதா, சாந்தி. மூணு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ். அமுதா அப்பா திருச்சியில் கஸ்டம்ஸ் ஆஃபீசர், சாந்தி அப்பா ஏதோ பிஸினஸ் செய்துகிட்டு  இருந்தார். எங்களுக்கு தமிழுக்கு ஒரு மாஸ்டர் . அவர் பேரு அறம் வாழி.. மிக அழகான பேரு இல்ல.  என் நல்ல தமிழுக்கெல்லாம் இவரும் ஒரு காரணம்.

இன்னும் சில மாஸ்டர்சும் இருந்தாங்க. அடைக்கலம் மாஸ்டர் பிசிக்ஸ் எடுத்தார், பொலிட்டிகல் சயின்ஸ் போஸ் மாஸ்டரும், எகனாமிக்ஸ் செல்வராஜ் மாஸ்டரும் எடுத்தாங்க. மத்தவங்க எல்லாரும் டீச்சர்ஸ்தான். எப்பவாவது ஸ்கூல்ல திரைப்படம் போடுவாங்க. “ குழந்தையும் தெய்வமும்” நு ஒரு படம் பார்த்து பிழிய பிழிய அழுதேன் நான். அன்னைக்கு புடவையில் ( மலேசியாவில் இருந்து சபாபதி மாமா கொண்டுவந்த  ப்ரிக் ரெட் புடவை) போனதால அழுதத எல்லாம் பிழிந்து துடைக்க முடிந்தது..:) புதுசா முதல் முதல்ல புடவை கட்டினதால டீச்சர்ஸ் மற்றும் தோழிகளின் ஆச்சர்யப்பார்வைகளை முதன் முதலா சந்திச்சேன். நாம் கூட அழகா இருக்கமோன்னு சின்ன சந்தேகம் வந்திருச்சு..:))

என் பெரியம்மா மற்றும் அம்மா சில்வர் பாத்திரக் கடை வைச்சிருந்ததால (ஏவிஎம் மார்ட்னு பேரு) , வருடம் ஆரம்பிச்சா காலண்டர் டீச்சர்ஸுக்கு காலண்டர் கொடுக்குற வேலையை என்கிட்ட கொடுத்துடுவாங்க. அப்ப நான் எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியா என் ஃப்ரெண்ட் சாந்திகிட்ட கொடுத்தேன். அவளுக்கு கோவம். நம்மோட இருக்கவங்கதாண்டி முக்கியம். மத்தவங்களுக்கு அப்புறம் கொடுத்திருக்கலாம்ல என்றாள். என் கண்ணோட்டம் என்னவென்றால் அவள் என் தோழி . கடைசியில் பத்தாமல் போயிட்டா கூட வீட்டில் இருந்து மறுநாள் கொண்டு வந்து கொடுக்கலாம் என்பது. ஒன்னா இருந்தாலும் ஒவ்வொருவர் கண்ணோட்டமும் வேறுன்னு புரிஞ்சுகிட்டேன்.

வசந்தி. ராஜ ராஜேஸ்வரி, ப்ரேமலதா, ஷெண்பகம்,  ஆயிஷா,ஜெயலலிதா , மலர்விழி ன்னு நல்ல தோழிகள் அதிகம் அந்த வகுப்பில். ஆங்கில மீடியம் என்பதால் 16 பேர்தான் இருந்தோம். ஒரு நாள் ” ஒரு தலை ராகம்” படம் பார்த்துட்டு வந்து  அவ ஏண்டி அப்பிடி பண்ணான்னு வசந்தி, ஜெயலலிதா, எல்லாம் அழுதது மறக்க முடியாது.

எங்க பள்ளியில் எனக்கு பிடிச்ச அம்சம் என்னன்னா. அதுலயே வயல் குளம்னு ஒரு தன்னிறைவு பெற்ற கிராமம் போல இருக்கும். சோலை போல அழகு. இன்னும் என் பதின்பருவப்பள்ளிதான் கண்ணுக்குள்ள நிக்குது. சொல்ல முடிந்ததும் சொல்ல முடியாததும், உணர முடிந்ததுமான பதின்பருவம் யாருக்குமே மறக்க முடியாத பருவம்தானே. 

என்ன படிச்சதை எல்லாம் எழுதாம நடந்த நிகழ்ச்சிகளையே எழுதி இருக்கேன்னு பார்க்கிறீங்களா. நாம் என்ன படிச்சும் என்ன ஐ நா சபைக்கா போயிட்டம். ஏதோ பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோம். ப்லாக் எழுதுறோம். இதுதாங்க அதோட பலன்.. சரி சரி ஒரு ப்லாகரா என்னைப் பள்ளி நினைவுகள் எழுத கூப்பிட்ட ராஜு பாண்டியன் என்ற நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி..!!!

திங்கள், 16 ஏப்ரல், 2012

கோமாளி ராஜாக்கள்.

கோமாளி ராஜாக்கள்..
**********************
ராஜாக்களாய்க்
கற்பிக்கப்பட்டவர்கள்
ராணிகளாய்த் தெரியும்
சேடிகளின் கைப்பிடித்து.,
ரகசியக்காமத்துள்
சுற்றி வந்து..

பட்டத்து ராணீக்கள்
அடகு நகை மீட்கவோ.,
அலுவலகத்துக்கோ
அழும் பிள்ளைக்கு
பால் வாங்கவோ
சென்றிருக்கலாம்..

தன் அந்தப்புரத்து
ராணிகளைக்
கவனிக்க ஏலாமல்
யார் யாரின்
அந்தப்புரத்துள்ளோ
அத்துமீறி நுழைந்து

ஆக்கிரமிக்கும் ராஜாக்கள்.
சிரச்சேதம் செய்யப்படலாம்..
சேதமுற்றே திரிவோர்க்கு
சிரச்சேதம் பெரிதா என்ன..
ராஜாக்கள் கூஜாக்களாய்
பின் கோமாளிகளாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை  மே 29,2011 திண்ணையில் வெளியானது.

வியாழன், 12 ஏப்ரல், 2012

மூலக்கூறுக் கோளாறுகள்.

மூலக்கூறுக் கோளாறுகள்..:-
*******************************
ஒன்றறியாமலே
ஒன்றின் கால்
ஒன்றறியும்..

எண்டோசல்பான் கலந்த
கார்பன் ஹைட்ரஜன்
மூலக்கூறுக் கோளாறில்

விசையுற்றுப் பறக்கும்
ஃபோட்டான்கள் மிதக்க
உள்நுழைந்த
கார்னியா கிரணம் பீடிக்க

எண்டார்ஃபின்கள்
தடை பிறழ்ந்த
உற்பத்தி..

டெசிபல்களும் பிக்சல்களும்
மாயக்கண்ணாடிப் பிம்பம்
விளைத்த க்ளோனிங்குகள்..

சடை விழுது பின்னிய
சாரையும் சர்ப்பமும்..
காலற்ற பைசாசங்கள்
சுற்றிய நஞ்சுக் கொடி..
 
டிஸ்கி:- இந்தக் கவிதை மே 22, 2011 ஞாயிறு திண்ணையில் வந்துள்ளது.

புதன், 11 ஏப்ரல், 2012

என்ன வாசிப்பது.

என்ன வாசிப்பது..
********************
 கண்களின் வழியோ
கண்ணாடி வழியோ
பிரதிபலிக்கிறது
நீ வாசிப்பது....
எழுத்துக்களோ., கோப்புக்களோ.,
அங்கங்களோ., ஆராய்ச்சியோ..

காக்கைக்கால் கோடுகள்
உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்.,
நெற்றிச் சுருக்கங்கள்
பொருளாதார வரைபடங்களையும்
கன்னக் குழிவுகள்
ஒரு கிளர்த்தும் காமத்தையும்
இதழின் இறுக்கங்கள்
உள்பூக்கும் பிடிவாதத்தையும்...

 என்னவென்று அறியாத
இன்பமாய் இருக்கிறது.
எதிர்வினைகள்
ஏதும் அற்று
எதிரே அமர்ந்து
என்ன வாசிக்கிறாய்
என்பதறியாமல்
உன்னை வாசிப்பது..

டிஸ்கி:- இந்தக் கவிதை மே 15,2011 ஞாயிறு திண்ணையில் வெளிவந்தது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

களங்கமில்லாமல்..

மனம் ஒவ்வொரு
உருவமாக உன்னை
வனைந்து பார்க்கிறது..
நீ பிரதிபிம்பங்களுக்குள்
அடங்காமல் மஹிமா
லகிமா அணிமாவாய்
எங்கேயோ அமர்ந்து
என்னை நானறியாமல்
பார்ப்பாயோவென்ற
எதிர்பார்ப்போடு
கழிகிறது நொடிகள்..
எப்போதாவது
நீயறியாமல்
உன்னை அறிய நேர்ந்தால்
அன்று தெப்பம்தான்
திருநாள்தான்
தேரோட்டம்தான்
எங்கே கண்டுபிடித்தாய்
என்னை..?
ஏன் இன்னும்
கண்ணாமூச்சியில்..?
என்னைத் தொலைக்காமல்
களங்கமில்லாமல்
உன்னைக் கண்டுபிடிப்பேனோ
என்ற கவலையிலும்
ஆர்வத்திலும் நான்..

 டிஸ்கி:- இந்தக் கவிதை மே 8, 2011 ஞாயிறு திண்ணையில் வெளிவந்தது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிவப்புப் பட்டுக் கயிறு. ( தினமணி-காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

சிவப்புப் பட்டுக் கயிறு:-
*************************

 பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போகவேண்டாம்.அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

 வெய்யில் நாளில் வரும் மழை குளுமையை மட்டுமல்ல., கொஞ்சம் வெக்கையையும்தான் கிளப்பிக் கொண்டு வருகிறது. ஐயா பட்டாலையில் குறிச்சியில் உக்கார்ந்து சுருட்டைப் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ பீடி ., சிகரெட் குடிக்கும் போதெல்லாம் வரும் கோபம் ஐயாவின் சுருட்டைப் பார்த்தால் வருவதில்லை. பிறந்ததில் இருந்து அவர்களை சுருட்டும் கையுமாகப் பார்த்துவிட்டதாலோ என்னவோ. அல்லது சிறுபிள்ளையில் படித்த வெளிநாட்டுக் காமிக்ஸ் கதைகளில் வரும் பணக்கார ஹீரோக்கள் -- ரிப்கெர்பி-- ஸ்டைலாக சுருட்டு பிடிப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

காஃபி போடவேண்டும். இந்த மழைக்காலத்தில்தான் காஃபி., டீ எல்லாம் அவ்வளவு ருசிக்கும். கருப்பட்டிக் காப்பி., சுக்குக் காப்பியும் கூட. திருமணம் ஆகியும் கூட ஆத்தா வீட்டின் ருசி என்பது எவ்வளவு பிடித்தமானதாய் இருக்கிறது. திருமணம் ஆகி சென்றபின் சென்ற அந்த வீட்டின் எல்லாவற்றோடும் பிடித்தமானதை விட வீடுதான் முதலில் ஒட்டும் இடமாக இருக்கிறது. தாய் வீடு என்பது சொந்த சுவாசம் போலவும். மாமியார் வீடு என்பது கொஞ்ச காலத்துக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரில் சுவாசிப்பது போலும் இருக்கிறது. வீட்டின் கதவுகள்., ரூம்கள்., அலமாரிகள்., பொருட்களுடனான பரிச்சயம் அதிகமான பின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது

நெல் பயிரை இரண்டு முறை நடவு செய்வது போல். ஒரு இடத்திலிருந்து மறு நடவு செய்தபின்தான் அது செழிக்குமென்றால் அதுதானே செய்ய வேண்டும். என்ன சொன்னாலும் வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது மண்ணுக்கும் பயிருக்கும்.

மாசமான பின் பேறுக்காக ஆத்தா வீடு வந்த பின் அந்த வீடு பழக்கப்பட்டதாய் இருந்தாலும் லேசாக அந்நியமான ஒரு உணர்வு இருந்தது. வீடு ஜகஜ்ஜோதியாக இருந்தாலும் தன் வீடு அது இல்லை என படிந்து விட்டது. காஃபியை டிக்காக்‌ஷன் விட்டு நுரை பொங்க ஆற்றியபடி ஐயா அருகே அமர்ந்தாள் அவள். இருவரும் மழையையும் காஃபியையும் ருசித்தபடி இருந்தார்கள். மழை சொட்டுச் சொட்டாய் வடியத்துவங்கியது. இந்தப் பட்டாலையில் இந்தப் பத்தி., வளவுகளில்தானே கல்லா மண்ணா விளையாடியது. இந்த ஆல்வீட்டில்தானே ஐஸ்பால் டப்பா விளையாடியது. திடீரென்று தான் பெரிய பெண்ணாக ஆகியதும் விருந்து விஷேஷமும்., கல்யாணமும் ஆகி வயிற்றில் குழந்தையும் ஆகிவிட்டது. குழந்தை லேசாக முண்டியது. வயிறே அசைவது போல த்ரில்லிங்காக இருந்தது. குட்டிக் கையாலோ., காலாலோ வயிற்றில் சுரண்டியது. லேசான புன்சிரிப்போடு வயிற்றைப் பிடித்தபடி ஐயாவைப் பார்த்தாள். ஐயாவும் ., ”என்னாத்தா பேரப்பய முண்டுறானா”., என சிரித்தார்கள் சிரிப்பு என்பதை ஐயாவின் கண்கள் வழிதான் பார்க்கவேண்டும். அந்தக்கால பாலிவுட் நடிகர்களைப் போல மிக கம்பீரமான பர்சனாலிட்டியும் ஆகிருதியுமாக இருப்பார்கள் ஐயா. கருணை பொங்கும் கண்கள் வழி காந்தம் வழிவது போல ஈர்க்கும் சிரிப்பு.இத்தனையையும் ரசிக்கக் கொடுத்து வைக்காமல் இரண்டு அப்பதாக்களும் போய் வி்ட்டார்கள்., ரெண்டு சின்னச் சித்தப்பாக்களை விட்டுவிட்டு.

தம்பிகளும் சித்தப்பாக்களும் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவும் அம்மாவும் வெளியே சென்றவர்கள் திரும்பி இருந்தார்கள். ரெண்டாங்கட்டில் சலசலப்பு கேட்டது. யாரென்று பேர் தெரியாத ஒருவர் ஐயாவைப் பார்க்க வந்திருந்தார். அவரை வரவேற்றுவிட்டு எழுந்து உள்ளே காஃபி கலக்கச் சென்றபோது வந்தவர் ஐயாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பச்சி உங்க நடு மகனுக்கு சுவீகார ஜாதகம். அவுகளுக்குப் பொருந்திப் போகுதாம். ஆத்தா இல்லை அங்கேயும் அப்பச்சி மட்டும்தான். நம்மளப் பிள்ள வரப்போகப் பார்க்க முடியும். என்ன சொல்றீக என்றார்.

யார் யார் வீட்டிலோ சுவீகாரம் என கேள்விப்படும் போதெல்லாம் அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. தன் வீட்டிலேயே அதற்கான பேச்சு வந்தபோது கவலையாய் இருந்தது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனால் மாமியார் வீடு போகணும். பையன்கள் என்றால் ஜாலி . பிறந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைத்திருந்தாள்.

டுப்படியில் மழையால் ஈரம் கசிந்து கொண்டிருந்தது சுவர்களில். மரப்ப்ளாச்சுகள் லேசாய் பூசரம் பூத்திருந்தன. வீடு ரிப்பேர் பார்க்கமுடியாலும் பராமரிக்க முடியாமலும் வெளியூரில் வேலைக்காக வலசை சென்ற சிலர் வீடுகளையும் மேங்கோப்புக்களையும் இடித்து கலைப்பொருட்களை விற்கும் போதும் அவஸ்தையாய் இருக்கும். அவர்கள் பொருளாதாரத் தேவை அது. வீடு இடித்தபின் இடத்தையும் விற்று விடுவார்கள் பல அறைகள் கொண்டதாக இருக்கும் வீடுகளில் மிஞ்சிப் போகும் சாவிகளை என்ன செய்வார்கள். போகும் ஊரிலெல்லாம் அதையும் கொண்டு செல்வார்களா. எங்கே வைப்பார்கள். அவர்கள் சந்ததியினரிடம் வாழ்ந்த வாழ்வின் பெருமையை காண்பிக்கவா. எடைக்காவது எடுப்பார்களா அந்தச் சாவிகளையும்., பழைய இரும்புப்பெட்டகங்களையும்.

முன்னோர்கள் வெளிநாட்டுக்குக் கொண்டுவிக்கப் போய் சம்பாதித்துக் கொண்டுவந்து தேக்கும் பித்தளையும் காரையுமாய்க் கட்டிய கல்லுக் கட்டிடங்கள் அவை. அவற்றின் வாழ்நாள் என்பது அவ்வளவுதானோ என்னவோ.

காஃபி கொண்டுவந்து கொடுத்தபோது அந்த சுவீகார இடம் முடிவானது போலத் தோன்றியது. லீவுக்கு பிள்ளைகள் வரும்போது முடித்துக் கொள்ளலாம் என பேசிக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களே விடுமுறைக்கு இருந்தன. அவ்வளவுதானா எல்லாம். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அனுப்புவது போல ஒரு பிள்ளையை அனுப்பிவிட முடியுமா. வயிற்றில் ஏதோ கனமானது போல இருந்தது. வீடு என்பது எல்லாருக்கும் நிலையற்றதுதானா..

ஐயா முகத்தை பார்க்கவே முடியவில்லை. ஏதோ இது நம் கடமை. ஜாதகத்தில் அப்படி இருப்பதால் சுவீகாரம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிந்தது. ஐயா முகத்தில் இருந்த துயரம் எல்லாம் அவள் முகத்துக்கு இடம் மாறியது. குறிச்சியில் ஐயாவின் பக்கம் அமர்ந்தபோது . சூழ்நிலை இறுக்கமாய் இருந்தது. அதை மாற்ற விரும்பிய ஐயா தலையை கோதி விடத் துவங்கினார்கள். எத்தனை இரவுகள் எல்லாரும் ஐயா என் தலையை கோதுங்க என்று சொல்லி மடியில் படுத்துக் கிடப்போம். கண்களில் துளிர்த்த நீரை ஐயா பார்க்காமல் கண்ணுக்குள்ளேயே சிமிட்டி சிமிட்டி அடக்கினாள்.

பிள்ளைகளுக்கென்று தனியான எண்ணங்கள் இருக்க முடியுமா என்ன. பெற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். அனைவரும் சூழ்நிலைக்கைதிகள்தான்.அப்பா., அத்தைகளின் .சுப்புடி., திருவாதிரைப் புதுமைகள் செய்த ஃபோட்டோக்கள் வரிசையாக சாமி வீட்டு நிலையில் சாய்வாக மாட்டி இருந்தன. அதில் ஒரு ஃபோட்டோவாகத் தன் திருமணமும் இடம்பெற்றது போல தன் சித்தப்பாவின் சுவீகாரமும் இடம் பெறும் என நினைத்தாள்.

குறிக்கப்பட்ட நாளும் வந்தது. அதற்கு முன்பே அவர்கள் பிள்ளைக்கு உடைகளும்., பொருட்களும் ., சாமான்களும் கொண்டு சேர்த்திருந்தார்கள். இங்கு இத்தனை பேரோடு இருந்துவிட்டு அங்கு சென்று தனியாக இருக்கவேண்டுமே என இருந்தது. சித்தப்பாக்களும் தம்பிகளும் சிட்டுக் குருவிகளைப் போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். போஜன் ஹாலில் பலகாரப்பந்தி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

பி்ள்ளையின் பிறந்த இடத்துத் தாய்மாமன் பிள்ளையின் கையைப்பிடித்து பிள்ளை கூட்டிக் கொள்பரின் தாய் மாமன் கையில் கொடுப்பதோடு முடிந்து விடும் சுவீகாரம் என அடுத்த வளவுக்கார ஆயா சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

டுவீட்டில் கோலமிட்டு., பத்தி வளவிலும் கோலமிடப்பட்டிருந்தது. தடுக்கில் நிற்க வைத்தார்கள் சித்தப்பாவை. அதற்கு முன்பே முறி எழுதிக் கொண்டு விட்டார்கள் இன்னார் மகனை இன்னாருக்கு சுவீகார புத்திரனாகக் தத்துக் கொடுப்பதென. கெஜட்டில் பெயர் மாற்றம்., தாய் தந்தை பெயர் மாற்றம் எல்லாம் அனுப்பக் குறிக்கப்பட்டது. பெண்ணுக்குக் கல்யாணம் என்றால் அது ஒரு வீட்டுக்கு மருமகளாக அனுப்பும் சடங்கு மட்டுமே. ஆனால் அதுவரை புழங்கிய பெயரில் ஆணுக்கு அதிகாரமில்லாமல் போவது சுவீகாரத்தில்தான்.

ஒரு புதுப்பெயரில் தன்னை யாராவது அழைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியது அவளுக்கு. புது உடைகளோடும்., தலையில் தலைப்பாவோடும் சித்தப்பா நின்றிருந்தது. சாமி வீட்டில் விளக்கில் போதுமான எண்ணெய் இருக்கா என பார்த்து ஊத்திக் கொண்டிருந்தார்கள். இரு பக்கமும் தாய் மாமன்கள் இல்லாததால் அதை ஒட்டிய உறவில் உள்ளவர்கள் சித்தப்பாவின் கையைப் பிடிக்கவும் வாங்கவும் தயாராய் இருந்தார்கள். விபூதித் தட்டுடன் சித்தப்பா நின்றிருந்தது. திருமண வீட்டில் தான் போய் வருகிறேன் என சொல்லி அனைவரிடமும் கும்பிட்டுக் கட்டிக் கொண்டது ஞாபகம் வந்தது.

சித்தப்பாவிடம் ஒருவர் ஏதோ சொல்லி பேனாக்கத்தியைக் கொடுக்க அது இடுப்பில் கைவைத்து பாண்டை நகர்த்தி பட்டுக் கயிற்றைப் பிடித்துக் கத்தியால் அறுத்தது. அதற்கு அறுக்க வரவில்லை. கை வலிமை இழந்தது போல தவித்தது. பிறகு கோணல் மாணலாக இழுத்து அறுத்தது. அதன் பின் அதை விபூதித் தட்டில் வைத்து விட்டு போறேன் அப்பச்சி என ஐயாவிடம் சொன்னது. எப்போதும் புன்னகை கோடிழுக்கும் கண்களோடு சிரிக்கும் ஐயா அன்று வெடித்து தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள் .,போறேன்கிறானே.. ஆத்தா.. என..சுவற்றில் தலையை முட்டியபடியும். சித்தப்பாவும். அழுதது. .ஐயா அழுதால் தன்னையறியாமல் எல்லார் கண்ணிலும் நீர் வடிகிறதே. இதுதான் தன் தசையாடுவதா.

வயிறு வாய்க்கு வந்தது போல இருந்தது. இறுகி உருண்டு முறுக்கியது வயிறு. பிள்ளையை வயிற்றோடு பிடித்து கொள்ளவேண்டும் போல இருந்தது. தாளமுடியாத துக்கம் தொண்டையிலும் நெஞ்சிலும் பந்தைப் போல அடைத்துக் கொண்டிருந்தது. எல்லாருமே கதறி அழுது கொண்டிருந்தார்கள். ஒரு பெரும்பிரிவு அது. பின்னால் இங்கு வரப்போக முடியும் என்றாலும் அன்றைய கணக்குப்படி அந்த வீட்டோடான வாழ்வு முடிந்து விட்டது. இனி அது வேறொரு வீட்டுப் பிள்ளை. கண்ணீராய்க் கொட்டியபடி இருந்தது வீடு.

ல்லாரும் பிள்ளை கூட்டிக் கொண்ட வீட்டுக்கு கொண்டுவிடச் சென்றிருந்தார்கள் . அது இனி சித்தப்பா வீடு. இந்த வீட்டில் அதுக்கு இனி எந்த உரிமையும் இல்லை. ஒரு செடியை வேரோடு பிடுங்கி நட்டது போல நட்டுவிட்டாச்சு. இனி அது பாடு அந்த நிலம் பாடு. என்ன ஒரு நடைமுறை இது. பிள்ளை இல்லாதவர்க்குப் பிள்ளையாக., அவர்கள் பிள்ளைக் கலி தீர்க்கத்தான் சென்றிருக்கிறது சித்தப்பா என ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

இனி அதுக்கு திருமணம் ., பிள்ளை குட்டி., வாழ்க்கை எல்லாம் அங்கேதான். எப்பவாவது தோன்றினால் என் சித்தப்பா எனச் சென்று பார்க்கலாம். வேறொரு சூழலில் வேறொரு வாழ்வில்.

பட்டுக் கயிறு அறுப்பது என்பது தொப்புள்கொடி அறுப்பதற்குச் சமம். இந்தவீட்டில் உன் உறவு முடிந்து விட்டது இனி இன்னொரு ஜென்மம் உனக்கு. இன்னொரு பெயர் உனக்கு. என பிரிப்பது போல.

மாசமான பெண் பிரசுபத்துக்கு வந்தபின் ஊர் விட்டு ஊர் போகக் கூடாது என வீட்டில் ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்து விட்டு அனைவரும் சென்று விட்டார்கள்.

ஆட்டுக்கல்லில் அந்தப் பெண் இரவு உணவுக்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். எல்லாரும் சென்றபின் வாசக் கதவு ., நிலைக்கதவுசாத்தி ., சாமி வீட்டின் விளக்கை மலையேத்தியபின் பூட்டும் போது சித்தப்பாவின் நினைவின் மிச்சமாக அறுத்த அந்த சிவப்பு பட்டுக் கயிறு விபூதித் தாம்பாளத்தில் இருந்தது.

டிஸ்கி:- இந்தச் சிறுகதை தினமணி - காரைக்குடி புத்தகத்திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்றது. நன்றி தினமணி மற்றும் காரைக்குடி புத்தகத்திருவிழா.:)

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

முணுமுணுப்பு..வேடியப்பனின் நூல் எனது பார்வையில் ( திண்ணையில்)

சிறுகதைகள் என்பது சட்டென்று படித்துவிட முடிவதால் எப்போதும் என் ஈர்ப்புக்கு உரியதாய் இருக்கிறது. ஒரு சில பக்கங்களில் நம்மை அந்த நிகழ்வெளிக்கு செலுத்துவது என்பது சிலரால்தான் கைகூடும். மண்ணின் மணம் வீசும் இக்கதைகளில் பனி படிந்த வயல் மண்ணை வெள்ளெலி தள்ளிய வெதவெதப்பையும் ஊரில் வீசும் சாரல் தழுவிய ஈரக்காற்றையும் உணர முடிகிறது. கண்மணி குணசேகரன் முன்னுரை அளித்திருக்கிறார். பாவை பப்ளிக்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்நூலின் விலை . 45 ரூபாய்.

எழுத்தாளர் கயிலை மு. வேடியப்பன் என்றதும் கயிலைக்கு சென்று வந்த ஞானியோவென என நினைத்தால் அவர் முப்பதுகளில் உள்ள கயிலாயபுரம் (தர்மபுரி மாவட்டம்) என்ற ஊரைச் சேர்ந்த டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பன். புத்தகங்கள் மீதும் எழுத்தின் மீதும்., மண்ணின் மீதும் ததும்பி ஊறிய காதலோடு வடித்து வைத்திருக்கும் இக்கதைகள் மிக அற்புதம். சினிமா தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதால் ஒன்றை சித்தரிப்பது என்பது அருமையாக கைவரப் பெற்றிருக்கிறது.

மொத்தம் பத்தே கதைகள்தான்.. பத்தும் கிராமம் தழுவிய கதைகளாய் இருந்தாலும்., பெண் வாழ்வியலை அதிகம் பேசுகின்றன. விதைப்பதற்கான விதையை விவசாயிகள் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கூட பறித்துவிடும் நோக்கத்தில் ., தங்களது ஜீன் மாற்றப்பட்ட பி டி ரக விதைகளைப் பரப்பி உலக உணவு உற்பத்தியையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அனைவரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கும் முடிவோடு உள்ள ஏகாதிபத்தியம் போலத்தான் இலக்கியம் என்பது இன்றைய வாழ்வியலின் நடப்பு முறையைப் பேசாமல் ஹைக்கூ., சிம்பாலிசம் ., போஸ்ட் மார்டனிசம் என பேசுவது என ஒரே விளாசல் விளாசி இருக்கிறார் வேடியப்பன் தன் முன்னுரையில்.

சின்னவனும் பெரியவனும் சித்தரிக்கப்பட்ட விதம் செல்லப்பிராணி வளர்க்க விரும்பாத நானே வளர்க்க ஆசைப்படும் படி இருந்தது . தும்பி பிடிப்பதும்., ஓணான் பிடிப்பதும் ., உடும்பு, கீரி வேட்டையாடுவதும் கிராமத்து ஆனந்தம். ஆனால் இறப்பிற்குப் பின் அம்மா அழுதுகொண்டே இருப்பதுதான் நினைவில் இருக்கிறது.

தீப்பாஞ்சாள் நகரத்துக்காரிதான் ஆனால் பிச்சைக்காரி. உடல் உழைப்பினால் நிமிரும் காட்சி நெகிழ்வு. இப்படி வழிகாட்டப்படாமல் சேற்றிலேயே புதைந்து போவோர் ஆயிரம். இரண்டு கைகள் இருக்கும் போது உழைத்து தன்மானத்தோடு பிழைக்க வழி கூறியது அருமை.

தப்பிப்பு யார் யாரிடமிருந்து தப்பிக்க முடியும் என்பதைக் கூறியது. புருஷனோ., மனைவியோ., எத்தனை நாள் அல்லது வாரம் அல்லது வருஷம் பேசாமல் இருக்கமுடியும். ஒரு கட்டத்தில் மகள் விரும்பியவனை மணந்து கொள்ள வீட்டை விடு ஓடியதும்., அதற்கு மனைவி குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்தாலும் அந்த விடாப்பிடியான பிடிவாதத்தை விட முடியாமலும் சமரசம் செய்து கொள்ளத் தெரியாமலும் இருக்கும் அந்தக் கணவனும் அழகுதான். மனைவிக்கு சோறை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு தன் ஆதிக்கத்தை உணர்த்துவதும் கூட அவளுக்கு மகிழ்வைத் தருவது வினோதமான உணர்வு.

சினிமாவில் நடிக்க வந்த டீக்கடை அண்ணாச்சி கதைதான் எனக்கு மிகவும் பிடித்த கதை. எதேச்சையாக டீக்கடை அண்ணாச்சி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க., அதே காரணத்தால் கடை தேய்ந்து நஷ்டத்திற்கு விற்றுவிட்டு., அவர் ஆல்பத்தைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் சான்ஸ் கேட்பது தத்ரூபமான கோடம்பாக்கம் நிஜக்கதை.

சாராயம் காய்ச்சும் கட்டியக்காரன் கதை வித்யாசம். மாமூல் கொடுப்பதும்., சிலசமயம் கேஸ் கிடைக்காத போது கேன்களோடு உட்கார வைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டு பத்ரிக்கைகளில் வரும் மெலிந்த சாராயம் காய்ச்சி பிடிபட்ட ஆளாக கட்டியக்காரன் இருப்பது போல் ஒரு தோற்றம் விரிந்தது மனக்கண்ணில் ..

வயலில் ஏர் பூட்டி உழ விரும்பும் ஒரு சாதாரண விவசாயித்தாத்தாவின் கதை முணுமுணுப்பு. ஒவ்வொரு மழையின் போதும் அதிகப்படியாய் பெய்து வாழை மற்றும் வயல்களை நாசப்படுத்தும் மழை குறித்தான கவலை எனக்குண்டு. எளிமையாய் களியும் கீரையும் உண்டு உழைக்க அஞ்சாத அந்தத்தாத்தா மழை வந்ததும் ஏர் பூட்டி நாடகப் பாடல்கள் பாடியபடி உழுவது அழகு.

படிப்பு மிகவும் யோசிக்கவைத்த கதை. தன்னைப் போல தன் மகனும் வாத்தியாருக்கு சாப்பாடு கொண்டு செல்வதைப் பார்த்துப் பதைக்கும் சீனி ., பின் எடுக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. படிக்க வரும் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவது., தன் வீட்டுக்குச் சென்று சாப்பாடு கொண்டு வர சொல்வது., சில இடங்களில் தனியாய் ட்யூஷன் வேறு வகுப்பாசிரியரே நடத்தி தன் வகுப்பு மாணவர்க்கே ப்ரைவேட் க்ளாஸ் எடுப்பது என்பதெல்லாம் எனக்கு ஒவ்வாத விஷயம். இந்தக் கதையின் முடிவுக்கு பெரிய பூங்கொத்து.

கற்பென்றும் தீட்டென்றும் பெண்ணை மட்டும் ஒதுக்கி நெருப்புக் கம்பளத்தில் நடக்க வைப்பது மனித் சமூகத்தின் வழக்கம். கால் ஊனமான ஆறுமுகம் தன் தந்தையிடம் சொல்லி திருமணம் செய்துகொள்ள சமூகம் புறக்கணிக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது அவர் மன அழகைக் காட்டியது. இருந்தும் ஊரார் முன் ஒருவரால் அவமானம் ஏற்படும் அவளுக்கு பாதை நெருப்புக் கம்பளமாய் விரிந்து நீண்டு நடப்பது வருத்தம் தந்தது.

ஆண் பெண்ணை அன்பால் ஆக்கிரமிப்பது போல இங்கே ஒரு பெண் ஆணை ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ்தான் என எண்ண வைக்கிறாள். ஒரு கட்டத்தில் அவள் வாழ்கை இவன் வசமாக வரும்போது அவள் தன் கம்பீரம்., செருக்கு எல்லாம் இழந்து தன் பாட்டியை., மற்ற பெண்களைப் போலாவது ஒரு சின்னத் துயரமாகத்தான் இருக்கிறது பாட்டி முகத்தில்..

முட்டக்கண்ணனார் கதை கொஞ்சம் அதிர்ச்சி கலந்த கிராமத்து ரகசியம். கிடை போட்டிருக்கும் இடத்தில் இளம் ஆடு ஒன்று இறக்க அதை போட்டிக்காக ஒருவரே தின்று விட்டால் மற்றவர் மீசை எடுக்க வேண்டுமென்பது பந்தயம் . ”பாலும் பழமும் ஒரு வகைன்னா., சாரயமும் கறியும் இன்னொரு வகை. ” என்று குதூகலிக்கும் அவர்கள் அடுத்த வருட படையலில் நேர்ந்து கொண்டவர்கள் படையலிட்டு மீசையை எடுக்கலாம் என்பதை சொல்லும் போது. நிறைய வேண்டுதல்களை நான் இப்படியேதான் செய்து கொண்டிருக்கிறோமா என்ற ஐயமும் ஏற்பட்டது..

மொத்தத்தில் என்னை கிராம மண்ணில் உலாவச் செய்த கதைகள்.. யதார்த்தமும் வாழ்வியல் அழகும் அவலமும் பொருந்திய கதைகள். கண்மணி குணசேகரனின் வார்த்தைகளில் சொன்னால் “இன்னும் கூட உள்நுழைந்து வாழ்வியலின் நுனியறியாத முடிச்சுக்களைத் தேடி எழுத ஆயத்தப்படுத்திக் கொள்வதுதான் வேடியப்பன்., தன்னை ஒரு படைப்பாளியாக நீட்டித்துக் கொள்வதும் நிலைநிறுத்திக் கொள்வதும் ஆகும்.

டிஸ்கி : - இந்த விமர்சனம் சனி. ஏப்ரல் 30, 2011 திண்ணையில் வெளிவந்தது.